படக்காப்புரிமை newzhook.com |
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி, ரிஷிகேஷிலுள்ள இந்திய அறிவியல் மருத்துவ நிறுவனத்தின் இயக்குநரான பேராசிரியர் திரு. ரவிகாந்த் அவர்கள், முன்யோசனையற்ற, மிகவும் பிற்போக்குத்தனமான, முற்றிலும் மனிதநேயத்திற்கு விரோதமான ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். அந்தச்சுற்றறிக்கையில், உடல் ஊனம் மற்றும் மனவளர்ச்சி குறைபாடு காரணமாக, தங்களின் பணிகளைச் சரிவர மேற்கொள்ளாத நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களுக்கு நடுவண் அரசின் குடிமைப்பணிகள் நடத்தை விதிகளின்படி, (CCS Rules) கட்டாய பணி ஓய்வு வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
மேற்கண்ட சுற்றறிக்கையினைத் திரும்பப்பெற வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடையும், (NPRD) மாற்றுத்திறனாளிகள் மருத்துவர் சங்கமும் இணைந்து, நடுவண் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினர்.
இதன் விளைவாக, அடுத்த 24 மணி நேரத்திற்குள் திரு. ரவிகாந்த் அவர்கள் தனது சுற்றறிக்கையில் விளக்கம் ஒன்றினைச் சேர்த்து வெளியிட்டார். அதாவது, உடல் ஊனமுற்றோருக்கான ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்த உடல் ஊனமுற்றோருக்கு ‘திவ்யங்’ இந்த சுற்றறிக்கை பொருந்தாது என்பதுதான் அது. அதாவது, முழு பயணக் கட்டணம் செலுத்தி பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள் ரயில்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டியில் ஏறக்கூடாது என இந்திய ரயில்வே சொல்வதுபோல.
இந்த திருத்தத்தினை வன்மையாகக் கண்டித்த மாற்றுத்திறனாளிகள் மருத்துவர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் சைலேந்திரசிங் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச்செயலாளர் திரு. முரலிதரன் விஷ்வநாதனும் இணைந்து, நடுவண் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஹர்ஷவர்த்தன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில், இந்தச் சுற்றறிக்கையானது, ஐநாவால் பிறப்பிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பிரகடனம் மற்றும் இந்திய நடுவண் அரசால் 2016ல் இயற்றப்பட்ட ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016, பிரிவு 20ஐ புறம்பானதும், அந்தச் சட்டத்தையே மீறுவதாகவும் உள்ளது. எனவே, எந்த ஒரு நிபந்தனையுமின்றி, இந்த சுற்றறிக்கை உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டும் என வலியுறுத்தினர். அதன்விளைவாக, தற்போது சுற்றறிக்கை திரும்பப்பெறப்பட்டுள்ளது.
உண்மையில் என்னதான் நடக்கிறது நாட்டில்? ஒரு பக்கம், இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழகம், கரோனா ஊரடங்கின்போது, மாற்றுத்திறனாளி அரசூழியர்கள் யாரும் பணிக்கு வரவேண்டாம் என தெளிவான சுற்றறிக்கையை விரைந்து வெளியிடுகிறது. மறுபக்கம், இந்தியாவின் முதன்மை வங்கியான எஸ்பிஐ, ஊரடங்கின் காரணமாகப் பணிக்கு வராத ஊனமுற்றோரின் ‘திவ்யங்’ பணிக்காலம், மருத்துவ விடுப்பாகக் கணக்கிடப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையினை வெளியிட்டு, பார்வையற்ற வங்கிப் பணியாளர் நலச்சங்கத்தின் (VIBEWA) கடுமையான எதிர்ப்புகளுக்குப் பின் திரும்்பப்பெறுகிறது. இந்திய மருத்துவம் மற்றும் அறிவியல் நிறுவனத்தின் இயக்குநரின் சுற்றறிக்கையோ, ‘திவ்யங்’ புனித உடல்கொண்டோரை ஏளனமாகக் கையாள்கிறது.
சட்டம் இயற்றுவது நடுவண் அரசு. அதனை அப்பட்டமாக மீறுவது அதே அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களின் உயர் பீடங்கள் என்றால், கோளாறு எங்கிருக்கிறது என்பதற்கு கோனார் உரையா வேண்டும்? பிரச்சனை கண்ணோட்டத்தில் இருக்கிறது.
அமலாக்கத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும், அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக் குரல்களை உரிமை சார்ந்தவையாகப் பார்க்கப் பழக்கப்பட்டிருக்கிறது மாநில அரசு. அதற்கு நேர் எதிராக, உடல் ஊனமுற்றோர் என்றாலே, கருணைக்கும் பரிதாபத்திற்கும் உரியவர்கள், அவர்களால் எதுவும் இயலாது. அவர்களுக்கு கருணை கூர்ந்து நாம் இடம் அளிக்க வேண்டும். அத்தகைய பெருந்தன்மையும், பெருங்கருணையுடனும் வழங்கப்பட்டிருப்பதுதான் ஊனமுற்றோருக்கான ‘திவ்யங்’ இட ஒதுக்கீடு. அனைத்து உடல் ஊனமுற்றோரும் அந்த இட ஒதுக்கீட்டின்படியே பணி பெற்றிருப்பார்கள் என்கிற உயர்வர்க்க அதிமேதாவி மனப்போக்கிலேயே ஆளப்படுகின்றன நடுவண் அரசும் அதன் கட்டுப்பாட்டு நிறுவனங்களும்.
‘திவ்யங்’ புனித உடல்கொண்டோர் என்பது கருணை என்கிற ஆன்மீகப் பார்வையின் கோஷம். ‘மாற்றுத்திறனாளி’ உரிமை என்கிற முற்போக்குப் பார்வையின் முழக்கம். கோஷங்களை முழக்கங்களாக மாற்றப் போராடுவோம். அதற்காக அறைந்திடுவோம் சவால்முறசு.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment