முகப்பு

விரைவான நீதி வேண்டும், விளிம்புநிலை மனிதர்க்கெல்லாம்

ஜூன் 30, 2020
graphic மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்ற செய்தியைத் தாங்கிய இந்து தமிழ்த்திசையின் மின்னிதழ் பக்கம்
அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35  லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணமாக ரூ. 1000 வழங்கப்படும்  என தமிழக முதல்வர் அவர்களால் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஊரடங்கு கால நிவாரணமாக ரூ. 5000 கேட்டுப் போராடியவர்களுக்கு ரூ. 1000 என்பது போதாத தொகைதான் என்றாலும், முதல்வரின் இந்த அறிவிப்பை ஒரு துவக்கமாகவும், தங்களின் தொடர் வலியுறுத்தல்களுக்குக் கிடைத்திருக்கிற சிறிய வெற்றியாகவும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்கள் கருதுகின்றன.
graphic டாராட்டாக் சங்க போராட்டம்

முதல் மற்றும் இரண்டாம் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டதிலிருந்தே, ஊரடங்கு கால நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5000 வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையினை மிகத் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர் பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கத்தினர்.  இந்தக் கோரிக்கையினை அழுத்தமாக முன்வைக்கும் வகையில், கடந்த மே 7 அன்று, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தினை மாநிலம் தழுவிய அளவில் முன்னெடுத்தது. இந்நிலையில், இச்சங்கத்துடன் ஏனைய சங்கங்களும் இணைந்து, மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டு இயக்கம் என்ற பெயரில் கடந்த ஜூன் 10 முதல் காலவரையற்ற குடியேறும் போராட்டத்தை அறிவித்துப் பின்னர் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதனைத் தற்காளிகமாக ஒத்திப்போடுவதாக அறிவித்தனர். பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கமும் இதே கோரிக்கையினைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கடந்த மூன்று ஊரடங்கு காலங்களில் இதுபோன்ற அறிவிப்புகளைச் செய்யாது, இந்த நான்காவது ஊரடங்கு காலத்தில் முதல்வர் இந்த அறிவிப்பினை வெளியிட்டதன் பின்னணியில் வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது.
graphic ஊரடங்கு நிவாரணம் கேட்டு திருநின்றவூரில் சாலை மரியல் செய்த பார்வையற்றோர்
சில நாட்களுக்கு முன்பு, திருநின்றவூரைச் சேர்ந்த இரயிலில் வணிகம் செய்யும் பார்வையற்றோர் தங்களுக்குக் கரோனா ஊரடங்கு நிவாரணமாக அரசு மாதம் 10000 வழங்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டதை அனைவரும் அறிவோம். ஆனால், செய்தித் தொலைக்காட்சிகள் சொல்லத் தவறிய வேறொரு கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தார்கள். அதாவது, இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தங்கள் சார்பில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்பதே அது. இந்தக் கோரிக்கையினை வலியுறுத்தி, 40 பார்வையற்றவர்கள் அடுத்தநாள் உயர்நீதிமன்றத்தின் வாசலில் அமர்ந்து அமைதி வழியில் போராடியதாகவும் சொல்லப்படுகிறது.
graphic வழக்கு
 இரயில் வணிகம் செய்வோரின் சார்பில் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்ததில் முன்நின்றவர்  செங்கள்பட்டு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுவரும் இரண்டாம் ஆண்டு மாணவர் புகழேந்தி. இவரும் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. தான் உலகளாவிய மாற்றுத்திறனாளிகள் மையம் என்ற அமைப்பினை நடத்திவருவதாகவும், அதன் பெயரில் இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதாகவும் கூறுகிறார் புகழேந்தி. கடந்த ஜூன் 15 திங்களன்று வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே, டிசம்பர் 3 இயக்கமும், பார்வையற்றோர் அமைப்பும் இணைந்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் முதல்வர் நிவாரண நிதியில் நான்கு விழுக்காட்டினை ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகச் செலவிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்று சேர்த்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட தமிழக அரசுத் தரப்பிற்கு ஜூன் 17ஆம் தேதி இன்று பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு இன்று விசாரனைக்கு வரவுள்ளது.
graphic சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள மனுநீதிச்சோழனின் சிலை
 இதுகுறித்துசட்டக் கல்லூரி மாணவர் திரு. புகழேந்தியிடம் பேசினோம். அரசு ரூ. 1000 அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும், அதேநேரத்தில் இது ஒப்பீட்டளவில் மிகக் குறைவான தொகை என்கிறார் புகழேந்தி. மேலும், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாமுழுவதுமே பார்வையற்றவர்கள் இரயிலில் வணிகம் செய்து பிழைத்து வருகிறார்கள். இப்படி வணிகம் செய்வோரில் 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் அரசுப்பணியை எதிர்நோக்கியிருக்கும் பட்டதாரிகளே. ஒவ்வொரு துறையிலும் காணப்படும் பின்னடைவுக் காலிப்பணியிடங்களைக் கண்டறிந்து, பார்வையற்றோருக்கான இட ஒதுக்கீட்டை முறையாகவும் முழுமையாகவும் அமல்ப்படுத்தியிருந்தாலே, இன்று எங்களில் பலர் இந்த நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம்” என வேதனைப்படுகிறார். இந்தப் பேரிடர் காலத்தில் ஒருவேளைக் கஞ்சிக்கும் வழியற்றவர்களாய் பல பார்வையற்றவர்களை உருவாக்கியதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மிகப் பெரிய பங்கிருப்பதாகக் குற்றம் சாட்டும் அவர், நீண்ட நோக்கிலான தீர்வுகளையே இரயில் வணிகம் செய்யும் ஆயிரக்கணக்கான பார்வையற்றவர்கள் அரசிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள் என்கிறார்.
graphic ரயிலில் வணிகம் செய்யும் பார்வையற்ற பெண்கள்
 புகழேந்தியின் முறையீடு வெறும் அரசுப்பணி என்பதோடு நிற்கவில்லை. பார்வையற்ற இரயில் வணிகர்களின் தலைமுறை தாண்டிய கோரிக்கைகளான இரயிலில் வணிகம் செய்யும் பார்வையற்றவர்களைக் கணக்கெடுத்தல், அவர்களை அங்கீகரித்தல், அவர்களுக்கு மத்திய இரயில்வே துறையின் அடையாள அட்டை வழங்கப்படுதல் போன்றவற்றை நீதிமன்றத்தின்கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இதனை சட்ட ரீதியிலான போராட்டமாக முன்னெடுக்கும்பொருட்டு, தனது அமைப்பின் சார்பில் இணையவழியில் ஒரு கணக்கெடுப்பையும்  நடத்திவருகிறார்.
சாலைகளில் கோஷங்களாய் எதிரொளித்த சாமானியர்களின் உரிமைக்குரல், சட்டத்திடலில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நடவடிக்கையில், அரசின் அலட்சியம் ஏற்படுத்திய காலவிரையத்தையும் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டு, விரைவான தீர்ப்பினை வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளி சமூகத்தின் எதிர்பார்ப்பு.
விரைவான நீதி வேண்டும், விளிம்புநிலை மனிதர்க்கெல்லாம்.

No comments:

Post a Comment