முகப்பு

Showing posts with label law. Show all posts
Showing posts with label law. Show all posts

சட்ட திருத்தம் இல்லை, நீதித் திரிப்பு

31 ஜூலை, 2020
graphic செயற்கைக்கால்
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நூறு நாட்கள் கடந்த பின்னும், அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு, மத்திய மாநில அரசுகள் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. மாற்றுத்திறனாளி அமைப்புகளின் தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் மற்றும் சட்டப் போராட்டத்தின் விளைவாக, தற்போது தமிழக அரசு அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து அதனை வினியோகிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். தெளுங்கானா உயர்நீதிமன்றமோ, மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை ஏற்படுத்தி அவர்களுக்கு உடனடியாக நிதி வழங்கிடுமாறு அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. நடுவண் அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ. 1000 உதவி, இன்னும் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளைச் சென்றுசேரவே இல்லை. நிலமை இப்படியிருக்க, ஆக்கபூர்வமானது எனத் தான் நம்பும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஒரு அர்த்தமற்ற செயலைத் தீவிரமாக கையிலெடுத்திருக்கிறது நடுவண் அரசு.
‘குற்றமும் தண்டனையும்’  என்றவுடன் உங்களின் நினைவுக்கு வருவது என்ன? காஃப்காவின் புகழ்பெற்ற நாவல் என்றோ, விதார்த் நடித்த திரைப்படம் என்றோ நீங்கள் பதில்சொல்லக்கூடும். ஆனால், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காய் போராடும் அமைப்பைச் சார்ந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.  இது, நடுவண் அரசு திருத்த விரும்புகிற மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் 16ஆம் அத்தியாயத்தின் தலைப்பு என்றே விடை சொல்வார்கள். இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் இயங்கும் ஊனமுற்றோருக்கான துறையிடமிருந்து ஏழு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம்தான் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காய் களமாடிக்கொண்டிருக்கிற அமைப்புகளைக் கொந்தளிக்கச் செய்திருக்கிறது.
action for autism, amarjyothi, NAB, NFB, Indian Joint Organisation of Blind, Indian Association of Deaf, NCPED ஆகிய ஏழு தன்னார்வ அமைப்புகளுக்குச் சென்றுள்ள துறையின் கடிதத்தின்படி, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல்  பிரிவு 89, 92, 93 ஆகியவற்றில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தங்கள் குறித்துத் தங்களின் கருத்துகளை ஜூலை 10க்குள் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அரசின் இந்த நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள NCPED, பிற அமைப்புகளின் கருத்துகளையும் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
சட்டம் சொல்வது என்ன?
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16 பிரிவு 89ன்படி, இந்தச் சட்டத்தின் பிரிவுகளையோ, விதிகளையோ ஒருவர் மீறினால், அவருக்கு ரூ. 10000 அபராதம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக மீறும் பட்சத்தில், ரூ. 50000க்கு குறையாத ரூ. 500000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.
பிரிவு 92ஐ பொருத்தவரை, பல்வேறு வடிவங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குக் கொடுமை இழைப்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்குக் குறையாமலும், அதிகபட்சம் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016ன்கீழ் தகவல்கள் மற்றும் பிற விவரங்களை வழங்க மறுத்தால், ஒவ்வொரு தவறுக்கும் ரூ. 25000 அபராதமும், தொடர்ச்சியாக மறுக்கும் பட்சத்தில், ஒரு நாளைக்கு ரூ. 1000 எனக் கணக்கிடப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என பிரிவு 93 சொல்கிறது.
அரசு செய்ய விரும்பும் திருத்தம் என்ன?
இந்த சட்டத்தின் 16ஆவது  அத்தியாயத்தில், பிரிவு 95 A மற்றும் B உட்பிரிவுகளில் விதிகள் உருவாக்கப்படும். அதன்படி, பிரிவு 89, 92 மற்றும் 93ல் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நடுவண் அல்லது அந்தந்த மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் விசாரித்து, குற்றமிழைத்தவருக்கு அபராதம் விதிப்பார். அதேசமயம், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில், குற்றமிழைத்தவர்மீதான சிறை தண்டனையைக் கைவிடலாம்.
சட்டத்தை இயற்ற ஏழு ஆண்டுகள் எடுத்துக்கொண்ட அரசுக்கு அதனை முறையாக அமல்ப்படுத்துவதில் எந்தவித அக்கறையுமில்லை. இன்னும் பல மாநிலங்களில், இந்த சட்டத்தின் சரத்துகள் முறையாக அமல்ப்படுத்தப்படவே இல்லை. 21 வகையான ஊனங்களை வகைப்படுத்திவிட்டு, வெறும் ஏழு அமைப்புகளுக்கு மட்டும் கடிதம் எழுதியிருப்பதை ஏற்க முடியாது எனச் சொல்கிறது மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை. நாடெங்கிலும் இருக்கிற 120க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி செயல்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகள் கையெழுத்திட்டு, திருத்தத்திற்கெதிரான மனு நடுவண் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக newzhook.com   இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இது குறித்த விவாதங்கள் மற்றும் தீர்வுகளை முன்னெடுக்கும் வகையில், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவை ஜூம் வழி உரையாடல்   ஒன்றினை நாளை (ஜூலை 6) ஏற்பாடு செய்துள்ளது.
மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கே திண்டாடுகிற காலம்தான், அவர்களின் உரிமையில் கைவைக்கும் வாய்ப்பை வழங்குகிற உகந்தகாலம் எனக் கருதுவதைப் பார்த்தால்,அரசு சட்டத்தை அல்ல, நீதியைத் திருத்த, இல்லை இல்லை, திரிக்க முயற்சிப்பதாகவே தோன்றுகிறது. நீதியைக் காக்க, வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆசிரியர்க்குழு
தொடர்புகொள்ள: savaalmurasu@gmail.com

விரைவான நீதி வேண்டும், விளிம்புநிலை மனிதர்க்கெல்லாம்

ஜூன் 30, 2020
graphic மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்ற செய்தியைத் தாங்கிய இந்து தமிழ்த்திசையின் மின்னிதழ் பக்கம்
அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35  லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணமாக ரூ. 1000 வழங்கப்படும்  என தமிழக முதல்வர் அவர்களால் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஊரடங்கு கால நிவாரணமாக ரூ. 5000 கேட்டுப் போராடியவர்களுக்கு ரூ. 1000 என்பது போதாத தொகைதான் என்றாலும், முதல்வரின் இந்த அறிவிப்பை ஒரு துவக்கமாகவும், தங்களின் தொடர் வலியுறுத்தல்களுக்குக் கிடைத்திருக்கிற சிறிய வெற்றியாகவும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்கள் கருதுகின்றன.
graphic டாராட்டாக் சங்க போராட்டம்

முதல் மற்றும் இரண்டாம் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டதிலிருந்தே, ஊரடங்கு கால நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5000 வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையினை மிகத் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர் பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கத்தினர்.  இந்தக் கோரிக்கையினை அழுத்தமாக முன்வைக்கும் வகையில், கடந்த மே 7 அன்று, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தினை மாநிலம் தழுவிய அளவில் முன்னெடுத்தது. இந்நிலையில், இச்சங்கத்துடன் ஏனைய சங்கங்களும் இணைந்து, மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டு இயக்கம் என்ற பெயரில் கடந்த ஜூன் 10 முதல் காலவரையற்ற குடியேறும் போராட்டத்தை அறிவித்துப் பின்னர் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதனைத் தற்காளிகமாக ஒத்திப்போடுவதாக அறிவித்தனர். பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கமும் இதே கோரிக்கையினைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கடந்த மூன்று ஊரடங்கு காலங்களில் இதுபோன்ற அறிவிப்புகளைச் செய்யாது, இந்த நான்காவது ஊரடங்கு காலத்தில் முதல்வர் இந்த அறிவிப்பினை வெளியிட்டதன் பின்னணியில் வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது.
graphic ஊரடங்கு நிவாரணம் கேட்டு திருநின்றவூரில் சாலை மரியல் செய்த பார்வையற்றோர்
சில நாட்களுக்கு முன்பு, திருநின்றவூரைச் சேர்ந்த இரயிலில் வணிகம் செய்யும் பார்வையற்றோர் தங்களுக்குக் கரோனா ஊரடங்கு நிவாரணமாக அரசு மாதம் 10000 வழங்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டதை அனைவரும் அறிவோம். ஆனால், செய்தித் தொலைக்காட்சிகள் சொல்லத் தவறிய வேறொரு கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தார்கள். அதாவது, இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தங்கள் சார்பில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்பதே அது. இந்தக் கோரிக்கையினை வலியுறுத்தி, 40 பார்வையற்றவர்கள் அடுத்தநாள் உயர்நீதிமன்றத்தின் வாசலில் அமர்ந்து அமைதி வழியில் போராடியதாகவும் சொல்லப்படுகிறது.
graphic வழக்கு
 இரயில் வணிகம் செய்வோரின் சார்பில் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்ததில் முன்நின்றவர்  செங்கள்பட்டு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுவரும் இரண்டாம் ஆண்டு மாணவர் புகழேந்தி. இவரும் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. தான் உலகளாவிய மாற்றுத்திறனாளிகள் மையம் என்ற அமைப்பினை நடத்திவருவதாகவும், அதன் பெயரில் இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதாகவும் கூறுகிறார் புகழேந்தி. கடந்த ஜூன் 15 திங்களன்று வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே, டிசம்பர் 3 இயக்கமும், பார்வையற்றோர் அமைப்பும் இணைந்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் முதல்வர் நிவாரண நிதியில் நான்கு விழுக்காட்டினை ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகச் செலவிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்று சேர்த்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட தமிழக அரசுத் தரப்பிற்கு ஜூன் 17ஆம் தேதி இன்று பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு இன்று விசாரனைக்கு வரவுள்ளது.
graphic சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள மனுநீதிச்சோழனின் சிலை
 இதுகுறித்துசட்டக் கல்லூரி மாணவர் திரு. புகழேந்தியிடம் பேசினோம். அரசு ரூ. 1000 அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும், அதேநேரத்தில் இது ஒப்பீட்டளவில் மிகக் குறைவான தொகை என்கிறார் புகழேந்தி. மேலும், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாமுழுவதுமே பார்வையற்றவர்கள் இரயிலில் வணிகம் செய்து பிழைத்து வருகிறார்கள். இப்படி வணிகம் செய்வோரில் 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் அரசுப்பணியை எதிர்நோக்கியிருக்கும் பட்டதாரிகளே. ஒவ்வொரு துறையிலும் காணப்படும் பின்னடைவுக் காலிப்பணியிடங்களைக் கண்டறிந்து, பார்வையற்றோருக்கான இட ஒதுக்கீட்டை முறையாகவும் முழுமையாகவும் அமல்ப்படுத்தியிருந்தாலே, இன்று எங்களில் பலர் இந்த நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டோம்” என வேதனைப்படுகிறார். இந்தப் பேரிடர் காலத்தில் ஒருவேளைக் கஞ்சிக்கும் வழியற்றவர்களாய் பல பார்வையற்றவர்களை உருவாக்கியதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மிகப் பெரிய பங்கிருப்பதாகக் குற்றம் சாட்டும் அவர், நீண்ட நோக்கிலான தீர்வுகளையே இரயில் வணிகம் செய்யும் ஆயிரக்கணக்கான பார்வையற்றவர்கள் அரசிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள் என்கிறார்.
graphic ரயிலில் வணிகம் செய்யும் பார்வையற்ற பெண்கள்
 புகழேந்தியின் முறையீடு வெறும் அரசுப்பணி என்பதோடு நிற்கவில்லை. பார்வையற்ற இரயில் வணிகர்களின் தலைமுறை தாண்டிய கோரிக்கைகளான இரயிலில் வணிகம் செய்யும் பார்வையற்றவர்களைக் கணக்கெடுத்தல், அவர்களை அங்கீகரித்தல், அவர்களுக்கு மத்திய இரயில்வே துறையின் அடையாள அட்டை வழங்கப்படுதல் போன்றவற்றை நீதிமன்றத்தின்கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இதனை சட்ட ரீதியிலான போராட்டமாக முன்னெடுக்கும்பொருட்டு, தனது அமைப்பின் சார்பில் இணையவழியில் ஒரு கணக்கெடுப்பையும்  நடத்திவருகிறார்.
சாலைகளில் கோஷங்களாய் எதிரொளித்த சாமானியர்களின் உரிமைக்குரல், சட்டத்திடலில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நடவடிக்கையில், அரசின் அலட்சியம் ஏற்படுத்திய காலவிரையத்தையும் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொண்டு, விரைவான தீர்ப்பினை வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளி சமூகத்தின் எதிர்பார்ப்பு.
விரைவான நீதி வேண்டும், விளிம்புநிலை மனிதர்க்கெல்லாம்.