முகப்பு

Showing posts with label P.K. Pincha. Show all posts
Showing posts with label P.K. Pincha. Show all posts

மாற்றுத்திறனாளிகளுக்காக வரையறுக்கப்பட்டுள்ள அடையாளம் காணப்படும் பணிவாய்ப்புகள் என்கிற நடைமுறை அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவதற்கு மட்டுமே

31 ஆகஸ்ட், 2020
graphic ரகுராமன் மற்றும் P.K. பின்ச்சா
இடது ரகுராமன், வலது P.K. பின்ச்சா
கடந்த 2012 ஆம்ஆண்டு,  வள்ளுவன் பார்வை இணையக் குழுமத்தின் வெற்றித் திலகம் நிகழ்ச்சியில் கர்ண வித்யா அமைப்பைச் சேர்ந்த திரு ரகுராமன் அவர்கள், இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பார்வையற்றவராகிய மறைந்த திரு பீ.கே. பிஞ்ச்சா( பிரசன்ன குமார் பிஞ்ச்சா 1952 -  2020) அவர்களுடன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய அலைபேசி உரையாடல் ஒளிபரப்பப்பட்டது. திரு. பின்ச்சா அவர்களின் மறைவை நினைவுகூரும் பொருட்டு, சவால்முரசு வாசகர்களுக்காக அந்த ஒலிக்கோப்பை வழங்கிய திரு. ரகுராமன் அவர்களுக்கு சவால்முரசு ஆசிரியர்க்குழு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஆங்கில வழியில் நடைபெற்ற அந்த உரையாடலின் தமிழாக்கத்தின் இரண்டாவது பகுதி  இதோ.
கேள்வி: கல்வியைப் பொருத்தவரை பார்வையற்றோர் இரண்டு விதமான பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். சில பார்வையற்றோர் சிறுவயதில் பள்ளிக்குச் செல்லாமல் மிகத் தாமதமாகவே பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். சில குறிப்பிட்ட பயிற்சிகள் இருந்தபோதிலும் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை எட்ட முடிவதில்லை. இது போன்ற சிக்கல்களுக்கு   தங்களுடைய ஆலோசனைகளை கூறுங்கள்
 பதில்: பிரிட்ஜ் கோர்ஸ் எனப்படும் புத்தாக்க பயிற்சிகளை கொடுக்கலாம். உங்களுடைய  கருத்துடன்  உடன்படுகிறேன் ரகுராமன்.  அதாவது  பார்வையுள்ள சாதாரண  குழந்தையை  விட பார்வையற்ற குழந்தை சற்று  தாமதமாகவே கல்வியைப்  பெறுகிறது.  அவர்கள் இழந்த காலத்தையும் கல்வியையும் இதுபோன்ற புத்தாக்க பயிற்சிகள் மூலம் ஈடு செய்யலாம்.
கேள்வி:  சிலர் இடையில் திடீர்ப்பார்வை இழப்பைச் சந்திக்கிறார்கள். அவர்கள் மன அளவிலும் செயல் அளவிலும்  பல்வேறு பிரச்சினைகளைக் கடக்க  வேண்டியிருக்கிறது. உதாரணமாக பருவ வயதில் பார்வை இழக்கும் ஒரு கல்லூரி மாணவனை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு தங்களது தீர்வு என்ன?
பதில்: அவர்களை நெறிப்படுத்த இரண்டு மூன்று வழிமுறைகள் இருக்கின்றன. முதலாவது புத்தாக்கப் பயிற்சி. அந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்போது அவர்களில்  அறிவும் திறமையும் படைத்தவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள தேவையான தகுதிகளை பெற முடியும். மற்றவர்களுக்கு3 ஆர்ஸ் எனப்படும் வாசித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல் போன்ற அடிப்படை செயல்பாடுகளைக் கற்பிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு வாழ்க்கையை நடத்துவதற்குப் போதிய வருமானம்  தரக்கூடிய  வியாபாரம் உள்ளிட்ட  தொழில்சார் பயிற்சிகளை கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் சுய கௌரவத்தோடு வாழ முடியும்.
கேள்வி: வேலை வாய்ப்பைப் பொருத்தவரை பார்வையற்றோர் ஆங்கிலம், தமிழ், வரலாறூ உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகளை மட்டுமெ தேர்ந்தெடுக்கிறார்கள். மற்ற துறைகளைச் சாத்தியப்படுத்த என்ன செய்யலாம்?
