முகப்பு

Showing posts with label interviews. Show all posts
Showing posts with label interviews. Show all posts

வீரியமான ஆசை, வெறித்தனமான தேடல்

31 ஆகஸ்ட், 2020

பாலநாகேந்திரன்
தொடர்ந்து 9 ஆண்டுகளாக இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வை எதிர்கொண்டுவரும் திரு. பாலநாகேந்திரன், 2016ல் இந்திய வருவாய்த்துறையில் பணி ஒதுக்கப்பெற்றவர். எப்படியாயினும் இந்திய ஆட்சிப்பணியை எட்டிப்பிடித்துவிட வேண்டும் எனத் தொடர்ந்து எதிர்நீச்சல் அடித்தவர் இந்த ஆண்டு தேர்வு முடிவுகளிலும் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார். கேள்வி எதுவானாலும் தேர்ந்தெடுத்த சொற்களோடு சுவையான சுவாரசியமான, அதே நேரத்தில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தாங்கிய பதில்களைத்தரும் திரு. பாலநாகேந்திரனைச் சந்தித்தோம். தீர்க்கமான வரையறைகளோடு அவர் தெறிக்கவிட்ட பதில்கள் இங்கே.

கேள்வி: உங்கள் குடும்்பம் பற்றி?

பதில்: அப்பா ஓய்வு பெற்ற இராணுவ வீரர். சகோதரர்கள் நாங்கள் ஐவர். அவர்கள் எனக்குச் சொன்னது நான்கு மந்திரங்கள். அவை; eat, live, read, repeat. வேறு எந்த நிர்பந்தமும் எனக்கில்லை. எனவே என்னால் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் எந்தவிதச் சமரசமுமின்றி போராட முடிந்திருக்கிறது. இப்போதும் எனக்கு சட்டம் படிக்க ஆசை. அதையும் படி என்றுதான் உற்சாகமூட்டுகிறார்கள். மொத்தத்தில், எனது தன்னம்பிக்கையை என்னைவிட அதிகம் நம்பியவர்கள் என் குடும்பத்தினர்.

கே: ஐஏஎஸ் ஆசை முளைவிட்டது எப்படி?

ப: நான் சென்னை சிறுமலர் பார்வையற்றோருக்கான பள்ளியில் படித்தபோது, அதிகம் கேள்விகள் கேட்பேன். “ஏன் கொய்யா இலையும் மாமர இலையும் வேறு வேறு வடிவத்தில் இருக்கின்றன? இரண்டுமே இலைகள்தானே?” இப்படி ஏதாவது கேள்விகள் கேட்டு என் ஆசிரியர்களை நச்சரிப்பேன். அப்போது என் ஆசிரியர்கள் “நீ என்ன பெரிய ஐஏஎஸ்ஸா? கேள்வியெல்லாம் கேட்கிற” என்பார்கள். உடனே அடுத்த கேள்வி, “ஐஏஎஸ்னா என்ன?” அதற்கு என் ஆசிரியர்கள் “ஐஏஎஸ்னா பவர்” என்று ஆரம்பித்து, விரிவாக பதில்சொன்னார்கள். அப்போது ஐஏஎஸ் ஆகனும் என்ற ஆசை துளிர்த்தது. அந்த வீரியமான ஆசையும், வெறித்தனமான தேடலுமே இன்று இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

கே: உங்கள் கல்லூரிப் படிப்பு பற்றி?

ப: இந்த வீரியமான ஆசை வெறித்தனமான தேடலாய் மாறிய இடம் எனது கல்லூரி. 82 ஆண்டுகால லயோலா கல்லூரி வரலாற்றிலேயே வணிகவியல் பிரிவு வழங்்கப்பட்ட முதல் பார்வையற்றவன் நான்தான். நான் லயோலாவில் படித்தபோதுதான், அன்றைய நடுவண் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் திரு. நெப்போலியன் அவர்களின் ஒத்துழைப்போடு, பார்வையற்றோருக்கான ஒரு ஆதாரமையத்தை அந்தக் கல்லூரியில் நிறுவினோம். அதன் நற்பயன், இன்று அங்கு படிக்கும் பார்வையற்ற மாணவர்கள் கணினியைப் பயன்படுத்தி, தங்கள் தேர்வுகளைத் தாங்களே எழுதுகிறார்கள். இதுவரை யூபிஎஸ்சியில் கூட என்னால் இதைச் சாதிக்க முடியவில்லை. ஆனால், லயோலாவில் நடக்கிறது.

சோபியா, பாலநாகேந்திரன் மற்றும் சரவணமணிகண்டன்
கே: குடிமைப்பணிகளில் தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் துறை?

ப: ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, அந்த நாட்டில் வாழும் பெண்கள், குழந்தைகள் மற்றும் விளங்குகள் எவ்வாறு பேணப்படுகிறார்கள் என்பதைப் பொருத்து தீர்மானிக்கப்படுகிறது என்பார்கள். நான் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பணியை அதிகம் எதிர்பார்க்கிறேன்.

கே: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராகும் வாய்ப்பு கிடைத்தால்?

ப: அது அற்புதமான வாய்ப்பு. நான் என் சொந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்காய் பணியாற்றுவதைக் கடமையாக எண்ணுகிறேன். காரணம், இன்று நான் இங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதற்குப் பின்னால், பல ஆண்டுகளை உள்ளடக்கிய நமது மூத்தோர்களின் பொராட்டம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஒருவேலை நான் மாற்றுத்திறனாளி ஆணையராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றால், என்னுடைய முதல் குறியே தொழில்நுட்ப மேம்பாடுதான்.

கே: எந்த வகையில்?

நம் நாட்டில் திட்டங்கள் வகுப்பதென்பது மூன்று நிலைகளை உள்ளடக்கியது. அவை; கொள்கை முடிவெடுத்தல் (policy making), ஆராய்தல் (review), அமல்ப்படுத்தல் (implementation). இந்த மூன்று படிநிலைகளையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்துகொள்ளவும் (accessibility), எளிதில் அணுகவும், (affordability), தங்குதடையின்றிப் பெறவும் (availability) வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்குத் தொழில்நுட்ப மேம்பாடு அவசியமான ஒன்று.

மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த விரும்புவேன். அத்தோடு, சட்டம் சார்ந்தும் சிலவற்றை முன்னெடுக்க விரும்புகிறேன்.  அதாவது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 15ல், ஒருவரை அவரின் பிறப்பு, பாலினம், நிறம் போன்றவற்றைக் காரணம் காட்டி அவருக்கான உரிமைகள் மறுக்கப்படக்கூடாது என இருக்கிறது. அதில் ஊனம் என்கிற வார்த்தை சேர்க்கப்பட வேண்டும்.

சட்டப் பிரிவு 21ல் கூறியுள்ளபடி, அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, (write to read) என்பதை முறையாக அமல்ப்படுத்துவதன் மூலம், பார்வையுள்ளவர்களைப் போல பார்வையற்றவர்களும் சமகால புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

கே: புதிய கல்விக்கொள்கை குறித்து?

ப: வரைவு வந்தபோது நானும்கூட  நிறைய ஆலோசனைகளை அமைச்சரகத்துக்குச் சமர்ப்பித்தேன். உதாரணமாக, பார்வையற்ற மாணவர்களுக்கு உயர்வகுப்புகளில் கணிதப்பாடத்தை முற்றிலுமாக மறுப்பது சரியாக இருக்காது. ஏனெனில், இன்றைய பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுத கணிதம் அவசியமாகிறது. எனவே, குறைந்தபட்சம் சிறப்புப் பள்ளிகளிலாவது போட்டித் தேர்வுகளுக்கான கணிதம் என்ற தலைப்பில் புதிய பாடத்திட்டத்தை வகுக்க வேண்டும் என்கிற ஆலோசனையும் அதில் ஒன்று. பார்வையற்ற மாணவர்கள் தங்களுடைய தேர்வுகளைத் தாங்களே எழுதிக்கொள்ள வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தேன். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் அவ்வாறான எந்த கருத்துகளும் இடம்பெறவில்லை. எனினும், ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனச் சொல்கிறார்கள், பார்க்கலாம்.

கே:கல்வி மற்றும் பணிச்சூழல்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் மற்றும் புறக்கணிப்புகளை எவ்வாறு கையாளலாம்?

ப:குடிமைப்பணி தேர்வுக்கான தயாரிப்பு காலங்களில், என்னைக்கூட பலரும் “அப்பாவின் பணத்தை வீணடிக்காமல், ஆசிரியருக்குப் படித்து செட்டில் ஆகலாமே” எனக் கேட்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன், சமீபத்தில்கூட, ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிக்குப் பிறகு, யூட்டூப் வழியே ஒருவர், “பார்வையற்றவராக இருந்துகொண்டு இவர் எப்படிலஞ்சம் வாங்கும் நபர்களைக் கண்டுபிடித்து ஒழிப்பார்” என்று கேட்கிறார். அதாவது,’உலகின் வாயைஅடைப்பது கடினம், உந்தன் செவிகளை மூடிக்கொள் சுலபம்’என்று சொல்வார்கள். அதுபோல எல்லா விமர்சனங்களுக்கும் முகம் கொடுக்கத் தேவையில்லை. அதே நேரத்தில், நம்மை நாமே தகுதிபடுத்திக் கொள்வதும் அவசியம். “நான் இதைச் செய்கிறேன்” என முன்வருவதும், “நான் இதை முடித்துவிட்டேன் பாருங்கள்” என உரத்துச் சொல்வதும் அது தற்பெருமையாக இருந்தாலும் இங்கு தேவையாக இருக்கிறது. எதையும் உணர்வுப்பூர்வமாய் மட்டுமல்லாமல், அறிவுப்பூர்வமாகவும் சிந்திக்கப் பழக வேண்டும்.

கே: ஐஏஎஸ் ஆக விரும்பும் பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை?

ப: I.A.N. (intend நோக்கம், awareness விழிப்புணர்வு, network தொடர்பு.)

 மனக்கட்டுப்பாட்டுடன் கூடிய சுய ஒழுக்கத்தின் மூலம், உங்கள் நோக்கத்தை, குறிக்கோளை கூர்மைப்படுத்துவது அவசியம். அடுத்ததாக, விழிப்புணர்வு; நம்மைப் பற்றி நாம் அறிந்திருத்தலும், போட்டித் தேர்வுகள் குறித்த முழுப் புரிதலை ஏற்படுத்தலும் முக்கியம். அப்போதுதான், அதற்கேற்ப நாம் நம்மைத் தகவமைத்துக்கொள்ள இயலும்.

மூன்றாவதாக, தொடர்பு. ஏற்கனவே குடிமைப்பணிகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், தற்போது போட்டித் தேர்வுகளுக்காய் தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருப்போர் என அனைவரிடமும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உரையாட வேண்டும்.

மேலும், நான் இந்தப் பேட்டியின் வாயிலாகச் சொல்லிக்கொள்வது, போட்டித்தேர்வுகள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் தேவைப்பட்டால், என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளுங்கள். நான் உதவக் காத்திருக்கிறேன்.

கே: எப்போது திருமணம்?

ப: (சிரிக்கிறார்) ஆண்கள் வாழ்க்கை போரடிக்கும்போதும், பெண்கள் தங்களுக்கு வாழ்க்கை சுவாரசியமாகத் தோன்றும்போதும் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்வதுண்டு. அப்படிப் பார்த்தால், எனக்கு இன்னும் வாழ்க்கை சுவாரசியமாகவே இருக்கிறது.

கே: சரி திருமணம் செய்வதாக முடிவெடுத்தால் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியாக உங்கள் தெரிவு?

ப: என்னை நானாக ஏற்றுக்கொண்டு, என்னோடு சேர்ந்து சிரிப்பதற்கு மட்டுமல்ல, அழுவதற்கும் தயாராக இருக்கும் ஒருவரை நான் மணம் செய்துகொள்ளத் தயாராகவே இருக்கிறேன். அவர் பார்வை மாற்றுத்திறனாளியாகவோ, பார்வையுள்ளவராகவோ ஏன் ஒரு வீல்சேர் யூசராகக்கூட இருக்கலாம்.

கே: உங்களுடைய திருமணம், காதல் வழியிலா அல்லது நிச்சயிக்கப்பட்ட வழியிலா?

ப: நிச்சயமாக காதல் திருமணம்தான். எப்படி எனது குடிமைப்பணிகள் தேர்வு முயற்சிக்கு என்னை அனுமதித்து, என் குடும்பம் எனக்கு ஒத்துழைத்தார்களோ, அதுபோலவே இதற்கும் நான் அனுமதி பெற்றே இருக்கிறேன்.

கே: அனுமதி தேர்வுக்கா? அல்லது தேர்வின் முடிவுக்கா?

ப: (மீண்டும் சிரிப்பு) இப்படி ஒரு தேர்வை எதிர்கொண்டாலும் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களிடம் அனுமதி பெற்றிருக்கிறேன்.

திரு. பாலநாகேந்திரன் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துவோம்.

தொடர்புகொள்ள: hungryshark89@gmail.com

* * *

சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடர::

சவால்முரசு முகநூல் 

சவால்முரசு வலையொளி 

சவால்முரசு கீச்சகம் 

சவால்முரசு இன்ஸ்டாகிராம் 

வாட்ஸ் ஆப்: 9787673244

டெலகிராம்: 9994636936 

உங்களின் மேலான கருத்துகள் மற்றும் படைப்புகளை savaalmurasu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

பூரண வெற்றி

31 ஆகஸ்ட், 2020
graphic மடிக்கணினியின் முன் அமர்ந்திருக்கும் பூரணசுந்தரி
இந்த மாதத்தில் (ஆகஸ்ட் 2020) தமிழகம் அதிகம் உச்சரித்த பெயர் பூரணசுந்தரி. மதுரையின் மணிநகரம் பகுதியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான இவரின் குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒன்றுதான். ஆனாலும், தன் விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் தொடர்ந்து நான்குமுறை முயற்சித்து, இந்த ஆண்டிற்கான குடிமைப்பணிகள் தேர்வுகளில் 286 ஆவது இடம் பிடித்து சாதித்திருக்கிறார். முடிவுகள் வெளியிடப்பட்ட 11ஆம் தேதிக்குப் பிறகு கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமித்தது இவரின் பேட்டி. முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் என தொடர்ச்சியாய் வாழ்த்து மழையில் நனைந்தபடி, ஊடகப் பேட்டிகளில் பிஸியாயிருந்தவரைத் துரத்திப் பிடித்துப் பேட்டி கண்டது சவால்முரசு. திரு. சுரேஷ், திருமதி. சோஃபியா மற்றும் செல்வி சித்ரா மூவரும் இணைந்து நிகழ்த்திய இந்த நேர்காணல்தான், யூட்டூபில் சவால்முரசால் வெளியிடப்பட்டவைகளில் 1200க்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்ட ஒரே காணொலி என்பது கூடுதல் சிறப்பு.
graphic பூரணசுந்தரி, சித்ரா, சோபியா, சுரேஷ்
மேலிருந்து கீழாக பூரணசுந்தரி, சித்ரா, சோபியா, சுரேஷ்
மதுரையின் பிள்ளைமார் சங்க மேல்நிலைப்பள்ளியில் உள்ளடங்கிய கல்வியின் வாயிலாகத் தன் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார் பூரணசுந்தரி. தனக்குக் கற்பித்த பள்ளி ஆசிரியர்களாகட்டும், சிறப்பாசிரியர்கள் ஆகட்டும், தன்னை அத்தனை அக்கறையோடும், அன்போடும் கவனித்துக் கொண்டதை நினைவுகூர்கிறார். இவருக்குப் பாடம் புரிந்துவிட்டதை உறுதி செய்த பின்னரே இவருடைய வகுப்பாசிரியர்கள் அடுத்த பாடத்திற்கு நகர்வார்களாம். பாடத்திற்கு அப்பாற்பட்ட பேச்சு, நாடகம் என தன் திறமைகளை வளர்த்து ஊக்குவித்தவர்கள் தனது சிறப்பாசிரியர்கள்தான் எனப் பெருமிதம் பொங்கச் சொல்கிறார். பாத்திமா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றுள்ளார். அந்தக் கல்லூரி நாட்கள், அங்கிருந்த நூலகவசதி  ஆகியவைதான் தனக்குக் குடிமைப்பணிகள் தேர்வில் ஆர்வம் கொள்ள உந்துசக்தியாக அமைந்தது எனக் குறிப்பிடுகிறார்.
சென்னையின் மனிதநேய அறக்கட்டளை, அடையாறிலுள்ள ஆல் இந்தியா ஐஏஎஸ் கோச்சிங் செண்டர் என இவர் பயிற்சி எடுத்துக்கொண்ட இடங்களில், வாசித்துக் காண்பிப்பது, புத்தகங்களை ஒலிப்பதிவு செய்து தருவது என உடன்படித்த நண்பர்களும் உதவியிருக்கிறார்கள். தனக்கு தவறாமல் தினசரிகள் வாசித்துக் காண்பிக்கும் அப்பா தொடங்கி, அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம், திரு. உதயச்சந்திரன் ஐஏஎஸ், மாதிரி நேர்முகத் தேர்வில் தன்னை உற்சாகப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி திரு. சைலேந்திரபாபு எனப் பலரும் தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பதாகச் சொல்கிறார் பூரணசுந்தரி. குடிமைப்பணிகள் தேர்வை எதிர்கொண்டபடியே, வங்கித் தேர்வையும் எதிர்கொண்டு வெற்றிபெற்று வங்கி அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.
முதன்மைத் தேர்வுகளில் தமிழ் இலக்கியத்தைத் தன் விருப்பப் பாடமாக எடுத்துப் படித்த பூரணசுந்தரி, அதற்காக நிறைய புத்தகங்களை வாசித்திருக்கிறார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தனக்கு தமிழ் இலக்கியம் தொடர்பான நிறைய புத்தகங்கள் ஒலி மற்றும் ஒருங்குறி வடிவில் கிடைத்ததாகச் சொல்கிறார். கணினியைப் பயன்படுத்திக் குறிப்பெடுப்பது, உடன் பயிலும் பயிற்சியாளர்களோடு இணைந்து தமிழில் மொழிபெயர்த்துப் படிப்பது எனத் தனக்குச் சாத்தியமான எல்லா வழிகளிலும் தொடர்ச்சியாக முயன்றிருக்கிறார்.
 பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி தொடர்பான துறைகளில் பணியாற்ற விரும்புகிறார் பூரணசுந்தரி. “பெண்களின் வாழ்க்கை வெறும் குடும்பம் சார்ந்தது மட்டும் இல்லை. அவர்களின் அறிவு இந்த நாட்டுக்குப் பயன்பட வேண்டும். நம் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென அரசிடம் ஏராளமான திட்டங்கள் (schemes) இருக்கின்றன, தேவை விழிப்புணர்வுதான்” என அடித்துச் சொல்லும் அவரிடம், சுரேஷ் “மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் ஆணையராகப் பணி கிடைத்தால்?” என்ற கேள்வியை முன்வைக்க, அதே உற்சாகத்தோடு பதில் சொல்கிறார்.
“மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி என்பது வெறும் பாடத்தோடு நின்றுவிடக் கூடாது. அவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, அதனை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான பயிற்சி மையங்கள் மாவட்டந்தோறும் தொடங்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தொடர்பான நிறைய ஆய்வுகளை மேற்கொள்ள துறைசார்ந்து அதற்கென ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்” என்கிறார்.
வினாடிவினா போன்ற போட்டிகளைக் குழந்தைகளிடையே  நடத்துவது, பாடல்கள் கேட்பது இவை இவரின் பொழுதுபோக்குகள். இளையராஜா மற்றும் ரஹுமான் இசை தனக்குப் பிடித்த இசைஎன்றும், பாடகிகள் சித்ரா, சின்மையி குரல்கள் தன்னுடைய ஃபேவரைட் என்கிறார்.
தன்மீது தான் வைத்திருக்கிற நம்பிக்கையையே தன்னுடைய ஒரே பலமாகச் சொல்லும் பூரணசுந்தரி, ஒரு பார்வை மாற்றுத்திறனாளியாக, ஒரு பெண்ணாக நாம் நிறைய விமர்சனங்களையும் புறக்கணிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதை நாம்தான் எந்த ஒரு தயக்கமுமின்றி எதிர்கொண்டே ஆகவேண்டும். மாறாக அவைகள் தரும் வலிகளில் தேங்கிவிடக் கூடாது என்கிறார். உங்கள்மீதும், உங்களின் உழைப்பின் மீது மட்டும் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். தோல்வியில் துவண்டுவிடாமல், காரணங்களை ஆராய்ந்து, ஹார்ட் வொர்க் மற்றும் ஸ்மார்ட் வொர்க் என தேவையானபோது தேவையான யுத்திகளைக் கையாண்டு முயற்சித்தால் வெற்றி நிச்சயம் எனப் புன்னகைக்கிறார் பூரணசுந்தரி.
ஆசிரியர்க்குழு
 * * *
சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடர:
முகநூல்:https://m.facebook.com/savaalmurasu/
வலையொளி:https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public
 கீச்சகம்:https://twitter.com/savaalmurasu
இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/savaalmurasu24_7/
 வாட்ஸ் ஆப்: 9787673244
டெலகிராம்: 9994636936

மாற்றுத்திறனாளிகளுக்காக வரையறுக்கப்பட்டுள்ள அடையாளம் காணப்படும் பணிவாய்ப்புகள் என்கிற நடைமுறை அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவதற்கு மட்டுமே

31 ஆகஸ்ட், 2020
graphic ரகுராமன் மற்றும் P.K. பின்ச்சா
இடது ரகுராமன், வலது P.K. பின்ச்சா
கடந்த 2012 ஆம்ஆண்டு,  வள்ளுவன் பார்வை இணையக் குழுமத்தின் வெற்றித் திலகம் நிகழ்ச்சியில் கர்ண வித்யா அமைப்பைச் சேர்ந்த திரு ரகுராமன் அவர்கள், இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பார்வையற்றவராகிய மறைந்த திரு பீ.கே. பிஞ்ச்சா( பிரசன்ன குமார் பிஞ்ச்சா 1952 -  2020) அவர்களுடன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய அலைபேசி உரையாடல் ஒளிபரப்பப்பட்டது. திரு. பின்ச்சா அவர்களின் மறைவை நினைவுகூரும் பொருட்டு, சவால்முரசு வாசகர்களுக்காக அந்த ஒலிக்கோப்பை வழங்கிய திரு. ரகுராமன் அவர்களுக்கு சவால்முரசு ஆசிரியர்க்குழு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஆங்கில வழியில் நடைபெற்ற அந்த உரையாடலின் தமிழாக்கத்தின் இரண்டாவது பகுதி  இதோ.
கேள்வி: கல்வியைப் பொருத்தவரை பார்வையற்றோர் இரண்டு விதமான பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். சில பார்வையற்றோர் சிறுவயதில் பள்ளிக்குச் செல்லாமல் மிகத் தாமதமாகவே பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். சில குறிப்பிட்ட பயிற்சிகள் இருந்தபோதிலும் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை எட்ட முடிவதில்லை. இது போன்ற சிக்கல்களுக்கு   தங்களுடைய ஆலோசனைகளை கூறுங்கள்
 பதில்: பிரிட்ஜ் கோர்ஸ் எனப்படும் புத்தாக்க பயிற்சிகளை கொடுக்கலாம். உங்களுடைய  கருத்துடன்  உடன்படுகிறேன் ரகுராமன்.  அதாவது  பார்வையுள்ள சாதாரண  குழந்தையை  விட பார்வையற்ற குழந்தை சற்று  தாமதமாகவே கல்வியைப்  பெறுகிறது.  அவர்கள் இழந்த காலத்தையும் கல்வியையும் இதுபோன்ற புத்தாக்க பயிற்சிகள் மூலம் ஈடு செய்யலாம்.
கேள்வி:  சிலர் இடையில் திடீர்ப்பார்வை இழப்பைச் சந்திக்கிறார்கள். அவர்கள் மன அளவிலும் செயல் அளவிலும்  பல்வேறு பிரச்சினைகளைக் கடக்க  வேண்டியிருக்கிறது. உதாரணமாக பருவ வயதில் பார்வை இழக்கும் ஒரு கல்லூரி மாணவனை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு தங்களது தீர்வு என்ன?
பதில்: அவர்களை நெறிப்படுத்த இரண்டு மூன்று வழிமுறைகள் இருக்கின்றன. முதலாவது புத்தாக்கப் பயிற்சி. அந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்போது அவர்களில்  அறிவும் திறமையும் படைத்தவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள தேவையான தகுதிகளை பெற முடியும். மற்றவர்களுக்கு3 ஆர்ஸ் எனப்படும் வாசித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல் போன்ற அடிப்படை செயல்பாடுகளைக் கற்பிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு வாழ்க்கையை நடத்துவதற்குப் போதிய வருமானம்  தரக்கூடிய  வியாபாரம் உள்ளிட்ட  தொழில்சார் பயிற்சிகளை கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் சுய கௌரவத்தோடு வாழ முடியும்.
கேள்வி: வேலை வாய்ப்பைப் பொருத்தவரை பார்வையற்றோர் ஆங்கிலம், தமிழ், வரலாறூ உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகளை மட்டுமெ தேர்ந்தெடுக்கிறார்கள். மற்ற துறைகளைச் சாத்தியப்படுத்த என்ன செய்யலாம்?
பதில்: நான் இப்போது உங்களை ஊனமுற்றோர் நலச் சட்டத்தின் பணி வாய்ப்புகளை அடையாளப்படுத்துகின்ற 32-வது பிரிவுக்கு அழைத்துச் செல்கிறேன். நான் வழக்கமாகக் கூறும் கருத்தையே இப்போதும் முன்வைக்கிறேன். அதாவது பார்வையற்றோர் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பணி வாய்ப்புகளை மட்டும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நமது எல்லையை ஒரு குறிப்பிட்ட வரையறையோடு நிறுத்திக்கொள்ளும் நிலைக்கு வழிவகுக்கும். இன்னும் சிலர் பணி வாய்ப்புகளை அடையாளப்படுத்தல் என்பது நமக்குப் பயன் அளிக்கக் கூடியதும் அவசியமானதும்கூட  என்றும்  கூறுகின்றனர். இந்தச் சட்டத்தின்  கூறுகள் நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பணிகளை  வரிசைப்படுத்துவனவாகவும் தேவைப்படும் பட்சத்தில் வழிகாட்டும் ஆவணமாகவும் மட்டுமே இருக்க வேண்டும். இன்னொரு தகவலையும் உங்களோடு மனநிறைவோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது அரசு வெளியிடும் ஊனமுற்றோருக்கான பணி வாய்ப்புகள் குறித்த அறிக்கையை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதன்  இறுதியில் மேற்குறிப்பிட்ட அனைத்தும் விளக்கங்கள் மட்டுமே வரையறை அல்ல என்ற சொற்றொடர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அதாவது இந்த பட்டியலில் இடம்பெறாத பணி வாய்ப்புக்களைக் கூட ஊனமுற்றோர்   பெற்றுக்கொள்ளும் தகுதி இருக்கும் பட்சத்தில் அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே இதன் பொருள். இந்த நெகிழ்வுத் தன்மையானது ஊனமுற்றோரை பொருத்தவரை நேர்மறையானதும் பலன் விளைவிக்கக் கூடியதுமாகும். இந்த நெகிழ்வுத் தன்மையானது தொடர்வது மட்டுமல்லாமல் வலிமை உடையதாகவும் உருப்பெற வேண்டும். நான்  இந்தப் பொறுப்பை ஏற்ற பின்  மத்திய  அளவிலும் மாநில  அளவிலும் பல சமூக மாற்றங்களை உருவாக்கி இருக்கிறேன். அவற்றுள் ஒன்று மாற்றுத்திறனாளிகளுக்காக வரையறுக்கப்பட்டுள்ள அடையாளம் காணப்படும் பணிவாய்ப்புகள் என்கிற நடைமுறை அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவதற்கு மட்டுமே. இந்தச் சட்டத்தில்  குறிப்பிடப்படாத பணி வாய்ப்பைப்   தகுதியின் அடிப்படையில் பெற முடிந்த ஊனமுற்றோரின் திறமையை முழுமையாக அங்கீகரிக்க வேண்டும் என்ற தெளிவான  வேண்டுகோளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் அலுவலகங்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொண்ட சிக்கிம், மிஸோரம்  போன்ற மாநிலங்கள் அரசாணையாக  வெளியிட்டிருக்கின்றன. நான் பெற்றிருக்கும் இந்த பணி வாய்ப்பு கூட மாற்றுத்திறனாளிகளுக்கான பணிவாய்ப்பு  பட்டியலில்  இடம்பெறவில்லை. என்னுடைய முழு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. புரிகிறதா?
கேள்வி: ஐஏஎஸ் பணி வாய்ப்புகளைப் பெறுவதில் இருக்கிற சிரமங்கள் குறித்து.
 பதில்:  உங்களுடைய கேள்வி புரிகிறது. இதோ பதில் அளிக்கிறேன். அரசுப் பணி  என்பது ஒன்று;  ஆட்சிப் பணி என்பது மற்றொன்று. நான் மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையராக  பல சமூகப் பிரச்சனைகளைக் கையில் எடுத்திருக்கிறேன். அதாவது மத்திய அரசின் ஐஏஎஸ் மற்றும் இதரப் பணிகள் மற்றும் மாநில அரசின் மாநில உரிமையியல் பணிகள் குறித்த முக்கியமான , கீழ்க்காநும் கோரிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் முன் வைத்திருக்கிறேன். ஊனமுற்றோர்க்கென்று மத்திய அரசு குறிப்பிடும் 19  பணிகளில் மூன்று மட்டுமே அடையாளப் படுத்தப் பட்டிருக்கின்றன. எனக்கும் அதெ நிலைதான். எனது பணியிடமும் இன்னும் அடையாள படுத்தப்படவில்லை. நான் தனிப்பட்ட முறையில் இந்திய அலுவலகப் பணியாளர் துறைக்கு  எழுதிய கடிதத்தில், சமீப காலமாக உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி முழுப் பார்வையற்றோரையும் நமது மத்திய அரசு மிக உயர்ந்த பதவிகளில் நியமித்திருக்கிறது. அப்படி இருக்க, ஐஏஎஸ் மற்றும் இன்னும் சில பணிகளுக்கு ஒரு முழுப் பார்வையற்றவரை ஏன் நியமிக்கக் கூடாது? மேலும் பார்வையற்றோர் சிலர் சார்ட்டட் அக்கவுண்ட்டண்டாக பணியாற்றும்போது அரசின் அகில இந்திய கணக்கர்  பணிகளுக்கு அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது? அதையெல்லாம் செய்யலாமே. என்ற என்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்திருக்கிறேன். இன்னொரு விஷயத்தை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.  சமூகத்தின் பல்வேறு தரப்பட்ட பொது மற்றும் விளிம்புநிலைப் பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நான் எழுதிய கடிதங்கள்   மாற்றுத்திறனாளிகள் முதன்மை அலுவலகத்தின் வலைதளத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை நீங்கள் சென்று படித்துத் தெரிந்துகொள்ளலாம்.


கெள்வி: சென்னையை சேர்ந்த தினகர் என்பவர் முதன்முறையாக ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டு ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார்.
பதில்:  தற்போது நிறைய துறைகளில் நிறைய பார்வையற்றோர் பணி வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். அவர்களில் திரு பிரகாஷ் குப்தாவும் ஒருவர். ஒரு காலத்தில் குறை பார்வையுடையோருக்கு மட்டுமே பணிகளை வழங்கும் நிலை இருந்தது. இப்போது முழுப் பார்வையற்றோருக்கும் அரசு பணி வழங்கப்படுகிறது. இது உண்மையில் வரவேற்கத்தக்க மாற்றம்தான். எனினும் பார்வையற்றோரின் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. முழு வெற்றி கிட்டும் வரை போராடியே ஆக வேண்டியிருக்கிறது.
கேள்வி: தொழில் நுட்பங்களைப் பொருத்தவரை தற்போது நடைமுறையில் இருக்கும் ஜாஸ் போன்ற மென்பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் சாதாரண பார்வையற்றோர் அதை வாங்கிப் பயன்படுத்த முடிவதில்லை. விலை குறைப்பிற்கு  எதாவது வாய்ப்பிருக்கிறதா?
பதில்: என்விடீஏ  போன்ற மென்பொருள்கள் தற்பொழுது இலவசமாகவே கிடைக்கின்றன. ஜாஸ் மென்பொருளைப் பொருத்தவரை, அவற்றை வடிவமைத்த அமைப்புகள்  பயன்படுத்த விரும்பும் பார்வையற்றோர் மற்றும் குறை பார்வையற்றோருக்கு மானிய விலையில் கொடுக்க முன்வந்திருக்கின்றன அல்லவா?

கே: தனியார் துறையில் பணியாற்றும் அல்லது சுயதொழில் புரியும் பார்வையற்றோர் அதிக கல்வித்தகுதி இருந்த போதிலும் கடன்களுக்காக வங்கிகளை அணுகும்போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. தகுந்த அரசாணைகள் கையில் இருக்கும் போதும் இது போன்ற பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை.
ப: இதற்கான உடனடி பதில் என்னிடம் இல்லை. அரசின் முறையான அல்லது சட்டபூர்வமான ஆவணங்களை கையில் எடுத்துக் கொண்டு போராட வேண்டும். அல்லது ஊனமுற்றோருக்கான தேசிய நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தை அணுகலாம். இப்போது நான் உங்களோடு ஒரு கருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் ஊனமுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி போன்ற சொற்களைப் பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். ஊனமுற்றோர் (handicapped) என்ற சொல் எப்படி உருவானது என்றால், ஆரம்ப காலகட்டத்தில் ஐரோப்பாவைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் கைகளில் கேப்களைப்பயன்படுத்தி பிச்சை எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். காலப்போக்கில் அந்தச் சொல் ஊனமுற்றோரோடு தொடர்புபடுத்தப்பட்டது. காரணம் அவர்கள் எந்த செயலையும் செய்யும் திறமை அற்றவர்களாக கருதப்பட்டனர். மாற்றுத்திறனாளி என்ற சொல்லைப் பொருத்தவரை, இந்த உலகில் ஒரு செயலை ஒரே மாதிரியாகச் செய்பவர்கள் என்றோ வெவ்வேறு விதமாக செய்பவர்கள்என்றோ பகுத்துக் காட்ட  முடியாது.  ஒவ்வொருவரும் தனித்தனி இயல்புகளைப் பெற்றிருக்கிறோம். இரண்டாவதாக இன்னொரு விதமாக குறிப்பிடுவதேன்றால் ஒவ்வொருவரும் அவரவர்க்கென்று தனித்தனி சிறப்புகளை பெற்றிருக்கிறோம். மூன்றாவதாக மாற்றுத்திறனாளி என்ற சொல்லின் மூலம்  சமூகத்தின் மாறுபட்ட திறன்களை பெற்றவர்கள் என்ற அழுத்தமான கருத்தை முன் வைக்கிறீர்கள். எங்களின் மாறுபட்ட திறன்களைச் சுட்டுவதை தவிர்த்துவிட்டு சமத்துவத்தை பிரதிபலிக்கும் பரிணாமங்களை பரிசீலனை செய்தல் வேண்டும். ஆக ஊனமுற்றவர் அல்லது பார்வையற்றவர் என்ற சொல் அதற்கான தேவையும் பொருத்தமான சூழலும் அமையும் சமயங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
 ஒரே வகை ஊனமுற்றோர், சார்வகை ஊனமுற்றோர் என்றால் என்ன?
திரு. பின்ச்சா அவர்களுக்குப் பிடித்த ஆங்கிலக் கவிதை எது?
அடுத்த இதழில்.
தமிழில் X. செலின்மேரி
தொடர்புகொள்ள: celinmaryx@gmail.com

* * *
சமூக வலைதளங்களில் எங்களைப் பின்தொடர:
முகநூல்: https://m.facebook.com/savaalmurasu/ 
வலையொளி: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public 
கீச்சகம்: https://twitter.com/savaalmurasu 
இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/savaalmurasu24_7/ 

வாட்ஸ் ஆப்: 9787673244
டெலகிராம்:9994636936