முகப்பு

ஒரு பார்வையற்ற வாசகனின் தினசரி கனவு

30 ஜூன், 2020
graphic இந்து தமிழ்த்திசை
அன்றிலிருந்து இன்றுவரை மக்களிடம் அருகிவிடாமல் தொடர்வது காலையில் தினசரிகள் படிப்பது என்கிற பழக்கம். ஆனால், அதுவும் நம் தலைமுறையோடு முடிந்து போகுமோ என்ற கவலையும் இல்லாமல் இல்லை. எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல், எங்கள் வீட்டிற்கு காலை ஏழு மணிக்குள் தினமலரோ, தினகரனோ காலத்திற்கேற்ப தினசரிகள் மாறியிருக்கலாம் தினம் வருவது நிற்கவில்லை. அப்பாவும் அம்மாவும் பக்கங்கள் திருப்பிப் படிக்கிற சத்தம் என்னை என்னவோ செய்யும். முழு செய்தித்தாளையும் ஒன்றுவிடாமல் புறட்டிப்பார்க்கிற எனது பசிக்கு அதிகம் உண்ணத் தந்தவர் அம்மாவாகத்தான் இருக்கும். அப்பாவுக்கு அவ்வளவு பொறுமையெல்லாம் இல்லை.
 நான் படித்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளி வளாகத்தில், தொழிற்கூடத்தில் பணியாற்றிய அண்ணன்மார்களுக்கான விடுதி இயங்கிக்கொண்டிருந்தது. தினமும் காலை ஏழுமணிவாக்கில், அந்த அண்ணன்களுள் குறைப்பார்வையுடைய செல்வராஜ் அண்ணன் உற்று உற்றுப் பார்த்து பிற அண்ணன்மார்களுக்கு தினசரி படித்துக் காண்பிக்க, அவ்வப்போது நானும் அந்தக் குழாமில் ஐக்கியமானதுண்டு. என் வயது காரணமாய், நானெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லாமல் போனேன். ஆனால், நான் படித்த அந்த சிறப்புப் பள்ளியில் ஒரு பழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்தது. அது பள்ளியின் தினசரி வழிபாட்டுக் கூட்டத்தில், மாணவர்களே செய்திகள் எழுதிவந்து வாசிக்க வேண்டும் என்கிற நடைமுறை. நான்காம் வகுப்புமுதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களே இந்த நடைமுறைக்கு உட்பட்டவர்கள் என்பதால், நான் நான்காம் வகுப்பிற்குத் தேர்ச்சியானபோது அவ்வளவு மகிழ்ச்சி. இனிமேல் நானும் வழிபாட்டுக் கூட்டத்தில் செய்தி வாசிக்கலாம்தானே.
graphic செய்தித்தாளை ஆசிரியர் படித்துக் காட்ட மாணவர்கள் எழுதிக்கொள்கிறார்கள்
செய்தித்தாளை ஆசிரியர் படித்துக்காட்ட மாணவர்கள் எழுதிக்கொள்கிறார்கள்
 எனக்கு செய்தி வாசிப்பதில் எந்தவிதக் கஷ்டமும் இல்லை. காரணம் வகுப்புத் தோழன் நல்லதம்பி. நானும் அவனும் இரண்டாம் வகுப்பு முதலாகவே வானொலிச் செய்திகளைத் தவறவிடாமல் கேட்டு, தமிழகத்தில் அன்றைக்கு இருந்த 25 மாவட்டங்களின் ஆட்சியர் பெயரையெல்லாம் மனனம் செய்து வைத்திருந்தோம். அதிலும் மாநிலச் செய்திகள் பாஸ்கரன் மற்றும்  தேசியச் செய்திகள் சரோஜ் நாராயன்சாமி வாசிப்பதுபோல் எங்களுக்குள் பலகுரல் செய்து பூரிப்படைவோம். அடுத்த நாள் கூட்டத்தில் வாசிப்பதற்காக, முதல்நாள் மாலை நேர வகுப்புகளில் (study class) வார்டன் அக்கா, சமையல் அக்கா என யாரையாவது தொந்தரவு செய்து, அன்றைய நாளின் தினசரிகளை வாசிக்கச் செய்து, ஒரு நாளைந்து செய்திகளை மூத்த வகுப்பு அண்ணன்கள் பிரெயிலில் எழுதிக்கொள்வார்கள். காலை 6.45 மணி மாநிலச் செய்திகள், 7.15 தேசிய செய்திகள் கேட்கிற எனக்கும் நண்பன் நல்லதம்பிக்கும், இவர்கள் வழிபாட்டுக் கூட்டத்தில் வாசிக்கும் செய்திகள் சளிப்பூட்டுவதாகவும், காலத்தால் பின்தங்கியதாகவும் தோன்றும். எனவே வழிபாட்டுக் கூட்டத்தில் செய்தி வாசிக்கிற நடைமுறையில் ஏதேனும் புதிதாகச் செய்ய வேண்டும் என்கிற ஆசை அவ்வப்போது அரும்பிக்கொண்டே இருந்தது. சரியாக நான்கு ஆண்டுகள் இப்படியே ஓடின.
graphic பள்ளியின் வழிபாட்டுக் கூட்டத்தில் பிரெயிலில் செய்தி வாசிக்கும் மாணவி
 பள்ளியில் எட்டாம் வகுப்புதான் மிகப்பெரியது என்பதால், நாங்கள்தான் எல்லாம் என்று ஆனது. அவ்வப்போது நல்லதனம் சேட்டை எல்லாம் கலந்துகட்டி அடித்தோம். அந்த வழிபாட்டுக் கூட்ட புதுமையையும் கொஞ்சம் முயன்று பார்த்தோம். அதாவது, வானொலிச் செய்திகள் அமைப்பிலேயே தலைப்புச் செய்திகள், விரிவான செய்திகள், பின் மீண்டும் தலைப்புச் செய்திகள் என வாசித்தோம். முதல்நாள் நல்லதம்பி அந்த முறையைக் கொஞ்சமே தொட்டுக்கொண்டான். அடுத்தநாள் நானோ, கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் பாஸ்கரனாகவே மாறிவிட்டேன். முதல் வகுப்புக்கான நேரம் கொஞ்சம் களவாடப்பட்டதில் மாணவர்களுக்கு மகிழ்ச்சி ஆசான்களுக்கு எறிச்சல். ஆனாலும் இது புது முயற்சி என்பதால் எல்லோரும் கைதட்டிப் பாராட்டினார்கள். பிறகு தொலைக்காட்சி செய்திபோல், இருவர் இணைந்து வாசிப்பதையும் முயன்று பார்த்தோம். இப்படியெல்லாம்தான் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பிரெயில் கற்க வைத்தார்கள்.
 சிறப்புப் பள்ளி நாட்களுக்குப் பிறகு, எனது திறமை அரங்கேற்றத்திற்குக் களம் கிடைக்கவில்லை. அதுபற்றிய எனது தன்னார்வமும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கியது. ஆனால், நிறைய வாசிக்க வேண்டும்் என்கிற ஆசை, அதிலும் தினசரி வாசிக்க இயலவில்லையே என்கிற ஏக்கம் என்னைத் தொடர்ந்துகொண்டே இருந்தது. நான் 2008ல் புதுக்கோட்டை பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது, என்னிடமிருந்து எல்லாத் திறமைகளும் வடிந்திருந்தன. ஒரு உள்ளீடற்ற மனிதனாகத்தான் சில ஆண்டுகள் பணியாற்றினேன். நான் அறியாமலேயே என்னைத் தொடர்ந்துகொண்டிருந்த வாசிப்பார்வத்தால் 2012 வாக்கில் ஒரு மடிக்கணினி வாங்கினேன். உண்மையில் அந்த ஆண்டு நான் செய்துகொண்ட இரண்டாவது திருமணம் என்று அதைச் சொல்லலாம்.
graphic விகடன்
இணையம் புகுந்து ஏதேதோ தேடிப் படித்தேன். நண்பர் திரு. செல்வம் அவர்கள் எனக்கு விகடனையும், அதில் எழுதப்படும் உத்வேகமான எழுத்துகளையும் பற்றிச் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால், இதையெல்லாம் யாருடைய உதவிகொண்டு வாசிப்பது? நாமாகவே வாசித்துக்கொள்ளும் காலம் வராதா? இதுபோன்ற குமுறல்களோடு, தன் அன்றாடத்தைக் கழித்துக்கொண்டிருந்த என் போன்ற பார்வையற்றவர்கள் அதிகம். எங்களின் உணர்வைத் தமிழ் ஊடக வெளியில் மிகவும் நன்றாக உள்வாங்கிக்கொண்டவர்கள் விகடனும் இந்துவும். இன்றுவரை அவர்களின் பெரும்பாலான வெளியீடுகளை திரைவாசிப்பான்களுக்கு உகந்த முறையில் ஒருங்குறி வடிவில் (Unicode text) தந்துகொண்டு இருக்கிறார்கள்.
 இந்த உண்மை அறிந்த அடுத்த கணமே, சரியாக 2014 முதல் விகடனின் இதழ்களை இணையத்தில் படிக்கும் சந்தாதாரராக மாறியதில் ஒருவிதப் பெருமை, பூரிப்பு எல்லாமும் தோன்றியது. என் சிறுவயது தொட்டே, அனைவராலும் பரபரப்புடன் வாங்கிப் படிக்கப்படும் ஜூனியர் விகடனையும், பயணத்தின்போது, பெரும்பாலோர் கைகளில் தவழ்ந்துகொண்டிருந்த ஆனந்தவிகடனையும் வாசிக்க முடியவில்லையே என எத்தனையோ நாட்கள் ஏங்கியிருக்கிறேன். இன்று, அத்தனையும் என் விரல்நுனியில் என்றானது. விகடனின் அனைத்துப் பக்கங்களையும் வரிவிடாமல் படித்தேன். அப்போது சரியாக தி இந்து குழுமமும் தமிழ் நாளிதழ் சேவையைத் தொடங்கியது. அவர்களின் tamil.thehindu.com என்ற இணையதளம் மிகவும் எளிமையானதாக, பார்வையற்றோர் எளிதில் அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. விகடன் தன் வார, மாத இதழ்களை ஒருங்குறி வடிவில் பதிவேற்றுவதைப்போல், இந்துவும் தனது தினசரியை ஒருங்குறி வடிவில் தந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற என் அன்றாட அங்கலாய்ப்பும் ஒரு முடிவுக்கு வந்தது. அவர்கள் தங்களின் தினசரியை மின்னிதழ் வடிவில் பிடிஎஃப், இமேஜ் மற்றும் திரைவாசிப்பான்களுக்கு உகந்த டெக்ஸ்ட் முறையிலும் வழங்கத் தொடங்கினார்கள். போதாதா? அன்றுமுதல் இன்றுவரை, இந்து தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகளின் சந்தாதாரராகத் தொடர்கிறேன்.
graphic சமஸ்
சமஸ்
விகடனும், இந்துவும் எனக்குள் ஏற்படுத்திய அகம்சார் மாற்றங்கள் அதிகம். பாடப்புத்தகங்களைத் தாண்டிப் படித்திடாத எனக்குள் புதிய எண்ணச்சிறகுகள் முளைக்கத் தொடங்கியதாய் உணர்ந்தேன். இந்த இரண்டு ஊடகங்கள் வழியே பல எழுத்தாளர்கள் என்னைத் தொந்தரவு செய்யத் தொடங்கினார்கள். அதிலும் எஸ்ரா எனக்குள் இருந்த ஒருவித இறுகல் தன்மையை, முரட்டுத்தனத்தை எனக்கே வலிக்காமல் என்னிலிருந்தே உறுவத் தொடங்கினார். பிரியா தம்பியின் பேசாத பேச்செல்லாம் தொடர் பெண்கள் குறித்தான எனது புரிதல்களில் பெட்ரோல் ஊற்றிக் கொழுத்தியது. அக்கிரமத்தைப் பொருக்கமுடியாத ஒரு எழுத்தாளனின் கோபம், வாசகனின் கன்னத்தில் அறைந்துகொண்டே இருக்கும் என்பதை பாரதிதம்பியின் எழுத்துகளைப் படிக்கும் எவரும் உணர்வார். பல நேரங்களில் திருமாவேளன் தீட்டித்தரும் கூர்வாள்களை நிதானமாய்க் கையாள சமஸ் வகுப்பெடுப்பார். வாளை உறையிலிடும் தருணம் பார்த்து, அதைக் கீழே தட்டிவிட்டு, எண்ணற்ற மயிலிறகுகளையும், பூவிதழ்களையும் கைகளுக்குள் அழுத்திவிட்டுப் போவார் அதிஷா. அந்தக் கணத்தில் கொஞ்சம் லயிக்கத் தொடங்குகையில், “ரொம்ப ஃபீல் பண்ணாதிக அண்ணாச்சி” என போகிற போக்கில் நிதர்சன உலகிற்கு நம்மை நெறிபடுத்திச் செல்வார் கெ.கெ. மகேஷ்.
graphic கணினியைப் பயன்படுத்தி வாசித்துக்கொண்டிருக்கும் பார்வையற்ற மாணவன்
எல்லாவற்றிற்கும் ஒரு எதிர்வினை உண்டல்லவா? அப்படித்தான், எழுத்தாளர்கள் என் தூக்கம் களைத்தார்கள். நானோ என் மாணவர்களைத் தட்டி எழுப்பத் தொடங்கினேன். சிறுவயதில் எங்களுக்கு பழக்கப்படுத்தப்பட்ட எதுவுமே, நான் பணியாற்றிய புதுக்கோட்டை பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் நடைமுறையில் இல்லை என்கிற உண்மைக்கு முகம் கொடுத்தேன். தமிழ்த்தாய் வாழ்த்து, ஒருமைப்பாட்டு உறுதிமொழி மட்டுமே வழிபாட்டுக் கூட்டம் என்றிருந்த நிலையில், பொது அறிவு புகுத்தி, திருக்குறள் சேர்த்துக் கொஞ்சம் கொஞ்சமாய் திருத்தினோம். இன்று, இணையத்தில் மின்னம்பலம் செய்திகளை வாசித்து, அதை பிரெயிலில் எழுதிவந்து வாசிக்கப் பழகியிருக்கிறார்கள் புதுக்கோட்டை சிறப்புப் பள்ளி மாணவர்கள்.
 எல்லா மாற்றங்களும் ஒரு பத்தாண்டில் நடந்துவிட்டன. நான் என் முப்பதாவது வயதில் கணினி பயன்படுத்தத் தொடங்கினேன். என்னிடம் ஏழாம் வகுப்புப்  படிக்கும் மாணவன் அந்த வாய்ப்பை அடுத்த ஐந்தாண்டுகளிலேயே பெற்றுவிட்டான். தினசரிகளைப் புறட்டிப் படிக்கவேண்டும் என்கிற எனது மாணவப் பருவ ஏக்கமெல்லாம் அவனுக்கு இராது. காரணம், இப்போது 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் மின்னம்பலம் போன்ற மொபைல் பத்திரிக்கைகள் அவனுக்குப் போதுமானதாக இருக்கின்றன. எனக்கோ இப்போதும் அது போதுமானதாக இல்லை. காலையில் எழுந்து தி இந்து மற்றும் இந்து தமிழ்த்திசை மின்னிதழ்கள் பக்கம் நகர்த்தி வாசிக்காத நாட்கள் முழுமையற்றதாகத் தோன்றுகின்றன.
graphic பார்வையற்றோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பூவிருந்தவல்லி
பதவி உயர்வு நிமித்தம், இப்போது நான் பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றுகிறேன். அங்கும் என்னுடைய குறி செய்திகள்தான். சிறப்புப் பள்ளி மாணவர்கள், தொழிற்பயிற்சி பெறும் பார்வையற்றோர் என அந்தப் பள்ளியின் வழிபாட்டுக் கூட்டத்தில் தினமும் நூற்றுக் கணக்கில் பங்கேற்பார்கள். அவர்களுக்குப் பள்ளியில் வாங்கப்படும் தினசரியிலிருந்து செய்திகள் வாசித்துக் காண்பிக்கப்படும். நல்வாய்ப்பாக பள்ளியில் வாங்கப்படும் தினசரியாக இந்து தமிழ்த்திசை இருக்கிறது என்பதை அறிந்தேன். சுழி சும்மா இருக்குமா? காலம் காலமாகப் பார்வையுள்ள ஆசிரியர்கள்தானே நமக்கு செய்தி வாசித்துக் காண்பிக்கிறார்கள், இந்து தமிழ்த்திசை துணையோடு, வழிபாட்டுக் கூட்டத்தில் நாம் ஏன் செய்தி வாசித்துக் காண்பிக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது.
graphic இந்து தமிழ்த்திசை மின்னிதழ்
அடுத்தநாள் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மைக் அருகே போய் நின்றேன். ஒரு பார்வையுள்ள ஆசிரியர் நான் வரிசை தெரியாமல் நிற்பதாகக் கருதிக்கொண்டு, என்னை வழிப்படுத்த முயன்றார். நானோ செய்தி வாசிக்கவிருப்பதாகச் சொன்னேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. காரணம் என் கையில் பிரெயிலில்கூட ஒரு தாளும் இல்லை. குழப்பத்தோடே அவர் நகர்ந்துவிட்டார். தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்தது. மைக் என் கைக்கு வந்தது. முதல் பக்கம் தொடங்கி, 14 பக்கங்களிலும் இடம்பெற்றிருந்த முக்கியச் செய்திகளைத் தேதி சொல்லி, பக்கம் சொல்லி என் நினைவடுக்கில் குவித்து வைத்திருந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக இறக்கிவைத்தேன். இடையிடையே இந்து தமிழ்த்திசையின் பக்கவாரியான செய்தி ஒதுக்கீட்டுமுறை குறித்தும் மாணவர்களுக்குப் புரியவைக்க முயன்றேன். தாள் திருப்புகிற இடைவெளியெல்லாம் இல்லாமல், தொடர்ந்து ஐந்து நிமிடத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, நன்றி வணக்கம் சொன்னபோது, அனைவரும் வியந்துபோனார்கள். கூட்டம் முடிந்து ஒவ்வொருவராக அணுகிப் பாராட்டினார்கள். அந்த நிகழ்வு, தாங்களும் செய்தி வாசிக்க வேண்டும் என்கிற விருப்பத்தை மாணவர்களிடம் விதைத்தது. இப்போது, மாணவர்களும் சில தினங்களைத் தெரிந்துகொண்டு, வழிபாட்டுக் கூட்டத்தில் செய்தி வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நான் என் பள்ளி நாட்கள் திரும்புவதாக உணர்கிறேன்.
graphic தி இந்து ஆங்கிலம் தினசரி மின்னிதழ்
எல்லாப் புகழும் இந்துவுக்கே, விகடனுக்கே என்று நான் விடைபெற்றுக்கொள்ள விரும்பவில்லை. இந்துவும், விகடனும் இந்த முயற்சிகளில் தங்களைத் தன்னார்வமாக ஈடுபடுத்திக்கொண்டார்கள். தங்களின் வெளியீடுகளை அணுகுவதில் அனைவருக்குமான சம வாய்ப்பை வழங்க, இந்து மற்றும் விகடன் குழுமங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்குத் தலைவணங்குகிறேன். அதேசமயம், பிற தினசரிகள், வார, மாத இதழ் நடத்தும் பெரும்பாலான அச்சு ஊடகங்கள் இதுகுறித்தெல்லாம் சிந்தித்ததாகத் தெரியவில்லை. 2016 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டமோ, அனைத்துத் தகவல்களும் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் (accessible formats) வழங்கப்படுவதைக் கட்டாயமாக்கியிருக்கிறது. ஒரு பார்வை மாற்றுத்திறனாளி, ஒரு குறிப்பிட்ட இதழையோ, தினசரியையோ சந்தா செலுத்திப் படிக்க விரும்பினால், தொடர்புடைய நிறுவனம் அந்தப் பார்வையற்றவர் எளிதாக அணுகும் வடிவில் அதனை மாற்றித்தர வேண்டும் என்பது கட்டாயம். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், அந்தப்பணி அத்தனை கடினமானதாகவும் தோன்றவில்லை.
 இன்றைக்கு, அச்சு ஊடகங்களின் நிருபர்கள், எழுத்தாளர்கள், செய்தி ஆசிரியர்கள் எனப் பெரும்பாலோருக்கிடையே நிகழும் செய்திப் பரிமாற்றங்கள் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டே பகிரப்படுகின்றன. எனவே, அவற்றைத் திரைவாசிப்பான்களுக்கு உகந்த ஒருங்குறி/டெக்ஸ்ட் முறையில் மாற்றித்தருதல் எளிதான ஒன்று. ஆனாலும், இந்தியாவின் முன்னணி ஆங்கில வார இதழையே இணையத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளால் அணுகிப் படிக்க இயலவில்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை. இதுகுறித்து அச்சு ஊடகங்கள் மட்டுமல்ல, படைப்பாளர்கள், பதிப்பாளர்கள், என அனைவரும் சிந்திக்க முன்வர வேண்டும்.
 ஒரு பார்வையுள்ள வாசகனைப்போல், பார்வை மாற்றுத்திறனாளி வாசகனுக்கும், தான் நினைத்த மாத்திரத்தில், சமகால எழுத்துகளை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மலரோ, மணியோ, மாலையோ சூடிக்கொள்வதில் அவனுக்குப் பல தெரிவுகள் வேண்டும். அணுகளில் எளிமை என்பது அவனது அடிப்படை உரிமை. இதை சமூகத்தின் அனைத்துத் தரப்பும் உணர்ந்திடும் அந்தப் பொன்னாள் எந்நாளோ?
சரவணமணிகண்டன் ப.
தொடர்புகொள்ள: vaazhgavalluvam@gmail.com

2 comments:

  1. தங்கள் கனவு நிச்சயம் நிறைவேற வேண்டும் இந்த வாய்ப்பை படைப்பாளர்களும் பத்திரிகை நிறுவனங்களும் துணை நிற்கும்

    ReplyDelete