முகப்பு

Showing posts with label editorials. Show all posts
Showing posts with label editorials. Show all posts

தலையங்கம்: பொதுத்தேர்வு என்கிற பொம்மலாட்டம்:

graphic பிரெயில் எழுதும் மாணவர்கள்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகளைப் பொருத்தவரை, தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடங்கள் சிறப்புக் குழந்தைகளுக்கான பிரெயில், சைகைமொழி உள்ளிட்ட பிரத்யேக முறைகளோடு பொருத்திக் கற்பிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இடைநிலைக்கல்வியில், வழக்கமான பாடங்களில் பெறும் முன்னேற்றம் மட்டுமின்றி, அந்தப் பிரத்யேக முறைகளில் குழந்தைகள் பெறும் அடைவுகளைச் சோதிப்பது, அவற்றை குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கற்பிப்பது போன்றவை இன்றியமையாத கற்பித்தல் செயல்பாடுகளாகும். இத்தகைய பிரத்யேக முறைகளின் மூலம், அவர்களுக்குள் சிறப்பான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதே சிறப்புக் குழந்தைகளுக்கான தொடக்க மற்றும் இடைநிலைக்கல்விவரை கவனம் செலுத்தவேண்டிய இன்றியமையாத அம்சமாகும்.

பள்ளிக்கல்வித்துறையின் சமச்சீர் கல்வி பாடங்களை எவ்வாறு பார்வைத்திறன், செவித்திறன் மற்றும் கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கு அவர்கள் ஏற்கும் வகையில், மாற்றிக் கற்பிப்பது, பொதுப்பாடங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை இத்தகைய குழந்தைகள் அணுகும் (easy to access) வகையில் அவற்றை எவ்வாறு வடிவமைப்பது போன்ற ஆக்கபூர்வமான எந்த ஒரு திட்டமிடலோ, நடவடிக்கையோ அதற்கான முனைப்போ அரசிடம் இல்லை. பள்ளிக்கல்வித்துறை விதிகளே சிறப்புப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்ற அரசாணைக்கிணங்க, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி தொடர்பான நடவடிக்கைகளில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் இடையே இருக்க வேண்டிய ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் களத்தில் அறவே காணப்படவில்லை. பொதுத்தேவு அறிவிக்கப்பட்ட ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பயிலும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான பிரெயில் புத்தகங்கள் சிறப்புப் பள்ளிகளில் இதுவரை வழங்கப்படவில்லை என்பதே இதற்குச் சரியானசான்றாகும்.

graphic பதிலி எழுத்தர் உதவியுடன் தேர்வெழுதும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள்
 சிறப்புப் பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் நடத்தப்படும் பருவத்தேர்வு, திருப்புதல் தேர்வு என அனைத்தும் பதிலி எழுத்தர்களைக் (scribes) கொண்டே நடத்தப்படுகின்றன. ஆனால், பொதுத்தேர்வு என்ற பெயரில் இந்த பதிலி எழுத்தர் நடைமுறையைக் கற்றலில் சிறப்புத் தேவையைக் கோருகிற ஐந்தாம் வகுப்பு குழந்தைக்கு அறிமுகம் செய்வது, முற்றிலும் பொருத்தமற்ற அதன் குழந்தைமைக்கு எதிரான செயல். பதிலி எழுத்தரைத் தொடர்புகொள்ளல், அவரோடு உரையாடித் தனது தேர்வினை எதிர்கொள்ளுதல் போன்றவை,இத்தகைய குழந்தைகளுக்குக் கூடுதல் மன அழுத்தங்களையே உண்டாக்கும். மேலும், பதிலி எழுத்தர்களாக நியமிக்கப்படுபவர்கள், இத்தகைய குழந்தைகளைக் கையாள்வதில் எத்தகைய பயிற்சியும் அனுபவமும் பெற்றவர்கள் என்பதைமதிப்பிடுவதற்கு அரசிடமும் எந்தவிதத் திட்டமும் இல்லை.

