முகப்பு

நன்றி இந்து தமிழ்த்திசை: தமிழகம் முழுவதும் 100 மருத்துவர்கள் நியமனம்



சென்னை
மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையை விரைந்து வழங்க தமிழகம் முழுவதும் 100 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, அரசுப் பேருந்துகளில் பயணிக்க இலவச பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான கால விரயத்தைக் குறைக்கவும், மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை சேகரிக்கவும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது.

ஆனால், தமிழகத்தில் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பணி மந்தமாக நடந்து வந்தது. இப்பணிகளை விரைவுபடுத்த கடந்த ஜனவரி மாதம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், அடையாள அட்டையைப் பெற 2 லட்சம் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்தனர். அனைவருடைய விண்ணப்பமும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது.

இதைத் தொடர்ந்து, மாற்றுத்திறன் சதவீதம், எந்த வகையான மாற்றுத்திறனாளி போன்றவை விண்ணப்பத்தில் சரியாக உள்ளதா என்பதைக் கண்டறிந்து தேசிய அடையாள அட்டையை விநியோகிக்க சுகாதாரத்துறையின் உதவியுடன் தமிழகம் முழுவதும் 100 மருத்துவர்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நியமனம் செய்துள்ளது.

இதுதொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிதாக விண்ணப்பித்தவர்களுடன் ஏற்கெனவே விண்ணப்பித்த அனைவரின் ஆவணங்களையும் பரிசீலனை செய்து 7 லட்சம் தேசிய அடையாள அட்டைகள் வரை வழங்கப்பட உள்ளன.

விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. பயனாளிகள் அளித்த ஆவணங்களில் மாற்றுத்திறன் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளவற்றை மருத்துவர்தான் பரிசீலனை செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு, உறுதிப்படுத்திய வுடன் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். இப்பணியை மாவட்டத்துக்கு ஒரு மருத்துவர் மேற்கொண்டு வருகிறார். பணிகளை விரைவுபடுத்த சுகாதாரத்துறையின் உதவியுடன் தமிழகம் முழுவதும் 100 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment