31 ஜூலை, 2020
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நூறு நாட்கள்
கடந்த பின்னும், அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு,
மத்திய மாநில அரசுகள் உருப்படியாக எதுவும் செய்யவில்லை.
மாற்றுத்திறனாளி அமைப்புகளின் தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் மற்றும் சட்டப் போராட்டத்தின்
விளைவாக, தற்போது தமிழக அரசு அடையாள அட்டை வைத்திருக்கும்
மாற்றுத்திறனாளிகளுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து அதனை
வினியோகிக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றிலும் ஏகப்பட்ட குளறுபடிகள்.
தெளுங்கானா உயர்நீதிமன்றமோ, மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை ஏற்படுத்தி
அவர்களுக்கு உடனடியாக நிதி வழங்கிடுமாறு அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. நடுவண் அரசின்
மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ. 1000 உதவி, இன்னும் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளைச்
சென்றுசேரவே இல்லை. நிலமை இப்படியிருக்க, ஆக்கபூர்வமானது எனத் தான் நம்பும்
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஒரு அர்த்தமற்ற செயலைத் தீவிரமாக
கையிலெடுத்திருக்கிறது நடுவண் அரசு.
‘குற்றமும் தண்டனையும்’ என்றவுடன் உங்களின் நினைவுக்கு வருவது என்ன? காஃப்காவின்
புகழ்பெற்ற நாவல் என்றோ, விதார்த் நடித்த திரைப்படம் என்றோ நீங்கள் பதில்சொல்லக்கூடும்.
ஆனால், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காய் போராடும் அமைப்பைச் சார்ந்தவர்களிடம்
கேட்டுப்பாருங்கள். இது, நடுவண் அரசு
திருத்த விரும்புகிற மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் 16ஆம் அத்தியாயத்தின்
தலைப்பு என்றே விடை சொல்வார்கள். இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்
துறையின் கீழ் இயங்கும் ஊனமுற்றோருக்கான துறையிடமிருந்து ஏழு தன்னார்வத் தொண்டு
நிறுவனங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம்தான்
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காய் களமாடிக்கொண்டிருக்கிற அமைப்புகளைக்
கொந்தளிக்கச் செய்திருக்கிறது.
action for autism, amarjyothi, NAB, NFB, Indian
Joint Organisation of Blind, Indian Association of Deaf, NCPED ஆகிய ஏழு தன்னார்வ அமைப்புகளுக்குச் சென்றுள்ள துறையின்
கடிதத்தின்படி, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு
89, 92, 93 ஆகியவற்றில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தங்கள் குறித்துத் தங்களின்
கருத்துகளை ஜூலை 10க்குள் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அரசின் இந்த நிலைக்கு
எதிர்ப்பு தெரிவித்துள்ள NCPED,
பிற அமைப்புகளின் கருத்துகளையும் தொகுக்கும்
முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
சட்டம் சொல்வது
என்ன?
மாற்றுத்திறனாளிகள்
உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16 பிரிவு 89ன்படி, இந்தச் சட்டத்தின்
பிரிவுகளையோ, விதிகளையோ ஒருவர் மீறினால், அவருக்கு ரூ. 10000 அபராதம்
விதிக்கப்படும். தொடர்ச்சியாக மீறும் பட்சத்தில், ரூ. 50000க்கு குறையாத ரூ.
500000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.
பிரிவு 92ஐ
பொருத்தவரை, பல்வேறு வடிவங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குக் கொடுமை
இழைப்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்குக் குறையாமலும், அதிகபட்சம் ஐந்தாண்டுகள் சிறை
தண்டனை வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள்
உரிமைகள் சட்டம் 2016ன்கீழ் தகவல்கள் மற்றும் பிற விவரங்களை வழங்க மறுத்தால்,
ஒவ்வொரு தவறுக்கும் ரூ. 25000 அபராதமும், தொடர்ச்சியாக மறுக்கும் பட்சத்தில், ஒரு
நாளைக்கு ரூ. 1000 எனக் கணக்கிடப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என பிரிவு 93
சொல்கிறது.
அரசு செய்ய
விரும்பும் திருத்தம் என்ன?
இந்த சட்டத்தின்
16ஆவது அத்தியாயத்தில், பிரிவு 95 A மற்றும் B உட்பிரிவுகளில் விதிகள் உருவாக்கப்படும்.
அதன்படி, பிரிவு 89, 92 மற்றும் 93ல் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நடுவண் அல்லது
அந்தந்த மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் விசாரித்து, குற்றமிழைத்தவருக்கு அபராதம்
விதிப்பார். அதேசமயம், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில்,
குற்றமிழைத்தவர்மீதான சிறை தண்டனையைக் கைவிடலாம்.
சட்டத்தை இயற்ற ஏழு ஆண்டுகள் எடுத்துக்கொண்ட
அரசுக்கு அதனை முறையாக அமல்ப்படுத்துவதில் எந்தவித அக்கறையுமில்லை. இன்னும் பல மாநிலங்களில்,
இந்த சட்டத்தின் சரத்துகள் முறையாக அமல்ப்படுத்தப்படவே இல்லை. 21 வகையான ஊனங்களை வகைப்படுத்திவிட்டு,
வெறும் ஏழு அமைப்புகளுக்கு மட்டும் கடிதம் எழுதியிருப்பதை ஏற்க முடியாது எனச் சொல்கிறது
மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை. நாடெங்கிலும் இருக்கிற 120க்கும் மேற்பட்ட
மாற்றுத்திறனாளி செயல்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகள் கையெழுத்திட்டு, திருத்தத்திற்கெதிரான
மனு நடுவண் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக newzhook.com இணையதளம் செய்தி
வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இது குறித்த
விவாதங்கள் மற்றும் தீர்வுகளை முன்னெடுக்கும் வகையில், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப்
பேரவை ஜூம் வழி உரையாடல் ஒன்றினை நாளை (ஜூலை 6) ஏற்பாடு செய்துள்ளது.
மக்கள் தங்களின் அன்றாடத்
தேவைகளுக்கே திண்டாடுகிற காலம்தான், அவர்களின் உரிமையில் கைவைக்கும் வாய்ப்பை வழங்குகிற
உகந்தகாலம் எனக் கருதுவதைப் பார்த்தால்,அரசு சட்டத்தை அல்ல, நீதியைத் திருத்த, இல்லை இல்லை, திரிக்க முயற்சிப்பதாகவே தோன்றுகிறது. நீதியைக் காக்க, வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆசிரியர்க்குழு
தொடர்புகொள்ள: savaalmurasu@gmail.com
அனைவரும் இணைந்தோ.
ReplyDeleteஅல்லது தனித்தனியாகவோ கடுமையாக எதிர்க்க வேண்டிய நேரம் இது.