முகப்பு

இதழ்களிலிருந்து: இருளில் ஒளியாவோம், இருவரும் விழியாவோம்!

நன்றி ஆனந்தவிகடன் 
graphic - சந்தோஷத்தில் பூரிக்கும் ஷோபனாவின் கரங்களைப் பற்றியபடி பேசும் மகேந்திரன்...
 இருவர் மட்டுமே வசிக்கும் அந்த வீடு அன்பாலும் காதலாலும் நிறைந்திருக்கிறது. பார்வைத்திறன் இல்லாத மகேந்திரனும் ஷோபனாவும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் எல்லா வலிகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்டாலும், இன்று மதிக்கத்தக்க நிலைக்கு உயர்ந்துள்ளனர்.
மகேந்திரன் உதவிப் பேராசிரியராகவும், ஷோபனா அரசுப் பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றுகிறார்கள். இவர்களை இணைத்ததுடன், இவர்களின் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது காதல்!
பிறந்தபோதே பார்வைத்திறன் குறைபாடு இருந்துச்சு. அஞ்சாவது படிக்கிறப்போ சுத்தமா பார்வை தெரியலை. இனிமேல் குணப்படுத்த முடியாதுன்னு ஆஸ்பத்திரியில சொல்லிட்டாங்க. ஆறாவதுல இருந்து பூந்தமல்லி அரசுப் பார்வையற்றோர் ஸ்கூல்ல படிச்சேன். வகுப்புல முதல் மாணவனா வந்தேன். பத்தாவதுல நான் எடுத்த 454 மார்க், அந்த ஸ்கூல் வரலாற்றில் அதிக மார்க் ரெக்கார்டு. ஆனாலும், ஸ்கூல்ல கிடைச்ச ஊக்கம் வீட்டுல கிடைக்கவேயில்லை. வீட்டில் நான் மூத்த பையன். என்னோட குறைபாட்டைச் சுட்டிக்காட்டி என்னை வீட்டுலயே முடக்கிவெச்சாங்க. வெளியுலகத் தொடர்பால் கிடைக்க வேண்டிய மகிழ்ச்சி எதுவும் சின்ன வயசுல எனக்குக் கிடைக்கலை.
பி.ஏ (ஆங்கிலம்) சேர்ந்தபோது எனக்கு ஆங்கிலம் சரியா தெரியாது. சக மாணவர்கள் ஆவலோடு நாவல்கள் படிக்க ஆரம்பிச்சப்போ, நான் அடிப்படை கிராமர்ல இருந்து ஆங்கிலம் கத்துக்கிட்டேன். ரொம்பவே சிரமப்பட்டாலும், தனிப்பட்ட முயற்சியால் நல்லா படிச்சு கோல்டு மெடலுடன் படிப்பை முடிச்சேன். அடுத்தடுத்து எம்.ஏ, எம்.பில் முடிச்சுட்டு, பாண்டிச்சேரி யூனிவர்சிட்டியில பிஹெச்.டி ஆரம்பிச்சேன். அடிப்படைத் தேவைகளுக்குத் தவிர, படிப்பு, எக்ஸாம் உள்ளிட்ட எந்தத் தேவைக்கும் வீட்டில் பணம் கிடைக்கலை. ஸ்பான்ஸர் மூலமாகவே படிச்சேன். நல்ல டிரஸ்கூட இல்லாம தவிச்ச காலங்கள் அதிகம். நெட் தேர்விலும் தேர்வாகியிருந்தேன். எங்க காதல் கைகூடியதுடன் எனக்கு வேலையும் கிடைச்சுது” - வெட்கத்தில் மகேந்திரனின் முகம் சிவக்க, அதே உற்சாக உத்வேகத்துடன் தொடங்குகிறார் ஷோபனா.
 என் வீட்டில் தாத்தா, அப்பா, அக்காவுக்கும் பார்வைத்திறன் இல்லை. எனக்கும் பிறவியிலேயே பார்வைக் குறைபாடு இருந்துச்சு. எனக்கு விவரம் தெரியறதுக்குள்ளயே அம்மாவும் இறந்துட்டாங்க. மூணு வயசுல விளையாடிக்கிட்டிருந்தபோது கீழ விழுந்து என் நாக்கு ரெண்டா துண்டாகிடுச்சு. மூளைக்கும் தொண்டைக்கும் இடையேயான நரம்பு கட்டாகிடுச்சு. பார்வைத்திறன் அல்லது பேச்சுத்திறன்ல ஏதாவது ஒண்ணுதான் சரிசெய்ய முடியும்னு ஆஸ்பத்திரியில சொல்லியிருக்காங்க. பேச்சுத்திறனைச் சரிபடுத்திவிடுங்க!ன்னு கலக்கத்துடன் பாட்டி சொல்லியிருக்கார். ஆபரேஷன் செஞ்சு என் நாக்கை மீண்டும் பொருத்தினாங்க. நிறைய பயிற்சிக்குப் பிறகு பேச்சுத்திறனும் ஓரளவுக்குச் சரியாச்சு.
பார்வையற்றோர் ஸ்கூல்ல நல்லாப் படிச்சேன். டான்ஸ், ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்தினேன். பத்தாவது படிக்கிறப்போ கண் பிரச்னைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன். தவறான சிகிச்சையால் சுமாரா தெரிஞ்ச ஒரு கண் பார்வையும் பறிபோயிடுச்சு. ரொம்பவே சிரமப்பட்டேன். எத்திராஜ் காலேஜ்ல பி.ஏ (ஆங்கிலம்) சேர்ந்தேன். அந்த நேரத்துல இவரும் நானும் நண்பர்களானோம். மாற்றுத்திறனாளிகளுக்கான கம்ப்யூட்டர் கோர்ஸ் சென்னை ஐ.ஐ.டி-யில் நடக்க, அதில் நான் கலந்துகிட்டேன். இவர்தான் பயிற்சியாளர்! எங்க நட்பு காதலாச்சு. இவர் ஊக்கத்தால் பி.ஏ முடிச்சுட்டு, பி.எட் படிச்சேன். டெட் எக்ஸாம் எழுதித் தேர்வானாலும் டீச்சர் வேலை கிடைக்கிறதுக்குள்ள நிறைய சிரமங்களை எதிர்கொண்டேன்என்பவரை இடைமறிக்கும் மகேந்திரன், தங்களின் சுவாரஸ்யமான காதல் பரிமாற்றத் தருணத்தைப் புன்னகையுடன் கூறுகிறார்.
ஒருமுறை வடபழனி முருகன் கோயில்ல சாமி கும்பிட்டு வெளிய வந்தோம். கனமழை பெய்து வழிநெடுக முழங்கால் அளவுக்கு மழைநீர். இதமான காற்று வீச, நான் இவங்க கையைப் பிடிச்சுப் பேசிக்கிட்டே பஸ் ஸ்டாப்புக்கு நடந்து போயிட்டிருந்தோம். திடீர்னு என்னை அறியாம ஷோபனாகிட்ட புரபோஸ் செய்தேன். ஷோபனாவுக்கும் விருப்பம்தான். ஆனா, என் வீட்டுல எதிர்ப்பு வருமோன்னு பயந்தாங்க. மூணு மாதத்துக்குப் பிறகுதான் காதலை வெளிப்படுத்தினாங்க. ரெண்டு வீட்டுக்கும் தெரியாம மூணு வருஷம் காதலிச்சோம்.
எங்க வீட்டு எதிர்ப்பால் 2015-ல் நாங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். கொஞ்ச நாள்லயே வண்ணாரப்பேட்டை சர் தியாகராயர் கல்லூரியில ஆங்கிலப் பேராசிரியரா எனக்கு வேலை கிடைச்சுது. அடுத்து ஷோபனாவுக்குத் திருத்தணி ஸ்கூல்ல இடமாறுதல். அதுவும் ரொம்பவே தூரம்தான். பெரிய எதிர்ப்புக்குப் பிறகு என் வீட்டிலும் ஏத்துக்கிட்டாங்க. தடைப்பட்டிருந்த பிஹெச்.டி படிப்பையும் கல்யாணத்துக்குப் பிறகு முடிச்சேன்என்கிறார் மகேந்திரன்.

 முன்பு கோடம்பாக்கத்துல குடியிருந்தோம். காலையில் நாலு மணிக்கு சமையல் முடிச்சுட்டு, கோடம்பாக்கத்துல இருந்து லோக்கல் டிரெயின்ல 5.45 மணிக்கு ஏறியாகணும். பிறகு, சென்ட்ரலில் சப்தகிரி எக்ஸ்பிரஸ்ல ஏறினாதான், சரியான நேரத்துக்குள் திருத்தணியில இறங்கி ஸ்கூலுக்குப் போக முடியும். ஒரு நிமிடம் தாமதமானாலும் அன்னிக்கு வீட்டுலயே இருக்கவேண்டியதுதான். இப்படியே ரெண்டு வருஷம் ஓடினாலும், தினமும் என்னைக் கைபிடிச்சுக் கூட்டிட்டிப்போய் ரயில்ல ஏத்திவிடுற வரைக்கும் இவர் ரொம்பவே சிரமப்படுவார். நிறைய சவால்களுக்குப் பிறகு, சென்னை அம்பத்தூர் ஐயப்பாக்கம் மகளிர் உயர்நிலைப்பள்ளியில எனக்குப் பணிமாறுதல் கிடைச்சுது. கடந்த மூணு வருஷமா அங்க ஆங்கில ஆசிரியையா வேலை செய்றேன்.
என் எல்லா உணர்வுகளையும் நான் சொல்லாமலேயே இவர் புரிஞ்சுப்பார். என்னோட ஒரே நம்பிக்கை நீதான்னு அடிக்கடி சொல்வார். அதற்கு என் வாழ்நாள் முழுக்க உண்மையுடன் இருக்கவே ஆசைப்படுறேன். நல்லா கவிதை எழுதுவார். என்னை மையப்படுத்தித்தான் அதிகம் எழுதுவார். கல்யாணம் ஆனதிலிருந்து எனக்கான எல்லாத் தேவைகளையும் இவர் சம்பளத்துலதான் வாங்கிக்கொடுப்பார். எனக்குத் தெரியாம பணம் சேர்த்துவெச்சு திடீர்னு ஒருநாள் வாங்கிக்கொடுத்த நகைகள்தாம் இவையெல்லாம்...” - சந்தோஷத்தில் பூரிக்கும் ஷோபனாவின் கரங்களைப் பற்றியபடி பேசும் மகேந்திரன்...
எங்க ரெண்டு பேர் படிப்புக்கும் பலர் உதவிசெய்திருக்காங்க. அதேபோல இந்தச் சமுதாயத்துக்குக் கைம்மாறு செய்யவேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கு. 15 ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுகளை ஏத்துக்கிட்டோம்” - மாலைப்பொழுதின் இருளை மறைத்து வீட்டில் பரவசத்தையும் பிரகாசத்தையும் உண்டாக்கின, இவர்களின் நிறைவான ஒற்றைச் சிரிப்பு!
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment