முகப்பு

Showing posts with label society. Show all posts
Showing posts with label society. Show all posts

அன்பு மனங்களின் ஆழம்

31 ஜூலை, 2020
graphic கோமதி குப்புசாமி
கோமதி குப்புசாமி
தனது மேல்நிலைக் கல்வியின் இறுதி நாட்களில் அந்தப் பெண்ணுக்கு ஒரு அழைப்பு வருகிறது. தன்னார்வ வாசிப்பாளராக ஒருமணி நேரம் வந்துவிட்டுப் போகவேண்டும். சரி போகலாம் என்று புறப்பட்டவர்தான் இன்னும் திரும்பவே இல்லை. அவர்தான் செல்வி கோமதி குப்புசாமி. பள்ளி கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வாசிப்பாளராகத் தொடங்கிய தனது பயணத்தை அவர் சேவை என்று சொல்லி சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. உண்மையில் பார்வையிழப்பு என்கிற தாங்கள் செய்யாத ஒரு பிழைக்காக அவர்கள் எவ்வளவு துன்பங்களை, தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களுக்காகச் செலவளிக்கிற ஒரே ஒருமணி நேரமும் எவ்வளவு அர்த்தம் பொதிந்தது எத்தனை மாற்றங்களை அவர்களின் வாழ்வில் அது உண்டாக்கும் என்ற எண்ணத்தால், அதையே தன் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே மாற்றிக்கொண்டுவிட்டார். பார்வை மாற்றுத்திறனாளிகளின் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கிக்கொண்டிருந்த கோமதி, தன் தோழி பிரவீனா மற்றும் பிரபு போன்ற வெளிநாடு வாழ் தமிழர்களோடு இணைந்து,  கரோனா ஊரடங்கினால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பார்வை மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிதி திரட்டி வழங்கியுள்ளார்.
 தமிழகம் எங்கிலும் பரவலாக 150 பார்வை மாற்றுத்திறனாளி குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களின் தேவையின் அடிப்படையில் ரூ. 1500 முதல் ரூ. 5000 வரை வழங்கியிருக்கிறார்கள். ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், இணையத்தென்றல் அறக்கட்டளை, பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்கள் பேரவை போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமை சார்ந்து செயல்பட்டுவரும் சங்கங்கள் மற்றும் அமைப்புகளோடு இணைந்து உரிய பயனாளிகளை அடையாளம் கண்டு, இணைய வங்கி சேவையின் வாயிலாகத் தங்களின் உதவியைக் கொண்டுசேர்த்துள்ளனர். இந்தியக் குடிமைப் பணிகள் என்கிற கனவைச் சுமந்தபடி, இரயிலில் வணிகம் செய்யும் பார்வையற்றோர் குறித்து ஏதேனும் செய்தாக வேண்டும் என்கிற எண்ணத்துடன் இருந்துள்ளார் கோமதி. அதே காலகட்டத்தில், கரோனா பேரிடர் காரணமாகத் தமிழகத்தில் முதல்கட்ட ஊரடங்கும் அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கினால் அதிகம் பாதிப்பை எதிர்கொள்ளும் அதே இரயில் வணிகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் இணைச்செயலர் திரு. சரவணமணிகண்டன் அவர்களின் கட்டுரையைப் படித்துவிட்டு, அதனைத் தன் தோழி பிரவீனாவிற்குப் பகிர்ந்ததாகவும், தன்னைவிட பிரவீனா இந்தச் செயலை முன்னெடுப்பதில் அதிக ஆர்வமும் செயலூக்கமும் கொண்டிருந்ததாகக் கூறுகிறார் கோமதி.
graphic பிரவீனா வரதராஜன்
பிரவீனா வரதராஜன்
“கோமதிபோல என் பள்ளி நாட்களில் பார்வையற்றோரைப் பற்றிய விழிப்புணர்வு இருந்திருந்தால்,  எவ்வளவோ செய்திருக்கலாம் என்பது இப்போது எனக்குள் ஒரு உறுத்தலாக இருக்கிறது” எனத் தன் பேச்சைத் தொடங்கும் பிரவீனா வரதராஜனின் சொந்த ஊர் சென்னை, கடந்த 13 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துவருகிறார். “சென்னையில், இரயில்வே ஸ்டேஷன்களில், ஆங்காங்கே தெருக்களில் பார்வையற்றோரைப் பார்த்திருக்கிறேன். எல்லோரையும் போலவே நானும் காசு கொடுப்பது, அவர்கள் விற்கும் பொருட்களை வாங்குவது என்றே கடந்திருக்கிறேன். மாறாக, அவர்கள் படிக்கிறார்கள், அவர்களுக்காகத் தேர்வெழுதலாம், வாசித்துக் காண்பிக்கலாம் என்றெல்லாம் எனக்குத் தோன்றியதே இல்லை. கோமதியின் அறிமுகத்திற்குப் பின்புதான், நாம் வாழ்வில் எவ்வளவு பெரிய விஷயத்தைத் தவறவிட்டிருக்கிறோம் என நினைத்துப் பார்க்கிறேன். அந்தவகையில், இப்போது நாங்கள் செய்திருப்பதெல்லாம் ஒன்றுமே இல்லை. இதற்கெல்லாம் ஒரு பேட்டி, புகைப்படம் என்று நினைத்தால்தான் குற்ற உணர்ச்சியாக இருக்கிறது” என அடிக்கடி கடிந்துகொள்கிறார்.
 “நான் தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டாலஸ் (Dallas) என்ற ஊரில் வசித்து வருகிறேன். இங்கு நம் ஊர்க்காரர்கள் அதிகம். முதலில் ஒரு பத்து குடும்பங்களுக்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்கலாம் என்றுதான் அனைவரிடமும் இந்த திட்டம் குறித்துப் பேசினேன். ஆனால், அவர்கள் அனைவருமே இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமா? இந்தத் தொகை இந்த மாதத்திற்குப் போதும், அடுத்தமாதம் என்ன செய்வார்கள் என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில், இங்குள்ள மக்கள் எவ்வளவு கொடுக்கவும் தயாராகவே இருக்கிறார்கள், அது உரியவர்களுக்குச் சரியாய்ப் போய்ச் சேருகிறது என்பதை நாம் அவர்களுக்கு உறுதிபடுத்திவிட்டால் போதும்” எனச் சொல்லும் பிரவீனா, இது பார்வையற்றோர் தொடர்பாக தனக்குக் கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பு என்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக, பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்துவதற்காக  தமிழ் ஃபவுன்டேஷன் என்கிற அமைப்போடு இணைந்து நிதி திரட்டி முடித்த நிலையில், கரோனா காலம் வந்துவிட்டதாகக் கவலையோடு சொல்கிறார்.
graphic கோமதி குப்புசாமி
“1500 அல்லது 3000 என்று தீர்மானம் செய்தபடி, இந்தக் குழுவின் எவரேனும் ஒருவர் உதவி தேவைப்படும் குடும்பத்தைத் தொடர்புகொண்டு பேசுவார். அவர்களின் இன்றைய கடினமான சூழலை உள்வாங்கிக்கொண்டு, அதற்கேற்ப 5000 6000 என்றெல்லாம் உதவிகளை உயர்த்தியும் வழங்கியிருக்கிறார்கள். “உங்களுக்கு பார்வை எப்போ போச்சு? கோயம்புத்தூர்ல ஒரு டாக்டர் இருக்கார். இந்த ஊரடங்கு முடிஞ்சதும் நாம அவர்கிட்ட போகலாம்” என்று ஒரு பயனாளர் குடும்பத்திடம், தானும் அந்தக் குடும்்பத்தில் ஒருவராகப் பேசியிருக்கிறார் பிரபு. “அண்ணா அந்தக் ஃபேமிலில மெம்பர்ஸ் அதிகமா இருக்காங்க, அதனால நான் 3000 பதிலா 5000 போட்டுட்டேன்” என்று நமக்குள் தயக்கத்தோடு அலைமோதிக்கொண்டிருந்த எண்ணத்தை போகிறபோக்கில் வெளித்தள்ளிவிட்டுப் போவார் கோமதி. “நீங்க பயனாளிங்ககிட்ட பேசுனீங்களா?” என பிரவீனாவிடம் கேட்டால், அவரிடம் இருந்து வரும் பதில் இதுதான், “நான் என்ன பிரமாதமா செஞ்சிட்டேனு அவுங்ககிட்ட பேசணும்? அதுதான் கோமதி பேசுறாங்களே அதுவே போதுமானது. அவுங்க பேசி, அப்புறம் நானும் பேசி, இந்த நேரத்தில அந்தக் குடும்பம் அதை ஒரு கிராஸ் செக்குனுகூட நினைக்க வாய்ப்பிருக்கு. என்னடா ஒரு உதவி தாரதுக்கு இத்தனைபேர் பேசுறாங்களேனும் அவுங்க வருத்தப்படக் கூடாது. இன்னும் செய்யுறதுக்கு நிறைய இருக்கு, இப்போதைக்கு மீன் வாங்கிக்கொடுத்திருக்கோம், உண்மையான உதவிங்கிறது மீன் பிடிக்கச் சொல்லித்தருவதுதானே” என்கிறார்.
கரோனா ஊரடங்குக்குப் பின்னான காலகட்டம், பார்வையற்றோரிடம் எந்தவகையிலெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இவர்கள் முன்கூட்டியே யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதிலும், ஊரடங்கிற்குப் பிந்தைய நாட்களிலும்கூட வேறு எந்த தொழிலும் செய்து ஊதியம் ஈட்ட இயலாத பார்வை மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆக்கபூர்வமாய் ஏதேனும் செய்ய நினைக்கிறார்கள். அத்தோடு, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இயன்றவரை பங்காற்றுவதே தங்களின் முதன்மையான குறிக்கோள் என ஒருசேரச் சொல்கிறார்கள் தோழியர் இருவரும்.
graphic பிரவீனா வரதராஜன்
தங்களை நாடிவரும் நபர்களின் இருசக்கரவாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டிக்கொடுத்துப் பிழைப்பு நடத்திவருபவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற சகோதரர்கள். தந்தையை இழந்து,தாயோடு வாழும்  இவர்களுக்கு இணையத்தென்றல் அறக்கட்டளையின் பரிந்துரைப்படி உதவி சென்று சேர்ந்திருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் மூவர் பார்வையற்றவர்கள். அவர்களின் தந்தைக்கும் வெண்புள்ளிநோய். பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் திரு. முருகானந்்தம் அவர்களின் பரிந்துரையின்படி,அவர்களுக்கு உதவி சென்று சேர்ந்திருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் அக்கா பார்வையற்றவர், தம்பி உடல்ச்சவால் மாற்றுத்திறனாளி, தங்கை மனநலம் பாதிக்கப்பட்டவர், வயதான பெற்றோரின் அன்றாட உழைப்பையே நம்பியிருந்த அந்தக் குடும்பம் கரோனா ஊரடங்கால் நிலைகுலைந்து போனது. ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் பரிந்துரையை உடனுக்குடன் பரிசீலித்து அந்தக் குடும்்பத்திற்கு உதவியைக் கொண்டுசேர்த்திருக்கிறார்கள் ... இந்த இடத்தில் இந்தக் குழுவினரின் பெயரை இட்டு நிரப்பினால்தான் வாக்கியம் முற்றுபெறும் என்பது புரிகிறது. ஆனால், இந்தச் சூழல் அமைகிற இந்த நிமிடம்வரைக்கும் அந்தக் குழுவுக்கு ஒரு பெயர்கூட அவர்கள் சூட்டிக்கொள்ளவில்லை என்பதும், அதுகூட விளம்பரமாகிவிடக்கூடாது என்கிற அவர்களின் எச்சரிக்கை உணர்வும் எங்களை மேலும் நெகிழ்த்துகிறது. இருப்பினும், நமக்காக உழைப்பவர்களின் குரலை, நமது முன்னேற்றத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் நிபந்தனையற்ற உள்ளார்ந்த வாஞ்சையை ஆவணப்படுத்துதல் அவசியம் எனக் கருதினோம். எனவே அவர்களின் பிடிவாதத்தை எங்களின் அன்பான தொடர் வலியுறுத்தல்களால் முடிவுக்குக் கொண்டுவந்து, சூம் (Zoom) வழியாக இருவரிடமும் ஒருமணிநேரம் உரையாடி அதைக் காணொளியாகவும் பதிவு செய்திருக்கிறோம். இவர்கள், நாம் முகமறியாத பல நல்லுள்ளங்களின் பிரதிநிதிகள்.
ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள், குழுக்களுக்குள்ளேயே  பல குழுக்கள் என இந்த ஊரடங்கு காலத்தில் பார்வையற்ற சமூகத்தின் வறுமை போக்க முன்வந்த வெளிநாடு வாழ் தமிழர்களின் அன்புள்ளம், அவர்கள் திரவியம் தேடத் தாண்டிச் சென்ற அந்தத் திரைகடலினும் ஆழமானது.
ஆசிரியர்க்குழு
தொடர்புகொள்ள: savaalmurasu@gmail.com

களப்பணி வீரனுக்கு இதழின் அஞ்சலி

30 ஜூன், 2020
graphic நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்
இந்தியப் பார்வையற்றோர் முற்போக்கு சங்கத்தின் தலைவர் திரு. A.K. அருணாச்சலம் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் கரோனா தொற்றுக்குப் பலியாகியிருக்கிறார்கள். அறுபதுகளில் இருக்கும் அருணாச்சலம், தன் வாழ்நாளின் இறுதிவரை பார்வையற்றோர் தொடர்பான களப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.
graphic களப்பணியில் ஈடுபட்டிருக்கும் அருணாச்சலம் மற்றும் அவர் மனைவி கீதா
ஊரடங்கினால் வருமானம் இழந்து தவித்த சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த பார்வையற்ற குடும்பங்களுக்கு ஓடோடி உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தவர். அவருடைய களப்பணிகளில் அவருடைய மனைவியும் எப்போதும் உடன் இருப்பதையும் நம்மால் பார்க்க முடியும். அவர்களின் இடைவிடாத கலப்பணியில் தொற்றை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பது தெரியவில்லை.
எப்போதும் அவர் நலிவடைந்த பார்வையற்றவர்கள் தொடர்பாகவே சிந்தித்திருக்கிறார். முன்னால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. சீதாராம் கேசரி மற்றும் அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, மக்களவை உறுப்பினராக இருந்த தனுஷ்கொடி ஆதித்தன் போன்ற அரசியல் பிரமுகர்களிடம் நெருக்கமான உறவைப் பேணியிருக்கிறார். தமிழகப் போக்குவரத்து கழகத்தின் மாற்றுத்திறனாளிகள் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.
கரோனா ஊரடங்கு காலம் பார்வையற்ற சமூகத்தின் களப்பணியையும், தன் சமூகத்தின் மீது சக பார்வையற்றவர்கள் கொண்டிருக்கிற உள்ளார்ந்த அன்பையும் உலகத்திற்குப் பறைசாற்றியிருக்கிறது. பார்வையற்றவர்களால் தனிமனித இடைவெளி கடைபிடித்தல் கடினம் என்பதும், அதனால் அவர்கள் எளிதில் தொற்றுக்குள்ளாவார்கள் என்பதையும் அறிந்திருந்தும், ஐயா அருணாச்சலம் அவர்கள் தன் உயிரைக் களப்பணியில் கரைத்திருக்கிறார். அவருக்கு ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகள் சார்பில், சவால்முரசு தனது இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இதழின் முதல் தலையங்கமே, ஐயாவிற்கான அஞ்சலியாக அமைவதில் பெருமிதம் கொள்கிறது சவால்முரசு.

விரைவான நீதி வேண்டும், விளிம்புநிலை மனிதர்க்கெல்லாம்

ஜூன் 30, 2020
graphic மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்ற செய்தியைத் தாங்கிய இந்து தமிழ்த்திசையின் மின்னிதழ் பக்கம்
அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35  லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணமாக ரூ. 1000 வழங்கப்படும்  என தமிழக முதல்வர் அவர்களால் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஊரடங்கு கால நிவாரணமாக ரூ. 5000 கேட்டுப் போராடியவர்களுக்கு ரூ. 1000 என்பது போதாத தொகைதான் என்றாலும், முதல்வரின் இந்த அறிவிப்பை ஒரு துவக்கமாகவும், தங்களின் தொடர் வலியுறுத்தல்களுக்குக் கிடைத்திருக்கிற சிறிய வெற்றியாகவும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்கள் கருதுகின்றன.
graphic டாராட்டாக் சங்க போராட்டம்

முதல் மற்றும் இரண்டாம் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டதிலிருந்தே, ஊரடங்கு கால நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5000 வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையினை மிகத் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர் பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கத்தினர்.  இந்தக் கோரிக்கையினை அழுத்தமாக முன்வைக்கும் வகையில், கடந்த மே 7 அன்று, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தினை மாநிலம் தழுவிய அளவில் முன்னெடுத்தது. இந்நிலையில், இச்சங்கத்துடன் ஏனைய சங்கங்களும் இணைந்து, மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டு இயக்கம் என்ற பெயரில் கடந்த ஜூன் 10 முதல் காலவரையற்ற குடியேறும் போராட்டத்தை அறிவித்துப் பின்னர் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதனைத் தற்காளிகமாக ஒத்திப்போடுவதாக அறிவித்தனர். பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கமும் இதே கோரிக்கையினைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கடந்த மூன்று ஊரடங்கு காலங்களில் இதுபோன்ற அறிவிப்புகளைச் செய்யாது, இந்த நான்காவது ஊரடங்கு காலத்தில் முதல்வர் இந்த அறிவிப்பினை வெளியிட்டதன் பின்னணியில் வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது.
graphic ஊரடங்கு நிவாரணம் கேட்டு திருநின்றவூரில் சாலை மரியல் செய்த பார்வையற்றோர்
சில நாட்களுக்கு முன்பு, திருநின்றவூரைச் சேர்ந்த இரயிலில் வணிகம் செய்யும் பார்வையற்றோர் தங்களுக்குக் கரோனா ஊரடங்கு நிவாரணமாக அரசு மாதம் 10000 வழங்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டதை அனைவரும் அறிவோம். ஆனால், செய்தித் தொலைக்காட்சிகள் சொல்லத் தவறிய வேறொரு கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தார்கள். அதாவது, இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தங்கள் சார்பில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்பதே அது. இந்தக் கோரிக்கையினை வலியுறுத்தி, 40 பார்வையற்றவர்கள் அடுத்தநாள் உயர்நீதிமன்றத்தின் வாசலில் அமர்ந்து அமைதி வழியில் போராடியதாகவும் சொல்லப்படுகிறது.
graphic வழக்கு
 இரயில் வணிகம் செய்வோரின் சார்பில் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்ததில் முன்நின்றவர்  செங்கள்பட்டு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுவரும் இரண்டாம் ஆண்டு மாணவர் புகழேந்தி. இவரும் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. தான் உலகளாவிய மாற்றுத்திறனாளிகள் மையம் என்ற அமைப்பினை நடத்திவருவதாகவும், அதன் பெயரில் இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதாகவும் கூறுகிறார் புகழேந்தி. கடந்த ஜூன் 15 திங்களன்று வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே, டிசம்பர் 3 இயக்கமும், பார்வையற்றோர் அமைப்பும் இணைந்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் முதல்வர் நிவாரண நிதியில் நான்கு விழுக்காட்டினை ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகச் செலவிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்று சேர்த்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட தமிழக அரசுத் தரப்பிற்கு ஜூன் 17ஆம் தேதி இன்று பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு இன்று விசாரனைக்கு வரவுள்ளது.
graphic சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள மனுநீதிச்சோழனின் சிலை
 இதுகுறித்துசட்டக் கல்லூரி மாணவர் திரு. புகழேந்தியிடம் பேசினோம். அரசு ரூ. 1000 அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும், அதேநேரத்தில் இது ஒப்பீட்டளவில் மிகக் குறைவான தொகை என்கிறார் புகழேந்தி. மேலும், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாமுழுவதுமே பார்வையற்றவர்கள் இரயிலில் வணிகம் செய்து பிழைத்து வருகிறார்கள். இப்படி வணிகம் செய்வோரில் 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் அரசுப்பணியை எதிர்நோக்கியிருக்கும் பட்டதாரிகளே. ஒவ்வொரு துறையிலும் காணப்படும் பின்னடைவுக் காலிப்பணியிடங்களைக் கண்டறிந்து, பார்வையற்றோருக்கான இட ஒதுக்கீட்டை முறையாகவும் முழுமையாகவும் அமல்ப்படுத்தியிருந்தாலே, இன்று எங்களில் பலர் இந்த நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம்” என வேதனைப்படுகிறார். இந்தப் பேரிடர் காலத்தில் ஒருவேளைக் கஞ்சிக்கும் வழியற்றவர்களாய் பல பார்வையற்றவர்களை உருவாக்கியதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மிகப் பெரிய பங்கிருப்பதாகக் குற்றம் சாட்டும் அவர், நீண்ட நோக்கிலான தீர்வுகளையே இரயில் வணிகம் செய்யும் ஆயிரக்கணக்கான பார்வையற்றவர்கள் அரசிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள் என்கிறார்.
graphic ரயிலில் வணிகம் செய்யும் பார்வையற்ற பெண்கள்
 புகழேந்தியின் முறையீடு வெறும் அரசுப்பணி என்பதோடு நிற்கவில்லை. பார்வையற்ற இரயில் வணிகர்களின் தலைமுறை தாண்டிய கோரிக்கைகளான இரயிலில் வணிகம் செய்யும் பார்வையற்றவர்களைக் கணக்கெடுத்தல், அவர்களை அங்கீகரித்தல், அவர்களுக்கு மத்திய இரயில்வே துறையின் அடையாள அட்டை வழங்கப்படுதல் போன்றவற்றை நீதிமன்றத்தின்கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இதனை சட்ட ரீதியிலான போராட்டமாக முன்னெடுக்கும்பொருட்டு, தனது அமைப்பின் சார்பில் இணையவழியில் ஒரு கணக்கெடுப்பையும்  நடத்திவருகிறார்.
சாலைகளில் கோஷங்களாய் எதிரொளித்த சாமானியர்களின் உரிமைக்குரல், சட்டத்திடலில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நடவடிக்கையில், அரசின் அலட்சியம் ஏற்படுத்திய காலவிரையத்தையும் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டு, விரைவான தீர்ப்பினை வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளி சமூகத்தின் எதிர்பார்ப்பு.
விரைவான நீதி வேண்டும், விளிம்புநிலை மனிதர்க்கெல்லாம்.