முகப்பு

வெளியானது பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணிமூப்புப் பட்டியல்


தமிழக அரசின் சார்பில் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான 20 சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான முறையான பணிமூப்புப் பட்டியல் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிடப்படாததால், அவர்கள் தங்களின் நியாயமான பதவி உயர்வுபெற வாய்ப்பின்றி தவித்து வந்தனர். மேலும், மேல்நிலை சிறப்புப் பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் தடுமாறுவதோடு, பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்ப் பணியிடங்கள் காலியாகவும் இருந்து வருகின்றன.

இந்நிலையில், சிறப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், பணி இடமாறுதல் மற்றும் புதிய பணிநியமனங்கள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் கொண்ட குழு ஒன்று இந்த மாதத்தின் தொடக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களால் அமைக்கப்பட்டது. இதனை "சிறப்புப் பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு! அமைக்கப்பட்டது ஆசிரியர்கள் அடங்கிய குழு" என செய்தியாக வெளியிட்டது உங்கள் வெற்றித்தடாகம்.

இதனைத் தொடர்ந்து அந்தக் குழுவினரின் தொடர் செயல்பாடுகள் காரணமாக தற்போது பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிமூப்புப் பட்டியல் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிமூப்பு பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், தொடர்புடைய ஆசிரியர்கள் அதனைத் தொடர்புடைய தலைமை ஆசிரியர்களின் மூலமாக ஆணையரகத்திற்குத் தெரிவிப்பார்கள். எல்லா ஆட்சேபனைகளும் முறையாகப் பரிசீளிக்கப்பட்டு, பதவி உயர்வுக்கான பாடவாரியான தேர்ந்தோர் பட்டியல் அடுத்த வாரத்தின் இறுதியில் வெளியிடப்பட்டு, அனைத்து நிலைகளுக்குமான பதவி உயர்வு கலந்தாய்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment