முகப்பு

அன்பு மனங்களின் ஆழம்

31 ஜூலை, 2020
graphic கோமதி குப்புசாமி
கோமதி குப்புசாமி
தனது மேல்நிலைக் கல்வியின் இறுதி நாட்களில் அந்தப் பெண்ணுக்கு ஒரு அழைப்பு வருகிறது. தன்னார்வ வாசிப்பாளராக ஒருமணி நேரம் வந்துவிட்டுப் போகவேண்டும். சரி போகலாம் என்று புறப்பட்டவர்தான் இன்னும் திரும்பவே இல்லை. அவர்தான் செல்வி கோமதி குப்புசாமி. பள்ளி கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வாசிப்பாளராகத் தொடங்கிய தனது பயணத்தை அவர் சேவை என்று சொல்லி சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. உண்மையில் பார்வையிழப்பு என்கிற தாங்கள் செய்யாத ஒரு பிழைக்காக அவர்கள் எவ்வளவு துன்பங்களை, தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களுக்காகச் செலவளிக்கிற ஒரே ஒருமணி நேரமும் எவ்வளவு அர்த்தம் பொதிந்தது எத்தனை மாற்றங்களை அவர்களின் வாழ்வில் அது உண்டாக்கும் என்ற எண்ணத்தால், அதையே தன் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாற்றிக்கொண்டுவிட்டார். பார்வை மாற்றுத்திறனாளிகளின் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கிக்கொண்டிருந்த கோமதி, தன் தோழி பிரவீனா மற்றும் பிரபு போன்ற வெளிநாடு வாழ் தமிழர்களோடு இணைந்து,  கரோனா ஊரடங்கினால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பார்வை மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிதி திரட்டி வழங்கியுள்ளார்.
 தமிழகம் எங்கிலும் பரவலாக 150 பார்வை மாற்றுத்திறனாளி குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களின் தேவையின் அடிப்படையில் ரூ. 1500 முதல் ரூ. 5000 வரை வழங்கியிருக்கிறார்கள். ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், இணையத்தென்றல் அறக்கட்டளை, பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்கள் பேரவை போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமை சார்ந்து செயல்பட்டுவரும் சங்கங்கள் மற்றும் அமைப்புகளோடு இணைந்து உரிய பயனாளிகளை அடையாளம் கண்டு, இணைய வங்கி சேவையின் வாயிலாகத் தங்களின் உதவியைக் கொண்டுசேர்த்துள்ளனர். இந்தியக் குடிமைப் பணிகள் என்கிற கனவைச் சுமந்தபடி, இரயிலில் வணிகம் செய்யும் பார்வையற்றோர் குறித்து ஏதேனும் செய்தாக வேண்டும் என்கிற எண்ணத்துடன் இருந்துள்ளார் கோமதி. அதே காலகட்டத்தில், கரோனா பேரிடர் காரணமாகத் தமிழகத்தில் முதல்கட்ட ஊரடங்கும் அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கினால் அதிகம் பாதிப்பை எதிர்கொள்ளும் அதே இரயில் வணிகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் இணைச்செயலர் திரு. சரவணமணிகண்டன் அவர்களின் கட்டுரையைப் படித்துவிட்டு, அதனைத் தன் தோழி பிரவீனாவிற்குப் பகிர்ந்ததாகவும், தன்னைவிட பிரவீனா இந்தச் செயலை முன்னெடுப்பதில் அதிக ஆர்வமும் செயலூக்கமும் கொண்டிருந்ததாகக் கூறுகிறார் கோமதி.
graphic பிரவீனா வரதராஜன்
பிரவீனா வரதராஜன்
“கோமதிபோல என் பள்ளி நாட்களில் பார்வையற்றோரைப் பற்றிய விழிப்புணர்வு இருந்திருந்தால்,  எவ்வளவோ செய்திருக்கலாம் என்பது இப்போது எனக்குள் ஒரு உறுத்தலாக இருக்கிறது” எனத் தன் பேச்சைத் தொடங்கும் பிரவீனா வரதராஜனின் சொந்த ஊர் சென்னை, கடந்த 13 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துவருகிறார். “சென்னையில், இரயில்வே ஸ்டேஷன்களில், ஆங்காங்கே தெருக்களில் பார்வையற்றோரைப் பார்த்திருக்கிறேன். எல்லோரையும் போலவே நானும் காசு கொடுப்பது, அவர்கள் விற்கும் பொருட்களை வாங்குவது என்றே கடந்திருக்கிறேன். மாறாக, அவர்கள் படிக்கிறார்கள், அவர்களுக்காகத் தேர்வெழுதலாம், வாசித்துக் காண்பிக்கலாம் என்றெல்லாம் எனக்குத் தோன்றியதே இல்லை. கோமதியின் அறிமுகத்திற்குப் பின்புதான், நாம் வாழ்வில் எவ்வளவு பெரிய விஷயத்தைத் தவறவிட்டிருக்கிறோம் என நினைத்துப் பார்க்கிறேன். அந்தவகையில், இப்போது நாங்கள் செய்திருப்பதெல்லாம் ஒன்றுமே இல்லை. இதற்கெல்லாம் ஒரு பேட்டி, புகைப்படம் என்று நினைத்தால்தான் குற்ற உணர்ச்சியாக இருக்கிறது” என அடிக்கடி கடிந்துகொள்கிறார்.
