முகப்பு

நிதிநிலை அறிக்கை 2020 - 21: மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ஒதுக்கீடு எவ்வளவு

graphic பத்தாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் பன்னீர்செல்வம்
 2020 – 21 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை, துணைமுதல்வரும் நிதியமைச்சருமான மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன்படி, பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 34181 கோடியும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 15000 கோடியும் 2020 – 21 ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 667 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் ஒதுக்கீட்டைவிட 95 கோடி அதிகமாகும். திரு. பன்னீர்செல்வம் அவர்கள் தனது உரையில், “2016 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அரசு வேலைவாய்ப்புகளிலும், பொத்உத்துறைகளில் நடைபெறும் பணிநியமனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், நிரப்பப்படாமல் நிலுவையிலுள்ள அனைத்துக் காலிப்பணியிடங்களுக்கும் சிறப்பு ஆள் சேர்ப்பு பணிகள் நடத்தப்படும்.

தற்போது அறிவுசார் குறைபாடுகள் உடையோர், கடுமையாக ஊனமுற்றோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு மானியமாக மாதம் ஒன்றிற்கு 1500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதிலும் உள்ள 1.75 லட்சம் நபர்கள் பயன்பெறும் வகையில், 313.26 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.” என்றார்.

மேலும் அவர், “முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பார்க்கின்சன் நோய், தண்டுவட மறப்பு நோய் ஆகிய  நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்குள்ளான நபர்களுக்கும் மாதாந்திர பராமரிப்பு மானியம் வழங்கப்படும். புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவுகளுக்கும், உதவித்தோகை நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை ஒப்புதல் செய்தும் நிலுவையிலுள்ள 2.1 லட்சம் தகுதியுடைய பயனாளிகள் பயன்பெறும் வகையில், 2020 -21 நிதியாண்டின் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு 375 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

 “பார்வைத் திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோர் பிறரை எளிதில் தொடர்புகொள்வதற்குத் தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள் 10000 பார்வைத்திறனற்ற மற்றும் கேட்கும் திறனற்றோருக்கு ரூபாய் 10 கோடி செலவில் வழங்கப்படும். 2020 – 21 ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 667.08 கோடி ஒதுக்கப்படுகிறது.” என முடித்தார்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment