கல்லுப்பட்டி முதல் கலிஃபோர்னியா வரை, “அன்புத் தோழமைகளே!” என்கிற எங்களின் ஒற்றை மன்றாட்டிற்குச் செவிசாய்த்து, பார்வையற்றோர் சமூகத்தின் துயர்துடைக்க நீண்டுகொண்டிருக்கிற நூற்றுக்கணக்கான கரங்களை மானசீகமாய்ப் பற்றிக்கொள்கிறோம்.
உறுதிச் சான்று கேட்பதில்லை, உளச்சான்றே சாட்சி, எவ்விதப் புகைப்படமும் இல்லை, அன்பின் மன வரைபடம் கொண்டு தேடித் தெரிவு செய்த 300க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாயை களப்பணி ஏதுமின்றி தொழில்நுட்ப உதவியுடன் அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்த்து வருகிறோம்.
கனத்த மனதைத் தந்துவிட்டுப் போகிற சில பயனாளிகளின் கண்ணீத் துளிகளும், பெருத்த நம்பிக்கையை மனதெங்கும் நிறைக்கிற பல பயனாளிகளின் உரையாடலுமாய் கழிகிறது எனது அன்றாடம். ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் மற்றும் அதன் உள்ளடங்கிய குக்கிராமங்களில் வசிக்கும் பார்வையற்ற ரயில் வணிகர்கள், சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் பார்வையற்ற குடும்பங்கள் என விளிம்பினும்விளிம்பில் வாழும் மக்களின் அறிமுகத்தை எங்கள் அமைப்பிற்குப் பெற்றுத் தந்திருக்கிறது இந்த ஊரடங்கு காலம்.
இந்த நல்லதொரு வாய்ப்பை எங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிற முகமறியாக் கொடையாளர்கள், தன்னார்வலர்கள், நண்பர்கள், தொண்டுள்ளம் கொண்ட பல்வேறு அமைப்புகள், சரியான தரவுகளைச் சேகரிப்பதில் எங்களுக்கு உதவுகிற பல பார்வையற்ற முன்னோடிகள் என அனைவருக்கும் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான இந்தப் பயணத்தில், என்னோடு கைகோர்த்து உழைக்கிற எங்கள் அமைப்பின் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் உளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் இவள்,
U. சித்ரா,
தலைவர்
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்
No comments:
Post a Comment