முகப்பு

கருணை வேண்டாம், கடமை போதும்

சவால்முரசு லோகோ
பார்வையற்றவர்களுக்கு ஏடிஎம் உட்பட வங்கியின் அனைத்து வசதிகளும் எந்தவித மறுப்புமின்றி வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், கடந்த 2008 ஆம் ஆண்டே, ரிசர்வ் பேங் ஆஃப் இந்தியா ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. ஆனாலும், பார்வையற்றவர்களுக்கு வங்கிகள் ஏடிஎம் தர மறுப்பதாக தினமும் புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.  சுற்றறிக்கை வெளியிடப்பட்டு ஒரு தசாப்தம் கடந்த பின்னும் இந்த நிலை தொடர்வது வெட்கப்பட வேண்டிய ஒன்று.

பல வங்கிகளில் வாடிக்கையாளருக்கும் வங்கி மேலாளருக்குமிடையே கடும் வாக்கு வாதங்கள் ஏற்படுவதும் கசப்பான வாடிக்கையாகிவிட்டது. இரு தரப்பிற்குமிடையே வார்த்தைகள் தடித்து, வாக்குவாதம் முற்றுவதால், பிற வாடிக்கையாளர்களின் முன்னிலையில் தாங்கள் அவமானப்படுத்தப்படுவதாக உணரும் பார்வையற்றவர்கள் ஒருவகை கொந்தளிப்பு மனநிலையை எட்டுவது இயல்பே. அதே நேரத்தில், இத்தகைய சூழலில், அதிகம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்துவிட்டு, வங்கிகள் குறைதீர்ப்பு மன்றத்திற்கு தங்களின் கோரிக்கையினை விளக்கியும், அதற்கு பலம் சேர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையினைச் சேர்த்து அனுப்பி வைப்பதே, உரிய மற்றும் அனைவருக்குமான நீண்டகாலத் தீர்வைப் பெற்றுத்தரும்.

வங்கி மேலாளர்களும் அவ்வப்போது தங்களின் தலைமையகங்கள் வெளியிடும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் குறித்த உரிய புரிதல் கொண்டிருப்பது அவசியமான ஒன்று. வெளியிடப்படும் சுற்றறிக்கையானது மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஒன்று என்பதை சுற்றறிக்கை அல்லது ஆணைகளின் முதல் இரண்டு வரிகளில் தெரிந்துகொண்ட மாத்திரத்திலேயே, அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியத்துடன் கடந்து செல்வதுதான் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

தனிமனித இடைவெளியைப் பேணும் நோக்கத்தோடு, பிற வாடிக்கையாளர்களை வங்கிக்கு வரவேண்டாம்என்றும், அதற்கு பதிலாக ஏடிஎம், இணைய வங்கி சேவையைப் பயன்படுத்த  வலியுறுத்தும் வங்கி நிர்வாகம், பார்வையற்றோரை மட்டும் வங்கிக்கு வந்துதான் பணம் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நியாயமற்ற செயல். எடுத்த எடுப்பிலேயே பார்வையற்றோரின் குறையைச் செவி மடுக்காமல் நிராகரிப்பதைத் தவிர்த்து, முதலில் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை முழுமையாகக் கேளுங்கள். மாற்றுத்திறனாளிகள் மீது கருணை பொழிய வேண்டாம், கடமையாற்றுங்கள் போதும்.

 * * *

சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடர:

சவால்முரசு முகநூல்

சவால்முரசு வலையொளி 

சவால்முரசு கீச்சகம் 

சவால்முரசு இன்ஸ்டாகிராம் 

வாட்ஸ் ஆப்: 9787673244

டெலகிராம்: 9994636936

உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆக்கங்களை savaalmurasu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

No comments:

Post a Comment