Anne Sullivan Macy படக்காப்புரிமை afb.org |
அது கடந்த கல்வியாண்டின் தொடக்கமான ஜூன் மாதத்தின் ஏதோ ஒருநாள். பரபரப்பான பள்ளி சேர்க்கை என்றெல்லாம் பொய்சொல்ல மாட்டேன். சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கையைப் பொருத்தவரை, மாதத்திற்கு ஒரு குழந்தை வந்தாலே அதிகம். அப்படித்தான் ஒரு தாய் தன் குழந்தையைத் தோளில் போட்டபடி எமது பள்ளிக்கு வந்தார்.
குழந்தையின் பெயர் தமயந்தி. விசாரித்ததில் தாயின் நிலைமைக்குத்தான் அந்தப் பெயர் மிகவும் பொருத்தம் என்று தோன்றியது. குழந்தைக்குக் காதும் கேட்காது, கண்ணும் தெரியாது. அதாவது அது ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமடைந்த (multi-disabled) குழந்தை. தன் அம்மாவை மட்டுமே அறிந்துவைத்திருக்கிற தமயந்தியின் வயது ஆறு.
முகர்தலும், தொடுதலுமே தமயந்தியின் உலகம் என்பதை, அந்தக் குழந்தையை அவளின் தாயிடமிருந்து பிரித்த ஓரிரு நிமிடங்களிலேயே உணரமுடிந்தது. இதுவரை தனக்கு அறிமுகமில்லாத புதிய வாசம் அவளை வசீகரிக்கவில்லை. தன் கையில்பட்ட ஒழுங்கான வடிவமைப்புகொண்ட மேசை, நாற்காலி, பக்கவாட்டுச் சுவர் என எல்லாமே அவளின் தொடுகை அறிவிற்குக் கரடுமுரடாகத்தோன்றியிருக்கக்கூடும். தன் தாயைப் பிரிந்த அந்த நிமிடங்களில் அவள் அளறினாள், அங்கும் இங்குமென திக்கின்றி ஓடினாள். எங்கேனும் மோதிக்கொள்ளக்கூடும் என்கிற தாயின் பதட்டம் அவளை ஆற்றுப்படுத்தியது. அந்தக் கதகதப்பின் மறுவினாடியில் அவள் அமைதிகொண்டாள்.
சரி, தமயந்தியை என்ன செய்வது? பள்ளியில் சேர்க்கலாம் ஆனால் அவள் அம்மாவின் இருப்பு அவசியம். அதற்கு விதிகள் அனுமதிக்காது. அப்படியானால் தமயந்திக்குக் கல்வி? சென்னை முட்டுக்காட்டிலுள்ள பல்வகை ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனம்தான் (NIEPMD) ஒரே வழி.
அங்கும் நான் அறிந்தவரை விடுதியெல்லாம் இல்லை. குழந்தையும் அதன் பாதுகாவலரும் தினமும் சென்றுவர வேண்டும். இதுபோன்ற கல்வி வாய்ப்புகளை அணுகுதல் என்பது வசதி படைத்த குடும்பங்களுக்கு மட்டுமே சாத்தியம். பேராவூரணிக்கு அருகே ஒரு குக்கிராமத்தில், கிடைத்த இடத்தில் கூலி வேலை செய்து, அனுதினப் பிழைப்போட்டும் அந்தப் பெண்ணுக்குச் சென்னை செல்வதெல்லாம் வாய்ப்பே இல்லை.
இப்போதெல்லாம் பார்வையற்றோர் பள்ளிக்கு சேர்க்கைக்காக வரும் மாணவர்களில் மூன்றில் ஒருவர் பல்வகை ஊனமடைந்தவராகவே இருக்கிறார் என்பதைப் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நன்கு அறிவார்கள். இவர்களுக்குச் சென்னையைத் தவிர வேறெங்கும் சிறப்புப் பள்ளிகள் இல்லை. உள்ளடங்கிய கல்வித்திட்டத்தின் வருகைப் பதிவேட்டில் இவர்களின் பெயர் இருக்கும் அவ்வளவுதான். மற்றபடி வீடும் தாய் மடியுமே இவர்களின் உலகம்.
அன்றாடம் இவர்களின் உணவு, இயற்கை உபாதைகள் என அனைத்தும் தாயைச் சார்ந்தே நிகழும். இதனால், தாயின் உலகமும் சுருங்கிவிடும். உறவினரின் நல்லவை அல்லவை என எதற்கும் வெளியே செல்ல முடியாது. விரக்தியும் வேதனையுமான அன்றாடம் ஒரு கட்டத்தில் தாயின் மனநிலையையும் வெகுவாகப் பாதிக்கிறது. போதாதற்கு “இது எந்தப் பிறவிப் பாவமோ?” என்கிற உற்றார் ஊராரின் சுடுசொற்கள் ஒவ்வொரு நாளும் அந்த அம்மாக்களை உயிரோடு கொள்ளும்.
பெரும்பாலும் இத்தகைய சூழலில் சிக்கித் தவிப்பவர்கள், சொந்தம் விட்டுப் போய்விடாதிருக்கத் தங்கள் தாய் மாமன்களுக்குத் திருமணம் முடித்துவைக்கப்பட்ட கிராமத்துப் பெண்களே. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த சமூகக் காரணிகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, பல்வகை ஊனமுற்றோருக்கான கல்வி என்றாலே சென்னைதான் வரவேண்டும் என்ற நிலையிலேயே அரசு தேங்கி நிற்பது பேரவலம்.
இந்த நிலையை மாற்றிட, பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகளை அல்லது ஆதார மையங்களை மாவட்டத்திற்கு ஒன்று என திறக்க அரசு ஆலோசிக்க வேண்டும். அந்த மையங்களில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைப் பணியமர்த்துவதோடு, தங்கள் குழந்தைகளோடு தங்கிக்கொள்ள விரும்பும் பெற்றோருக்கு தங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட வேண்டும். பல்வகை ஊனமுற்ற தங்களின் குழந்தைகளை எப்படிப் பராமரிப்பது, அவர்களை எப்படி உலகறியச் செய்வது என அந்த குழந்தைகளின் பெற்றோருக்குக் கற்பிக்கப்பட வேண்டும்.
படக்காப்புரிமை afb.org |
இது காலத்தின் தேவை என்பதை அரசு உணர்ந்து ஆவன செய்தால், எங்கள் கிராமத்து தமயந்திகளுக்குள் மறைந்திருக்கும் ஹெலன்கள் வெளிப்படுவார்கள். தனக்கு விதிக்கப்பட்ட சாபம் இது என்று தன்னைத்தானே சபித்துக்கொண்டும், தமயந்திகளைச் சகித்துக்கொண்டும் அவர்களுக்கு அன்றாடப் பணிவிடை செய்துகொண்டிருக்கும் எங்கள் பாமர சலிவன்களின் வாழ்வு பெருவாழ்வாய் மலரும்.
இது, உலக சிறப்பாசிரியர்களின் ஒப்பற்ற முன்னோடியான ஆன் சலிவன் மேசியின் 155ஆவது பிறந்தநாளில், அனைத்து மாற்றுத்திறனாளிகளின் சார்பில் நாம் அரசுக்கு வைக்கும் கோரிக்கை.
ப. சரவணமணிகண்டன்
தொடர்புக்கு vaazhgavalluvam@gmail.com
ஏப்ரல் 14, ஹெலன்கெல்லரை உலகறியச் செய்த அவரின் ஆசிரியர் ஆன் சலிவனின் பிறந்தநாள்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment