கரோனா பேரிடர் காலத்தில், மாற்றுத்திறனாளிகள் பல புதிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால், வேறு எவரையும்விட அவர்களுக்கு அதிக கவனமும் பாதுகாப்பும் தேவைப்படுகிறது. அவர்கள் உணவு உட்கொள்ளாமல் இருக்கக்கூடும், தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை சரியாக அறிந்துகொள்ள இயலாதபோது, அவர்கள் மன அழுத்தத்தோடு காணப்படுவார்கள். எனவே, அரசும் அவர்களுக்காகச் செயல்படும் அமைப்புகளும் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை அவர்களுக்கு உரிய வடிவத்தில் (accessible format) கொண்டுசேர்க்க வேண்டும் என ஹைதராபாத்திலுள்ள இந்திய பொதுசுகாதார நிறுவனத்தின் இயக்குநரான மூர்த்தி தி இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன் சுருக்கமான வடிவம்.
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட சவால்கள் எவை?
மாற்றுத்திறனாளிகள் அவர்களின் உடல்ச்சவாலைப் பொருத்து பல வகைப்பட்டவர்கள். எனவே, கரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த தகவல்களைப் பெறுவதில் பலருக்கும் பல்வேறு வகையான சிக்கல்கள் இருக்கின்றன.
பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை, தொடுதலைச் சார்ந்தே அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் அமைகின்றன. பெரும்பாலான மக்கள் வாசிக்கும் தகவல்களை அவர்களால் அதே வடிவத்தில் பார்த்து வாசிக்க முடியாது. அவர்களின் உலாவுதலுக்குப் பிறரின் உதவி அவசியமாகும். எனவே ஊன்றுகோல் பயிற்சி, சமூக இடைவேளியைக் கடைபிடிப்பதில் புதிய அணுகுமுறைகளைத் திட்டமிட்டுக் கையாள அவர்களுக்கு வழிகாட்டப்பட வேண்டும்.
செவித்திறன் சவாலுடையோர் அதிலும் குறிப்பாக படிப்பறிவற்றவர்கள் பேரிடர் குறித்த தகவல்களைப் படிக்கவோ, கேட்கவோ இயலாது. பெரும்பாலான செவிச்சவாலுடையோர் அதிகம் சைகை மற்றும் உதட்டசைவுகளையே சார்ந்திருப்பதால், முகக்கவசம் அணிந்தபடி வழங்கப்படும் தகவல்கள் அவர்களைச் சென்றுசேர்வதில்லை. அத்தோடு எந்த ஊடகமும் சைகைமொழியோடு செய்திகளை வெளியிடுவதில் அக்கறை காட்டுவதில்லை.
உடல்ச்சவாலுடையோர் கைகழுவும் இடத்தை அடைதல், அடிக்கடி கைகழுவுதல் போன்ற செயல்களில் இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். மூளை முடக்குவாதம் மற்றும் டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் வயது வந்தோருக்கு உணவு உட்கொள்வதில் உதவிகள் தேவைப்படுகின்றன.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் தகவல்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அதேசமயம், கரோனா இறப்புகளைத் துரிதப்படுத்துவதில் முக்கியக் காரணிகளாக விளங்கும் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை மிக எளிதாக பீடிக்கும் வாய்ப்புள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகள். எனவேதான் இந்த கரோனா பேரிடர் காலத்தில் வேறு எவரையும்விட அவர்களுக்கு அதிக கவனமும் பாதுகாப்பும் தேவைப்படுகிறது.
இத்தகைய தருணத்தில் மாற்றுத்திறனுடைய பெண்களே கூடுதல் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதிகம் பிறரின் உதவியை எதிர்நோக்கும் இந்தப் பேரிடர் காலத்தில், அவர்கள் சுரண்டப்படவும் வாய்ப்பிருக்கிறது. அவர்களின் குறைபாடற்ற குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை பேணுவது தொடர்பான கவலைகள் அவர்களைப் பீடிக்கின்றன.
தொடர்புத் திறன் சவாலுடையோர் (people with communication disabilities) அவர்களின் துன்பங்களை வெளிப்படுத்துவதில் அதிகம் இடர்படுகின்றனர். மருத்துவ மையங்கள், அதற்கான போக்குவரத்து வசதி போன்றவை எளிதில் அணுகக்கூடியதாக இல்லாததால், அவர்களுக்கான அன்றாட மருத்துவத் தேவைகள் பெறுவதில் பெறும் இன்னல்களைச் சந்திக்கின்றனர்.
பிரச்சனைகளின் அளவுகோள் என்ன?
இந்தியாவில், ஏதேனும் ஒரு குறைபாடு கொண்ட சுமார் 150 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்றனர். இவர்களுள் அன்றாடத்தில் பிறரின் உதவி கட்டாயமாகத் தேவைப்படுகிற ஏறத்தாழ 25 முதல் 30 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் தங்கள் குடும்பத்தினரோடு வசிக்கின்றனர். அப்படிக் கணக்கிட்டால், மேலும் 30 மில்லியன் மக்கள் அதாவது மொத்தம் 60 மில்லியன் மக்கள் சிறப்பு கவனமும் பாதுகாப்பும் தேவைப்படுபவர்களாக இருக்கின்றனர். ஆனால், அத்தகைய உதவி நடப்பு காலத்தில் கிடைப்பதாகத் தோன்றவில்லை.
பொதுமக்களும் அரசும் எவ்வாறு உதவலாம்?
மருத்துவம், கல்வி, சமபங்கேற்பை உறுதி செய்யும் வகையில், அரசும் அவர்களுக்காகச் செயல்படும் அமைப்புகளும் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை அவர்களுக்கு உரிய வடிவத்தில் (accessible format) கொண்டுசேர்க்க வேண்டும்.
பிற எவரையும்விட அவர்களின் மருத்துவத் தேவைகளுக்கு உடனடியான தீர்வுகள் வேண்டும். மருத்துவமனைகளில் அவர்களின் காத்திருப்பு நேரம் குறைக்கப்படுவதன் மூலம், அவர்களை கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாக்கலாம்.
அவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்கான மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கப்பட வேண்டும். இதற்கான சிறப்பு உதவிமையம் ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் கோரிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு தீர்வுகாண வேண்டும். அவர்களுக்கு சோப், சானிட்டைசர்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்துப் பொதுமக்களுக்குக் கற்பிக்க வேண்டும். தொழில்நுட்ப வல்லுநர்கள் அவர்களுக்கு ஏற்ற வடிவத்தில் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வடிவமைக்க முனைய வேண்டும்.
மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு அவர்களின் கல்விச் சூழலில் உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ள வேண்டும். இணையதள வகுப்புகளை அவர்களுக்கு ஏற்றவாறு (accessible format) வடிவமைக்க வேண்டும்.
பொதுச்சமூகம் தன்னார்வத்துடன் முன்வந்து மாற்றுத்திறனாளிகளோடு இணைந்து பணியாற்ற வேண்டிய நேரம் இது. அவர்களுக்கான தொழில்முறை தன்னார்வலர்களை அணுக இயலாத இந்த தருணத்தில், பொதுச்சமூகம் சமையல், தன் பாதுகாப்பு போன்ற அவர்களின் அன்றாடப் பணியில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
ஒன்றுபட்ட சமூகம் என்பது காலத்தின் கட்டாயம். ஸ்பெயின் போன்ற நாடுகளில் குறைவான வெண்டிலேட்டர்கள் இருப்பின் காரணமாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான சிகிச்சைகள் புறந்தள்ளப்பட்டதை நாம் அறிவோம்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, அதன் சமூக ஆதரவு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கோட்பாடுகளால் அளவிடப்படுகிறது. எனவே உயரிய நோக்கங்களை வகுத்தல் அவசியம்.
தற்போதைய நிலை என்ன?
மாற்றுத்திறனாளிகளின் சிறப்புத் தேவைகளுக்கு முகம் கொடுத்து, அதற்குத் தீர்வுகாண யாரும் முன்வருவதில்லை. மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் நாம் சம நோக்கோடு உறுதியான செயல்பாடுகளை மேற்கொள்ளத் தவறினால், அது மனித இனத்தின் தோல்வியாகவே கருதப்படும்.
பிந்து ஷாஜன் பேரப்படன்
காப்புரிமை தி இந்து
தமிழில் ப. சரவணமணிகண்டன்
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment