முகப்பு

இதழ்களிலிருந்து: நன்றி இந்து தமிழ்த்திசை: - மாற்றுத் திறனாளி ஆசிரியையின் மகத்தான முயற்சி

, ந.முருகவேல் , விருத்தாசலம்  பெண்ணாடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள ‘ஸ்மார்ட் கிளாஸில்' மாணவ, மாணவியருடன் ஆசிரியை ஹேம்குமாரி.  மாற்றுத் திறனாளி ஆசிரியை ஹேம்குமாரி என்பவர், தன்னிடம் பயிலும் ஏழை மாணவர்களுக்காக தன் சொந்த செலவில் அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை ஒன்றை ஏற்படுத்தி, அவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார்.  கடலூர் மாவட்டம் பெண்ணாடத் தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் 156 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் நாடோடி வாழ்க்கை வாழும் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள்தான். முதல் தலைமுறையாக கல்வி கற்க வந்துள்ள இம்மாணவர்களின் பெற்றோர், வருமானத்துக்காக அவ்வப்போது இடம் விட்டு இடம் நகர்ந்து வாழக் கூடியவர்கள். உற்றார் உறவினர் களின் பராமரிப்பிலேயே வளரும் சூழலில் உள்ளவர்கள். அத்தகைய மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து, அவர்களுக்கும் கற்பிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளார் தலைமை ஆசிரியர் சாந்தி. இதே பள்ளியில் 4-ம் வகுப்புக்கான ஆசிரியையாக ஹேம்குமாரி என்பவர் பணிபுரிகிறார். மாற்றுத் திறனாளியான இவர், ஆசிரியை யாக இருந்த தனது தாயை முன் மாதிரியாகக் கொண்டு, முதுகலைப் பட்டம் மற்றும் கல்வியியல் பயின்று 2004-ல் பெண்ணாடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியை தொடங்கினார். பின்னர் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பச் சூழலை அறிந்து, அவர்களுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்க முடிவெடுத் தவர், தொடர்ந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுக்கத் தொடங்கினார். ஆசிரியை ஹேம் குமாரியின் அக்கறையை கண்ட மாணவர்களின் பெற்றோரும் மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.  இதன் தொடர்ச்சியாக பள்ளி யில் கடந்த 2019-ம் ஆண்டு தனது சொந்த செலவில் ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறையை ஏற்படுத்தி அதன்மூலம் அவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறார். இந்த ஸ்மார்ட் வகுப்பறையில் புரொஜக்டர் மூலம் காட்சி வழியாக பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இது தவிர கற்பித்தலுக்கான துணைக் கருவிகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு கூட்டல், கழித்தல், பெருக்கல் கணக்குகள் நடத்தப்படுகின்றன. மேலும், கைவினை தொழில்களையும் கற்றுத் தருகிறார். மாற்றுத் திறனாளி ஆசிரியையின் செயலை அறிந்து, பல தன் னார்வ அமைப்புகளும் அவருக்கு விருது வழங்கி கவுரவித்து வருகின்றனர். அண்மையில் ஈரோட்டில் ரோட்டரி சங்கம் சார்பில் கவுரவிக்கப்பட்டுள்ளார் ஹேம் குமாரி.  ‘‘சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, மாணவர்களின் பாசம் எனக்கு மிகுந்த மன வலிமையை கொடுக்கிறது. இதனாலேயே இந்த ஸ்மார்ட் வகுப்பறையை என்னால் உருவாக்க முடிந்தது. இதன் மூலம் இங்குள்ள மாணவர்களிடையே கூடுதல் நேரத்தை செலவழிக்கிறேன். இதனால் மாற்றுத் திறனாளி என்ற நினைவே எனக்கு இருப்பதில்லை. இந்த ஸ்மார்ட் வகுப்பறையின் மூலம் இங்கு பயிலும் குழந்தைகள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சற்றும் குறைவில்லாதவர்கள் என்ற நிலைக்கு உருவாக்கி வருகிறேன்'' என்கிறார் ஆசிரியை ஹேம்குமாரி.
 வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment