முகப்பு

வீரியமான ஆசை, வெறித்தனமான தேடல்

31 ஆகஸ்ட், 2020

பாலநாகேந்திரன்
தொடர்ந்து 9 ஆண்டுகளாக இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வை எதிர்கொண்டுவரும் திரு. பாலநாகேந்திரன், 2016ல் இந்திய வருவாய்த்துறையில் பணி ஒதுக்கப்பெற்றவர். எப்படியாயினும் இந்திய ஆட்சிப்பணியை எட்டிப்பிடித்துவிட வேண்டும் எனத் தொடர்ந்து எதிர்நீச்சல் அடித்தவர் இந்த ஆண்டு தேர்வு முடிவுகளிலும் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார். கேள்வி எதுவானாலும் தேர்ந்தெடுத்த சொற்களோடு சுவையான சுவாரசியமான, அதே நேரத்தில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தாங்கிய பதில்களைத்தரும் திரு. பாலநாகேந்திரனைச் சந்தித்தோம். தீர்க்கமான வரையறைகளோடு அவர் தெறிக்கவிட்ட பதில்கள் இங்கே.

கேள்வி: உங்கள் குடும்்பம் பற்றி?

பதில்: அப்பா ஓய்வு பெற்ற இராணுவ வீரர். சகோதரர்கள் நாங்கள் ஐவர். அவர்கள் எனக்குச் சொன்னது நான்கு மந்திரங்கள். அவை; eat, live, read, repeat. வேறு எந்த நிர்பந்தமும் எனக்கில்லை. எனவே என்னால் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் எந்தவிதச் சமரசமுமின்றி போராட முடிந்திருக்கிறது. இப்போதும் எனக்கு சட்டம் படிக்க ஆசை. அதையும் படி என்றுதான் உற்சாகமூட்டுகிறார்கள். மொத்தத்தில், எனது தன்னம்பிக்கையை என்னைவிட அதிகம் நம்பியவர்கள் என் குடும்பத்தினர்.

கே: ஐஏஎஸ் ஆசை முளைவிட்டது எப்படி?

ப: நான் சென்னை சிறுமலர் பார்வையற்றோருக்கான பள்ளியில் படித்தபோது, அதிகம் கேள்விகள் கேட்பேன். “ஏன் கொய்யா இலையும் மாமர இலையும் வேறு வேறு வடிவத்தில் இருக்கின்றன? இரண்டுமே இலைகள்தானே?” இப்படி ஏதாவது கேள்விகள் கேட்டு என் ஆசிரியர்களை நச்சரிப்பேன். அப்போது என் ஆசிரியர்கள் “நீ என்ன பெரிய ஐஏஎஸ்ஸா? கேள்வியெல்லாம் கேட்கிற” என்பார்கள். உடனே அடுத்த கேள்வி, “ஐஏஎஸ்னா என்ன?” அதற்கு என் ஆசிரியர்கள் “ஐஏஎஸ்னா பவர்” என்று ஆரம்பித்து, விரிவாக பதில்சொன்னார்கள். அப்போது ஐஏஎஸ் ஆகனும் என்ற ஆசை துளிர்த்தது. அந்த வீரியமான ஆசையும், வெறித்தனமான தேடலுமே இன்று இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

கே: உங்கள் கல்லூரிப் படிப்பு பற்றி?

ப: இந்த வீரியமான ஆசை வெறித்தனமான தேடலாய் மாறிய இடம் எனது கல்லூரி. 82 ஆண்டுகால லயோலா கல்லூரி வரலாற்றிலேயே வணிகவியல் பிரிவு வழங்்கப்பட்ட முதல் பார்வையற்றவன் நான்தான். நான் லயோலாவில் படித்தபோதுதான், அன்றைய நடுவண் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் திரு. நெப்போலியன் அவர்களின் ஒத்துழைப்போடு, பார்வையற்றோருக்கான ஒரு ஆதாரமையத்தை அந்தக் கல்லூரியில் நிறுவினோம். அதன் நற்பயன், இன்று அங்கு படிக்கும் பார்வையற்ற மாணவர்கள் கணினியைப் பயன்படுத்தி, தங்கள் தேர்வுகளைத் தாங்களே எழுதுகிறார்கள். இதுவரை யூபிஎஸ்சியில் கூட என்னால் இதைச் சாதிக்க முடியவில்லை. ஆனால், லயோலாவில் நடக்கிறது.

சோபியா, பாலநாகேந்திரன் மற்றும் சரவணமணிகண்டன்
கே: குடிமைப்பணிகளில் தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் துறை?

ப: ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, அந்த நாட்டில் வாழும் பெண்கள், குழந்தைகள் மற்றும் விளங்குகள் எவ்வாறு பேணப்படுகிறார்கள் என்பதைப் பொருத்து தீர்மானிக்கப்படுகிறது என்பார்கள். நான் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பணியை அதிகம் எதிர்பார்க்கிறேன்.

கே: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராகும் வாய்ப்பு கிடைத்தால்?

ப: அது அற்புதமான வாய்ப்பு. நான் என் சொந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்காய் பணியாற்றுவதைக் கடமையாக எண்ணுகிறேன். காரணம், இன்று நான் இங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதற்குப் பின்னால், பல ஆண்டுகளை உள்ளடக்கிய நமது மூத்தோர்களின் பொராட்டம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஒருவேலை நான் மாற்றுத்திறனாளி ஆணையராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றால், என்னுடைய முதல் குறியே தொழில்நுட்ப மேம்பாடுதான்.

கே: எந்த வகையில்?

நம் நாட்டில் திட்டங்கள் வகுப்பதென்பது மூன்று நிலைகளை உள்ளடக்கியது. அவை; கொள்கை முடிவெடுத்தல் (policy making), ஆராய்தல் (review), அமல்ப்படுத்தல் (implementation). இந்த மூன்று படிநிலைகளையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்துகொள்ளவும் (accessibility), எளிதில் அணுகவும், (affordability), தங்குதடையின்றிப் பெறவும் (availability) வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்குத் தொழில்நுட்ப மேம்பாடு அவசியமான ஒன்று.

மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த விரும்புவேன். அத்தோடு, சட்டம் சார்ந்தும் சிலவற்றை முன்னெடுக்க விரும்புகிறேன்.  அதாவது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 15ல், ஒருவரை அவரின் பிறப்பு, பாலினம், நிறம் போன்றவற்றைக் காரணம் காட்டி அவருக்கான உரிமைகள் மறுக்கப்படக்கூடாது என இருக்கிறது. அதில் ஊனம் என்கிற வார்த்தை சேர்க்கப்பட வேண்டும்.

சட்டப் பிரிவு 21ல் கூறியுள்ளபடி, அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, (write to read) என்பதை முறையாக அமல்ப்படுத்துவதன் மூலம், பார்வையுள்ளவர்களைப் போல பார்வையற்றவர்களும் சமகால புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

கே: புதிய கல்விக்கொள்கை குறித்து?

ப: வரைவு வந்தபோது நானும்கூட  நிறைய ஆலோசனைகளை அமைச்சரகத்துக்குச் சமர்ப்பித்தேன். உதாரணமாக, பார்வையற்ற மாணவர்களுக்கு உயர்வகுப்புகளில் கணிதப்பாடத்தை முற்றிலுமாக மறுப்பது சரியாக இருக்காது. ஏனெனில், இன்றைய பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுத கணிதம் அவசியமாகிறது. எனவே, குறைந்தபட்சம் சிறப்புப் பள்ளிகளிலாவது போட்டித் தேர்வுகளுக்கான கணிதம் என்ற தலைப்பில் புதிய பாடத்திட்டத்தை வகுக்க வேண்டும் என்கிற ஆலோசனையும் அதில் ஒன்று. பார்வையற்ற மாணவர்கள் தங்களுடைய தேர்வுகளைத் தாங்களே எழுதிக்கொள்ள வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தேன். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் அவ்வாறான எந்த கருத்துகளும் இடம்பெறவில்லை. எனினும், ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனச் சொல்கிறார்கள், பார்க்கலாம்.

கே:கல்வி மற்றும் பணிச்சூழல்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் மற்றும் புறக்கணிப்புகளை எவ்வாறு கையாளலாம்?

ப:குடிமைப்பணி தேர்வுக்கான தயாரிப்பு காலங்களில், என்னைக்கூட பலரும் “அப்பாவின் பணத்தை வீணடிக்காமல், ஆசிரியருக்குப் படித்து செட்டில் ஆகலாமே” எனக் கேட்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன், சமீபத்தில்கூட, ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிக்குப் பிறகு, யூட்டூப் வழியே ஒருவர், “பார்வையற்றவராக இருந்துகொண்டு இவர் எப்படிலஞ்சம் வாங்கும் நபர்களைக் கண்டுபிடித்து ஒழிப்பார்” என்று கேட்கிறார். அதாவது,’உலகின் வாயைஅடைப்பது கடினம், உந்தன் செவிகளை மூடிக்கொள் சுலபம்’என்று சொல்வார்கள். அதுபோல எல்லா விமர்சனங்களுக்கும் முகம் கொடுக்கத் தேவையில்லை. அதே நேரத்தில், நம்மை நாமே தகுதிபடுத்திக் கொள்வதும் அவசியம். “நான் இதைச் செய்கிறேன்” என முன்வருவதும், “நான் இதை முடித்துவிட்டேன் பாருங்கள்” என உரத்துச் சொல்வதும் அது தற்பெருமையாக இருந்தாலும் இங்கு தேவையாக இருக்கிறது. எதையும் உணர்வுப்பூர்வமாய் மட்டுமல்லாமல், அறிவுப்பூர்வமாகவும் சிந்திக்கப் பழக வேண்டும்.

கே: ஐஏஎஸ் ஆக விரும்பும் பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை?

ப: I.A.N. (intend நோக்கம், awareness விழிப்புணர்வு, network தொடர்பு.)

 மனக்கட்டுப்பாட்டுடன் கூடிய சுய ஒழுக்கத்தின் மூலம், உங்கள் நோக்கத்தை, குறிக்கோளை கூர்மைப்படுத்துவது அவசியம். அடுத்ததாக, விழிப்புணர்வு; நம்மைப் பற்றி நாம் அறிந்திருத்தலும், போட்டித் தேர்வுகள் குறித்த முழுப் புரிதலை ஏற்படுத்தலும் முக்கியம். அப்போதுதான், அதற்கேற்ப நாம் நம்மைத் தகவமைத்துக்கொள்ள இயலும்.

மூன்றாவதாக, தொடர்பு. ஏற்கனவே குடிமைப்பணிகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், தற்போது போட்டித் தேர்வுகளுக்காய் தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருப்போர் என அனைவரிடமும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உரையாட வேண்டும்.

மேலும், நான் இந்தப் பேட்டியின் வாயிலாகச் சொல்லிக்கொள்வது, போட்டித்தேர்வுகள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் தேவைப்பட்டால், என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளுங்கள். நான் உதவக் காத்திருக்கிறேன்.

கே: எப்போது திருமணம்?

ப: (சிரிக்கிறார்) ஆண்கள் வாழ்க்கை போரடிக்கும்போதும், பெண்கள் தங்களுக்கு வாழ்க்கை சுவாரசியமாகத் தோன்றும்போதும் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்வதுண்டு. அப்படிப் பார்த்தால், எனக்கு இன்னும் வாழ்க்கை சுவாரசியமாகவே இருக்கிறது.

கே: சரி திருமணம் செய்வதாக முடிவெடுத்தால் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியாக உங்கள் தெரிவு?

ப: என்னை நானாக ஏற்றுக்கொண்டு, என்னோடு சேர்ந்து சிரிப்பதற்கு மட்டுமல்ல, அழுவதற்கும் தயாராக இருக்கும் ஒருவரை நான் மணம் செய்துகொள்ளத் தயாராகவே இருக்கிறேன். அவர் பார்வை மாற்றுத்திறனாளியாகவோ, பார்வையுள்ளவராகவோ ஏன் ஒரு வீல்சேர் யூசராகக்கூட இருக்கலாம்.

கே: உங்களுடைய திருமணம், காதல் வழியிலா அல்லது நிச்சயிக்கப்பட்ட வழியிலா?

ப: நிச்சயமாக காதல் திருமணம்தான். எப்படி எனது குடிமைப்பணிகள் தேர்வு முயற்சிக்கு என்னை அனுமதித்து, என் குடும்பம் எனக்கு ஒத்துழைத்தார்களோ, அதுபோலவே இதற்கும் நான் அனுமதி பெற்றே இருக்கிறேன்.

கே: அனுமதி தேர்வுக்கா? அல்லது தேர்வின் முடிவுக்கா?

ப: (மீண்டும் சிரிப்பு) இப்படி ஒரு தேர்வை எதிர்கொண்டாலும் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களிடம் அனுமதி பெற்றிருக்கிறேன்.

திரு. பாலநாகேந்திரன் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துவோம்.

தொடர்புகொள்ள: hungryshark89@gmail.com

* * *

சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடர::

சவால்முரசு முகநூல் 

சவால்முரசு வலையொளி 

சவால்முரசு கீச்சகம் 

சவால்முரசு இன்ஸ்டாகிராம் 

வாட்ஸ் ஆப்: 9787673244

டெலகிராம்: 9994636936 

உங்களின் மேலான கருத்துகள் மற்றும் படைப்புகளை savaalmurasu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

No comments:

Post a Comment