முகப்பு

அதிகம் படிக்க ஆசை இருக்கு, வழிகாட்டுங்களேன்!


20 ஜூலை, 2020
graphic நவீன்குமார்
நவீன்குமார்
விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படித்த உடல்ச்சவால் மாற்றுத்திறனாளியான நவீன்குமார், அரசுப் பொதுத்தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் பெற்று சாதனைபடைத்திருக்கிறார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் கல்குறிச்சிக்கு அருகில் இருக்கிறது தோணுகால் கிராமம்.
அந்த கிராமத்தில் வசிக்கும் சரவணபாண்டி  நாகரத்தினம் தம்பதியின் மூத்தமகனான நவின்குமார், ஏழு மாதக் குழந்தையாகப் பிறந்தார். இதன் காரணமாக, வலது கால் மற்றும் வலது கை செயலிழந்ததோடு, பேச்சுத்திறனிலும் பாதிப்பு ஏற்பட்டது. தனது அன்றாடப் பணிகளை முடிந்தவரை இடதுகையால் செய்யப் பழகியிருக்கும்  அவர், பத்தாம் வகுப்புவரை அருகிலிருக்கும் பள்ளியில் சேர்ந்து படித்தார். பதினோராம் வகுப்பிற்கு, ஜோகில்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். தினமும் தனது அப்பா மற்றும் சித்தப்பாவின் உதவியுடன் பள்ளிக்குச் சென்றுவரும் நவினுக்கு உடன்படிக்கும் மாணவர்களும் உற்ற துணையாக இருந்திருக்கிறார்கள்.
படிப்பில் நவீனுக்கு இருக்கும் ஆர்வத்தினை புரிந்துகொண்ட பள்ளி ஆசிரியர்களும், அந்த மாணவனுக்கு சிறப்பு கவனம் கொடுத்துக் கற்பித்திருக்கிறார்கள். பதிலி எழுத்தர் ஏற்பாட்டில் தனது பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வை எதிர்கொண்ட நவீன், அனைத்துப் பாடங்களிலும் 90க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். குறிப்பாக, வரலாறு மற்றும் வணிகவியல் பாடங்களில் 98 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். உயர்கல்வியைத் தொடரும் விருப்பம் இருக்கிற அதேசமயத்தில், தனக்கு சில தயக்கங்களும் இருப்பதாகச் சொல்கிறார் நவீன். அவை என்ன என அவரிடமே கேட்டோம்.
graphic நவீன் தன் பெற்றோருடன்
நவீன் தன் பெற்றோருடன்
“நண்பர்கள் ஆசிரியர்கள்னு என்னுடைய பள்ளில எனக்கு அனுசரனையான சூழல் இருந்துச்சு. தினமும் என்னுடைய அப்பா அல்லது சித்தப்பா என்னை பைக்ல கொண்டுபோய் ஸ்கூல்ல விட்டுறுவாங்க. பள்ளி உணவு இடைவேளைல நண்பர்கள் என்னை நல்லாப் பாத்துக்கிடுவாங்க. ஆறு மாசத்துக்கு முன்னால எங்க அப்பாவுக்கு ஒரு ஆக்சிடண்ட் ஆனதுல கால் எலும்பு முறிஞ்சுபோச்சு. ஒரு மில்லுல வேலை பார்த்திட்டிருந்த எங்க அப்பா இப்போ பக்கத்தில இருக்கிற ஒரு பேக்கரிக்கு வேலைக்குப் போறாரு. எப்படியாவது உன்னைக் காலேஜ் சேர்த்துப் படிக்க வைக்கிறது என் பொறுப்புனு அம்மா சொல்றாங்க. ஆனா ஸ்கூல்ல ஒரே ஒரு பாடம்தான் இங்லீஷுங்கிறதால சமாளிச்சிட்டேன். காலேஜ்ல எல்லாப் பாடமும் இங்லீஷ்ல இருக்கும்னு நிறையபேர் சொல்லிக் கேட்டிருக்கேன். அத நினைச்சா எனக்கு ரொம்ப தயக்கமா இருக்கு. என்னால வாக்கர் யூஸ் பண்ணி நடக்க முடியும். முடிஞ்சவரைக்கும் இடது கையால என் வேலைகளை செஞ்சுக்கிறேன். ஆனாலும் எங்க அம்மாவைவிட்டு நான் ஒருநாள்கூட தனியா இருந்ததில்ல” என்று தன் தயக்கங்களை நிதானமாய் அடுக்கினார் நவீன்.
நவீனின் அம்மா நாகரத்தினத்திடம் பேசினோம். “சார் அவன் சொல்றது உண்மைதான். இப்படி ஆயிடுச்சே. என் பிள்ளைய என்னால சுமக்க முடியலையேனு அவுங்க அப்பாவும் ரொம்ப மருகுறார். அவனை எப்படியாவது படிக்க வச்சிறணும்கிறதுல நான் உறுதியா இருக்கேன். ஆனாலும், அவன் ரொம்ப கவலைப்படுறான். இதையெல்லாம் நினைச்சு அப்பப்போ அமைதியாயிடுறான். ஏன் சார் நீங்களே சொல்லுங்க. இம்புட்டு நல்ல மார்க் வாங்கிட்டு கொஞ்சம்கூட சந்தோஷமே இல்லாம இருக்குறானே.” என்று வேதனைப்படுகிறார்.
“சார், உண்மையிலேயே அந்த ஸ்கூல்ல இருந்தவரைக்கும் அவன் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதே இல்ல. இப்பகூட அவனோட படிச்ச பையன்களும் அவுங்க அம்மாக்களும் என்ன சொல்றாங்க தெரியுமா? அவன் எந்த காலேஜ்ல சேருறானோ, அதே காலேஜ்ல தங்களோட பையன்களையும் சேர்த்துவிட்டு அவனைப் பத்திரமாப் பாத்துக்கிறோம்னு தைரியம் சொல்றாங்க” என்று நாகரத்தினம் சொன்னபோது மேய் சிலிர்த்தது.
graphic பாலகணேசன்
பாலகணேசன்
நவீனின் சாதனை குறித்து நமக்குச் சொன்னவர், அந்தப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணிபுரிபவரும், விரல்மொழியர் மின்னிதழின் ஆசிரியருமான திரு. ரா. பாலகணேசன். அவரிடம்  பேசினோம்.”கடந்த ஆண்டு, தன் வகுப்பு நண்பர்களுடன் சிவகாசியில் ஸக்ஷம் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு ஒன்றில்  கலந்துகொண்ட நவீன், அன்று இரவு அந்த நண்பர்களோடே தங்க வேண்டியதாயிற்று. தன் வாழ்க்கையிலேயே முதல்முறையாக வீட்டைவிட்டு வெளியில் தங்கியதைப் புது அனுபவமாக உணர்ந்த அவன், என்னிடம் சொல்லி, ரொம்ப சந்தோஷப்பட்டான். நவீன் எங்கள் பள்ளியில் படித்தவரை, ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவருமே அவன்மீது தனி கவனமும் அக்கறையும் செலுத்தினார்கள். அதிலும் குறிப்பாக, கணினி ஆசிரியர் மற்றும் ஆங்கில ஆசிரியர் இருவரும் இப்போதுவரை அவனை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலோடு தனது எதிர்காலத்தைப் பொருத்திப் பார்க்கும்போது அவனுக்கு சில தயக்கங்களும் அச்சங்களும் எழுவது இயல்பானதே. இப்போது அவனுக்குத் தேவை நல்லதொரு வழிகாட்டலும் சில உதவிகளுமே” என்று முடித்தார்.
நவீன் இப்போது என்ன செய்ய வேண்டும்? அவருக்கென்று தங்கிப் பயில ஏதேனும் சிறப்பு விடுதிகள் அல்லது பயிற்சிகள் இருக்கின்றனவா? அவர் உயர்கல்வியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்?
இந்தப் பதிவைப் படிக்கிற மாற்றுத்திறனாளி நல விரும்பிகள் நவீன்குமாரைத் தொடர்புகொண்டு, சிறந்த ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்கி, அவர் தன் உயர்கல்வியைத் தடையின்றித் தொடர உதவலாமே.
நவீன்குமார் தொலைபேசி எண்: 9566436336
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

3 comments:

  1. நவீன்குமாரின் கல்வி தாகத்தை அரசும் சமுதாயமும் தீர்க்க முடியும்.

    ReplyDelete
  2. Please contact Anandham Youth Foundation....
    Website:Www.anandham.org
    There is a icon named Student application.Fill the application and send to the address..They will call u

    ReplyDelete
  3. Hi, Ask Study Help "Radio Mirchi-9629620983" in WhatsApp

    ReplyDelete