கண்டுகொள்ளப்படாத இத்தனை குறைபாடுகளுக்கு இடையே, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் நடப்புக் கல்வியாண்டுமுதல் 5 & 8 வகுப்பு பயிலும் மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, அதற்கான நடைமுறை ஆயத்தப்பணிகள் சிறப்புப் பள்ளிகளிலும் நடந்துவருகின்றன. இதற்கான தங்களின் ஆட்சேபங்களை அரசுக்கு முறையாகத் தெரிவிக்கும் பொறுப்பும் கடமையும் கொண்ட சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களில் பெரும்பாலோர், சாவி கொடுத்தால் சுற்றும் பொம்மைகள் போல, பொதுத்தேர்வுச் சுமையைச் சிறப்புக் குழந்தைகளின் மேல் ஏற்றத் தொடங்கிவிட்டார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வியில் நாம் தொடங்கிய இடத்திலேயே தேங்கி நிற்கிறோம் என்பதைக்கூட உணராமல், அரசின் தும்மலையும் மொழிபெயர்ப்பதே ஆசிரியர்களின் தொழில்தர்மமாகிவிட்ட கொடுமையை எங்குபோய்ச் சொல்வது? மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை நலன் மற்றும் உரிமைகளைப் பேணப் போராடுகிற சங்கங்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்புகளிடமும்கூட எந்தவித எதிர்ப்புக் குரலற்ற பலத்த மௌனம் நிலவுகிறது.

இத்தகைய பொதுத்தேர்வுகளை நிராகரிப்பதன் வாயிலாக, பொது சமூகத்தோடான மாற்றுத்திறனாளிகளின் சம பங்கேற்பு குறித்து எழுப்பப்படும் அச்சம் கலந்த வினாக்களுக்கு விடை ஒன்றுதான், சம வாய்ப்பைத் தந்துவிட்டு, சம பங்கேற்பைக் கோருங்கள். அதுவரை வேண்டாம், ஐந்தாம் வகுப்புக்கெல்லாம் பொதுத்தேர்வு என்கிற பொம்மலாட்டம்.
 

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

தலையங்கம்: புதிய வருமானவரித் திட்டமும் புகுத்தப்பட்ட அநீதியும்:

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
graphic மனிதர்கள் பணம் எண்ணும் புகைப்படம்
படம் காப்புரிமை getty images

நேற்று (பிப்ரவரி 1) நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் 2020-2021ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. அந்த அறிவிப்பில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ. 9500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தனியாள் வருமானவரி தொடர்பாகப் புதிய வருமானவரித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 500000 வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமானவரியிலிருந்து வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அதேசமயம், பழைய வருமானவரித்திட்டத்தில் வரிவிலக்கு வழங்கப்பட்டிருந்த அம்சங்களில் 70க்கும் மேற்பட்டவை நீக்கப்பட்டுள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

புதிய வருமானவரித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் நிலையான கழிவு (standard deduction), வீட்டுக்கடனுக்கான வட்டியைக் கழித்தல் போன்றவற்றோடு, பிரிவு 80DD மூலம் கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ செலவுகள் மற்றும் பிரிவு 80G மூலம் தொண்டுநிறுவனங்களுக்கு நன்கொடை தருவதால் பெறப்படும் வரிச்சலுகைகளை பெற இயலாது. அரசின் இத்தகைய நடவடிக்கைகள், மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்து மிகப்பெரிய பாதிப்புகளை எற்படுத்தக்கூடியவை என்பதால், இவை புதிய திட்டம் என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு எதிராகப் புகுத்தப்பட்டிருக்கிற அநீதியாகப் பார்க்கப்படுகிறது. எனினும் இந்தப் புதிய வரிவிதிப்பு என்பது ஒரு தெரிவாக மட்டுமே இருப்பதால், “இப்போதைக்குத் தப்பித்தோம்” என்ற உணர்வை பொதுமக்களிடமும் மாற்றுத்திறனாளிகளிடமும் ஏற்படுத்தியுள்ளது.