முகப்பு

கல்விக்கொள்கைகளும் காவுகொடுக்கப்படும் அடிப்படை விழுமியங்களும்

31 ஆகஸ்ட், 2020

மாற்றுத்திறனாளியின் புகைப்படம்
மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016 போலவே, மாற்றுத்திறனாளிகள் கல்வி தொடர்பாகவும் தனித்த ஒரு சட்டம் வேண்டும் என கடந்த ஆண்டு புதிய தேசியக் கல்விக்கொள்கை வரைவு மீதான கருத்துக்கேட்பில் தங்கள் எண்ணங்களை வெளியிட்டிருந்தன பல மாற்றுத்திறனாளி சங்கங்கள். அவர்கள் குறிப்பிட்டிருந்த மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 பெயரை ஓரிருமுறை குறிப்பிட்டிருப்பதைத் தவிர, மாற்றுத்திறனாளிகள் கல்வி தொடர்பில், வேறு எந்த ஆக்கபூர்வ நடவடிக்கைக்கும் நடுவண் அரசு தயாராக இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்கிறது தற்போது வெளிவந்திருக்கிற புதிய தேசிய கல்விக்கொள்கை தொடர்பான அரசாணை.

ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் மறுவாழ்வுப் பணியில் எட்டப்பட வேண்டிய இறுதி இலக்கான இன்க்லுசிவ் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி, அதன் உயர்வான நோக்கத்தையே கேலிக்குள்ளாக்கியிருக்கிறது நடுவண் அரசு. தனது திட்டத்தால் பயன்பெறவிருக்கும் நேரடிப் பயனாளிகளின் குரல்களுக்குச் செவிமடுக்காமல்,  சில இடைத்தரகு என்ஜிவோக்களை மட்டும் உள்ளடக்கி இன்க்லுசிவாகச் செயல்படுவதையே இலாபமாகப் பார்க்கிறார்கள் தற்சார்பு மந்திரத்தைத் தவறாமல் உச்சாடணம் செய்யும் உயர்பீட மாண்புமிகுக்கள்.  

ஆறு புள்ளிகள் புகைப்படம்

                                 மும்மொழிக்கல்வி என்றதுமே செம்மொழிக்காவலர்கள் சேர்ந்துசினங்காட்டுகிறார்கள். அப்படி ஒரு வழியுமற்று தாய்மொழி பிரெயில் தாயில்லாப் பிள்ளையாகிவிட்டதே எனத்தவிக்கிறார்கள் அதன் தனித்துவம் அறிந்த பார்வை மாற்றுத்திறனாளிகள்.  அரசாணையின் அறுபது பக்கங்களில் மாற்றுத்திறனாளிகள் கல்விகுறித்து, அரைப்பக்கம் கூடப் பேசப்படவில்லை என்பதிலிருந்தே, மாற்றுத்திறனாளிகளின் இருத்தலில் இந்த தேசாபிமானிகளின் அக்கறை தெளிவாகிறது.

அரைப்பக்கத்திலும் புதிதாக ஒன்றுமே இல்லை. வட்டார வளமையங்கள் (block resource centres), வீட்டிலிருந்து கற்றல் (home based learning) என ஏற்கனவே இருக்கும் கட்டமைப்பை அப்படியே வார்த்தைகளில் கோர்த்திருக்கிறார்கள் வரைவு தந்த வானசாஸ்திரிகளைப் பின்பற்றி  இந்த வலது சாஸ்திரிகளும்.

செலவு பிடிக்கும் வழிமுறையாக இருக்கிறதே சிறப்புப் பள்ளி கல்விமுறை  என்று கருதியவர்கள், “ஊனத்தின் பேரால் பாகுபாடு கூடாது” என்ற ஒற்றை வாக்கியம் தந்த சிலாக்கியத்தைப் பற்றிக்கொண்டு, அரசின் கற்றைத் தாள்கள் மிச்சம் பிடிக்கும் கல்வித் திட்டத்தை வகுத்திருக்கிறார்கள்.

சிறப்புத் தேவையுடையவர்கள் என்று சொல்லிக்கொண்டே, எல்லோரையும் ஒரே குடுவையில் கொட்டிக் குலுக்குகிற இவர்களின் கோமாளித்தனம் கண்டு குருதி கொதிக்கிறது. புதிய கொள்கைப்படி, மூன்று வயதிலிருந்தே குழந்தைகளின் கல்வி தொடங்கும் என்று தோள் தட்டுபவர்கள், அதே மூன்று வயதுக்குள் ஊனமுற்ற குழந்தைகளை அடையாளம் காணவும், அவர்களுக்கான சிறப்புத் தேவையைக் கண்டறிந்து கற்பிக்கவும்  என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த வயதிலிருந்தே உள்ளடங்கள் முறைதானா என்பதற்கும் பதிலில்லை.

ஆறாம் வகுப்பு முதலாகவே கல்வியில் தொழிற்கல்வி சிந்தனைகள் புகுத்தப்படும் என்றால், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தொழிற்கல்வி வாய்ப்புகள் எவை என்பதற்கு ஏதேனும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகளின் அடிப்படையில் கல்விக்கொள்கையில் பரிந்துரைகள் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்படி எதுவும் கூறப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளின் தொடக்கக் கல்வியையே தொலைதூரக் கல்வியாக மாற்றிவிட்டவர்கள் தொழிற்கல்வி குறித்தெல்லாம் சிந்திப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்.

நடத்தை மாற்றத்தை விதைத்து, மனிதவளம் பெருக்கி, ஒரு தேசத்தின் வளர்ச்சியைக் கட்டமைக்கிற கல்விப் பயணத்தில், அவரவருக்கான பாதைகளை வடிவமைத்து, இறுதி இலக்கு நோக்கி அவர்களை வரச்செய்வதுதான் ஒர் அரசின் கடமையாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, உன்னையும்சேர்த்தே அழைத்துச் செல்கிறேன், நாம் இணைந்தே பயணிப்போம்”  என்று நடக்கும்போது சொல்பவர்கள், ஓட நேர்ந்தால், என்னை தரதரவென இழுப்பதும், ஈடுகொடுக்க தாமதித்தால், அந்த இடத்திலேயே விட்டுச் செல்வதும்  அநீதியாகத் தோன்றவில்லையா?

நேரடி அனுபவம், சிந்தனைப் பரவலாக்கம், மனனக்கல்விக்கு முடிவுகட்டி ஆக்க சிந்தனை பெருக்குதல், அடடா வரையறைகளில்தான் எத்தனை வண்ணங்கள் வார்த்தை ஜாலங்கள்? பார்வை மாற்றுத்திறனாளிகளின் கற்றல் செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றும் இந்தக்  கருத்துருவாக்கம் என்ற கோட்பாடு பற்றி, கல்விக்கொள்கையின் எந்தப் பத்தியிலும் குறிப்பிடப்படவில்லையே. 85 விழுக்காடு அறிவை ஒரு குழந்தை தன் ஏழு வயதிற்குள் பெற்றுவிடுகிறது என புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாய் புள்ளிவிவரம் சொல்பவர்கள்ள், அதே 85 விழுக்காடு அறிதலைத் தன் பார்வையிழப்பால் தவறவிட்ட ஒரு பார்வையற்ற குழந்தையின் அறிவிழப்பை ஈடுசெய்ய என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? அதற்கும் உள்ளடங்கள்தான் தீர்வு என்றால், உள்ளம் அடங்க மறுக்கிறதே. இவர்களின் மறுவாழ்வு அகராதியில், உடல்ச்சவால் என்றால் சரிவான படிக்கட்டுகளும், பார்வை்ச்சவால் என்றால் மடக்குக் குச்சி கறுப்புக் கண்ணாடிகள் மட்டுமே இடம்பெறுகின்றன.

தமிழ் பிரெயில் எழுத்துகள் அடங்கிய பலகை
வெறும் 22000 பேர் பேசும் மொழியான சமஸ்கிருத வளர்ச்சிக்கு 600 கோடி ஒதுக்கியவர்கள், மூன்று கோடி மாற்றுத்திறனாளிகளின் கல்வியில் மேம்பாட்டில் எத்தனை கோடிகளைச் செலவிட்டிருக்கிறார்கள் என்பதற்கு ஏதேனும் கணக்க்இருக்கிறதா? அவ்வளவு ஏன், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் அமலான நாளிலிருந்து இரண்டாண்டுக்குள் பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அதே சட்டத்தின் 17ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது. அதாவது நிறைவேற்றப்பட்டதா? பின்னர் அரசு தரும் வாக்குறுதிகளை எப்படி நம்பி, இன்னும் எத்தனை தலைமுறையைப் பலியிடுவது?

சிறப்புப் பள்ளிகளைப் புறந்தள்ளும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள உள்ளடங்கிய கல்விமுறையில், எல்லா வகையான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் ஒரே ஒரு பிரிவில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியரை நியமிப்பது, அவரையும் வட்டாரத்தின் பல்வேறு பள்ளிகளுக்குத் தினந்தோறும் அலையவைப்பது என கணக்கெடுப்பில் மட்டும் மும்முரம் காட்டுகிறார்கள். 99 விழுக்காடு பொதுப்பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற மாணவர்கள், தங்கள் மனப்பாடத் திறனால் மட்டுமே ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சாதாரண மாணவன் தன் முதல் வகுப்பில் எழுதிக் கற்கும் மொழி எழுத்துகள்,கணித எண்கள்  எல்லாமே, இவர்களுக்கு வெறும் ஓசைகளாய் மட்டுமே மனதில் பதிகிறதென்றால், நாம் என்ன கற்காலத்திலா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

கேட்டால், அதற்கும் புதிய கல்விக்கொள்கையில் தீர்விருக்கிறது என்கிறார்கள். என்ன தீர்வென்று பார்த்தால், சாதாரண மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியருக்கே சிறப்புத் தேவையுடைய குழந்தைகளைக் கையாளும் அனைத்துப் பயிற்சிகளும் வழங்கப்படுமாம். அப்படியானால், ஒரு ஆசிரியரை வைத்தே பல வேலைகளைச் செய்கிற திட்டம். எங்களுக்கு ஊதியம் வழங்க வழியில்லை என்பதை நேரடியாய் சொல்லாமல் நெறிகள் வகுக்கிறோம் என்று நீட்டி முழக்குவது ஏனோ?

ஒரு நோயாளியின் பல உடல் உபாதைகளுக்கு அதனதன் சிறப்பு மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும் என கரார் ஒருபக்கம். ஒரே ஆசிரியர் எல்லாப் பாடமுறைகளையும் கற்றுத் தேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற கல்விக்கொள்கைகள் மறுபக்கமாய், துரித வல்லரசுக் கனவில், நாம் தொலைக்கப்போகும் அற விழுமியங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ?

ப. சரவணமணிகண்டன்

தொடர்புகொள்ள: vaazhgavalluvam@gmail.com

 * * *

சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடர:

சவால்முரசு முகநூல்
சவால்முரசு வலையொளி 

சவால்முரசு கீச்சகம் 

சவால்முரசு இன்ஸ்டாகிராம் 

 வாட்ஸ் ஆப்: 9787673244

டெலகிராம்: 9994636936

உங்கள் மேலான கருத்துகள் மற்றும் ஆக்கங்களை savaalmurasu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.    

No comments:

Post a Comment