 “நான் தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டாலஸ் (Dallas) என்ற ஊரில் வசித்து வருகிறேன். இங்கு நம் ஊர்க்காரர்கள் அதிகம். முதலில் ஒரு பத்து குடும்பங்களுக்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்கலாம் என்றுதான் அனைவரிடமும் இந்த திட்டம் குறித்துப் பேசினேன். ஆனால், அவர்கள் அனைவருமே இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமா? இந்தத் தொகை இந்த மாதத்திற்குப் போதும், அடுத்தமாதம் என்ன செய்வார்கள் என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில், இங்குள்ள மக்கள் எவ்வளவு கொடுக்கவும் தயாராகவே இருக்கிறார்கள், அது உரியவர்களுக்குச் சரியாய்ப் போய்ச் சேருகிறது என்பதை நாம் அவர்களுக்கு உறுதிபடுத்திவிட்டால் போதும்” எனச் சொல்லும் பிரவீனா, இது பார்வையற்றோர் தொடர்பாக தனக்குக் கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பு என்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக, பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்துவதற்காக  தமிழ் ஃபவுன்டேஷன் என்கிற அமைப்போடு இணைந்து நிதி திரட்டி முடித்த நிலையில், கரோனா காலம் வந்துவிட்டதாகக் கவலையோடு சொல்கிறார்.
graphic கோமதி குப்புசாமி
“1500 அல்லது 3000 என்று தீர்மானம் செய்தபடி, இந்தக் குழுவின் எவரேனும் ஒருவர் உதவி தேவைப்படும் குடும்பத்தைத் தொடர்புகொண்டு பேசுவார். அவர்களின் இன்றைய கடினமான சூழலை உள்வாங்கிக்கொண்டு, அதற்கேற்ப 5000 6000 என்றெல்லாம் உதவிகளை உயர்த்தியும் வழங்கியிருக்கிறார்கள். “உங்களுக்கு பார்வை எப்போ போச்சு? கோயம்புத்தூர்ல ஒரு டாக்டர் இருக்கார். இந்த ஊரடங்கு முடிஞ்சதும் நாம அவர்கிட்ட போகலாம்” என்று ஒரு பயனாளர் குடும்பத்திடம், தானும் அந்தக் குடும்்பத்தில் ஒருவராகப் பேசியிருக்கிறார் பிரபு. “அண்ணா அந்தக் ஃபேமிலில மெம்பர்ஸ் அதிகமா இருக்காங்க, அதனால நான் 3000 பதிலா 5000 போட்டுட்டேன்” என்று நமக்குள் தயக்கத்தோடு அலைமோதிக்கொண்டிருந்த எண்ணத்தை போகிறபோக்கில் வெளித்தள்ளிவிட்டுப் போவார் கோமதி. “நீங்க பயனாளிங்ககிட்ட பேசுனீங்களா?” என பிரவீனாவிடம் கேட்டால், அவரிடம் இருந்து வரும் பதில் இதுதான், “நான் என்ன பிரமாதமா செஞ்சிட்டேனு அவுங்ககிட்ட பேசணும்? அதுதான் கோமதி பேசுறாங்களே அதுவே போதுமானது. அவுங்க பேசி, அப்புறம் நானும் பேசி, இந்த நேரத்தில அந்தக் குடும்பம் அதை ஒரு கிராஸ் செக்குனுகூட நினைக்க வாய்ப்பிருக்கு. என்னடா ஒரு உதவி தாரதுக்கு இத்தனைபேர் பேசுறாங்களேனும் அவுங்க வருத்தப்படக் கூடாது. இன்னும் செய்யுறதுக்கு நிறைய இருக்கு, இப்போதைக்கு மீன் வாங்கிக்கொடுத்திருக்கோம், உண்மையான உதவிங்கிறது மீன் பிடிக்கச் சொல்லித்தருவதுதானே” என்கிறார்.
கரோனா ஊரடங்குக்குப் பின்னான காலகட்டம், பார்வையற்றோரிடம் எந்தவகையிலெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இவர்கள் முன்கூட்டியே யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதிலும், ஊரடங்கிற்குப் பிந்தைய நாட்களிலும்கூட வேறு எந்த தொழிலும் செய்து ஊதியம் ஈட்ட இயலாத பார்வை மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆக்கபூர்வமாய் ஏதேனும் செய்ய நினைக்கிறார்கள். அத்தோடு, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இயன்றவரை பங்காற்றுவதே தங்களின் முதன்மையான குறிக்கோள் என ஒருசேரச் சொல்கிறார்கள் தோழியர் இருவரும்.
graphic பிரவீனா வரதராஜன்
தங்களை நாடிவரும் நபர்களின் இருசக்கரவாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டிக்கொடுத்துப் பிழைப்பு நடத்திவருபவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற சகோதரர்கள். தந்தையை இழந்து,தாயோடு வாழும்  இவர்களுக்கு இணையத்தென்றல் அறக்கட்டளையின் பரிந்துரைப்படி உதவி சென்று சேர்ந்திருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் மூவர் பார்வையற்றவர்கள். அவர்களின் தந்தைக்கும் வெண்புள்ளிநோய். பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் திரு. முருகானந்்தம் அவர்களின் பரிந்துரையின்படி,அவர்களுக்கு உதவி சென்று சேர்ந்திருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் அக்கா பார்வையற்றவர், தம்பி உடல்ச்சவால் மாற்றுத்திறனாளி, தங்கை மனநலம் பாதிக்கப்பட்டவர், வயதான பெற்றோரின் அன்றாட உழைப்பையே நம்பியிருந்த அந்தக் குடும்பம் கரோனா ஊரடங்கால் நிலைகுலைந்து போனது. ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் பரிந்துரையை உடனுக்குடன் பரிசீலித்து அந்தக் குடும்்பத்திற்கு உதவியைக் கொண்டுசேர்த்திருக்கிறார்கள் ... இந்த இடத்தில் இந்தக் குழுவினரின் பெயரை இட்டு நிரப்பினால்தான் வாக்கியம் முற்றுபெறும் என்பது புரிகிறது. ஆனால், இந்தச் சூழல் அமைகிற இந்த நிமிடம்வரைக்கும் அந்தக் குழுவுக்கு ஒரு பெயர்கூட அவர்கள் சூட்டிக்கொள்ளவில்லை என்பதும், அதுகூட விளம்பரமாகிவிடக்கூடாது என்கிற அவர்களின் எச்சரிக்கை உணர்வும் எங்களை மேலும் நெகிழ்த்துகிறது. இருப்பினும், நமக்காக உழைப்பவர்களின் குரலை, நமது முன்னேற்றத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் நிபந்தனையற்ற உள்ளார்ந்த வாஞ்சையை ஆவணப்படுத்துதல் அவசியம் எனக் கருதினோம். எனவே அவர்களின் பிடிவாதத்தை எங்களின் அன்பான தொடர் வலியுறுத்தல்களால் முடிவுக்குக் கொண்டுவந்து, சூம் (Zoom) வழியாக இருவரிடமும் ஒருமணிநேரம் உரையாடி அதைக் காணொளியாகவும் பதிவு செய்திருக்கிறோம். இவர்கள், நாம் முகமறியாத பல நல்லுள்ளங்களின் பிரதிநிதிகள்.
ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள், குழுக்களுக்குள்ளேயே  பல குழுக்கள் என இந்த ஊரடங்கு காலத்தில் பார்வையற்ற சமூகத்தின் வறுமை போக்க முன்வந்த வெளிநாடு வாழ் தமிழர்களின் அன்புள்ளம், அவர்கள் திரவியம் தேடத் தாண்டிச் சென்ற அந்தத் திரைகடலினும் ஆழமானது.
ஆசிரியர்க்குழு
தொடர்புகொள்ள: savaalmurasu@gmail.com

2 comments:

  1. அவர்களது முயற்சியால் உருவான பெரியார் அன்றும் இன்றும் என்னும் ஒளி புத்தகத்தைப் பற்றியும் இந்த பதிவில் பேசி இருந்திருக்கலாம்.
    ஒருவேளை இப்போது இந்த உதவிகளை மட்டும் பேசலாம் என்று நீங்கள் நினைத்திருக்கக் கூடும்.
    எப்படி இருந்தாலும் இவர்களைப்பற்றி ஒரு நேர்காணல் மூலமாக மிகச் சிறப்பான ஒரு பதிவினை கொடுத்திருக்கும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
    சிறப்பு பள்ளிகளின் மீது குறிப்பாக அரசு சிறப்பு பள்ளிகள் மீது கவனம் கொண்டிருக்கும் இவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் ‌

    ReplyDelete
  2. உண்மையில் இவர்களைப்போன்ற மனிதர்கள் செயல் வெறும் வார்த்தைகளில் சொல்ல முடியாது

    ReplyDelete