பதில்: நான் இப்போது உங்களை ஊனமுற்றோர் நலச் சட்டத்தின் பணி வாய்ப்புகளை அடையாளப்படுத்துகின்ற 32-வது பிரிவுக்கு அழைத்துச் செல்கிறேன். நான் வழக்கமாகக் கூறும் கருத்தையே இப்போதும் முன்வைக்கிறேன். அதாவது பார்வையற்றோர் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பணி வாய்ப்புகளை மட்டும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நமது எல்லையை ஒரு குறிப்பிட்ட வரையறையோடு நிறுத்திக்கொள்ளும் நிலைக்கு வழிவகுக்கும். இன்னும் சிலர் பணி வாய்ப்புகளை அடையாளப்படுத்தல் என்பது நமக்குப் பயன் அளிக்கக் கூடியதும் அவசியமானதும்கூட  என்றும்  கூறுகின்றனர். இந்தச் சட்டத்தின்  கூறுகள் நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பணிகளை  வரிசைப்படுத்துவனவாகவும் தேவைப்படும் பட்சத்தில் வழிகாட்டும் ஆவணமாகவும் மட்டுமே இருக்க வேண்டும். இன்னொரு தகவலையும் உங்களோடு மனநிறைவோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது அரசு வெளியிடும் ஊனமுற்றோருக்கான பணி வாய்ப்புகள் குறித்த அறிக்கையை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதன்  இறுதியில் மேற்குறிப்பிட்ட அனைத்தும் விளக்கங்கள் மட்டுமே வரையறை அல்ல என்ற சொற்றொடர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அதாவது இந்த பட்டியலில் இடம்பெறாத பணி வாய்ப்புக்களைக் கூட ஊனமுற்றோர்   பெற்றுக்கொள்ளும் தகுதி இருக்கும் பட்சத்தில் அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே இதன் பொருள். இந்த நெகிழ்வுத் தன்மையானது ஊனமுற்றோரை பொருத்தவரை நேர்மறையானதும் பலன் விளைவிக்கக் கூடியதுமாகும். இந்த நெகிழ்வுத் தன்மையானது தொடர்வது மட்டுமல்லாமல் வலிமை உடையதாகவும் உருப்பெற வேண்டும். நான்  இந்தப் பொறுப்பை ஏற்ற பின்  மத்திய  அளவிலும் மாநில  அளவிலும் பல சமூக மாற்றங்களை உருவாக்கி இருக்கிறேன். அவற்றுள் ஒன்று மாற்றுத்திறனாளிகளுக்காக வரையறுக்கப்பட்டுள்ள அடையாளம் காணப்படும் பணிவாய்ப்புகள் என்கிற நடைமுறை அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவதற்கு மட்டுமே. இந்தச் சட்டத்தில்  குறிப்பிடப்படாத பணி வாய்ப்பைப்   தகுதியின் அடிப்படையில் பெற முடிந்த ஊனமுற்றோரின் திறமையை முழுமையாக அங்கீகரிக்க வேண்டும் என்ற தெளிவான  வேண்டுகோளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் அலுவலகங்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொண்ட சிக்கிம், மிஸோரம்  போன்ற மாநிலங்கள் அரசாணையாக  வெளியிட்டிருக்கின்றன. நான் பெற்றிருக்கும் இந்த பணி வாய்ப்பு கூட மாற்றுத்திறனாளிகளுக்கான பணிவாய்ப்பு  பட்டியலில்  இடம்பெறவில்லை. என்னுடைய முழு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. புரிகிறதா?
கேள்வி: ஐஏஎஸ் பணி வாய்ப்புகளைப் பெறுவதில் இருக்கிற சிரமங்கள் குறித்து.
 பதில்:  உங்களுடைய கேள்வி புரிகிறது. இதோ பதில் அளிக்கிறேன். அரசுப் பணி  என்பது ஒன்று;  ஆட்சிப் பணி என்பது மற்றொன்று. நான் மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையராக  பல சமூகப் பிரச்சனைகளைக் கையில் எடுத்திருக்கிறேன். அதாவது மத்திய அரசின் ஐஏஎஸ் மற்றும் இதரப் பணிகள் மற்றும் மாநில அரசின் மாநில உரிமையியல் பணிகள் குறித்த முக்கியமான , கீழ்க்காநும் கோரிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் முன் வைத்திருக்கிறேன். ஊனமுற்றோர்க்கென்று மத்திய அரசு குறிப்பிடும் 19  பணிகளில் மூன்று மட்டுமே அடையாளப் படுத்தப் பட்டிருக்கின்றன. எனக்கும் அதெ நிலைதான். எனது பணியிடமும் இன்னும் அடையாள படுத்தப்படவில்லை. நான் தனிப்பட்ட முறையில் இந்திய அலுவலகப் பணியாளர் துறைக்கு  எழுதிய கடிதத்தில், சமீப காலமாக உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி முழுப் பார்வையற்றோரையும் நமது மத்திய அரசு மிக உயர்ந்த பதவிகளில் நியமித்திருக்கிறது. அப்படி இருக்க, ஐஏஎஸ் மற்றும் இன்னும் சில பணிகளுக்கு ஒரு முழுப் பார்வையற்றவரை ஏன் நியமிக்கக் கூடாது? மேலும் பார்வையற்றோர் சிலர் சார்ட்டட் அக்கவுண்ட்டண்டாக பணியாற்றும்போது அரசின் அகில இந்திய கணக்கர்  பணிகளுக்கு அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது? அதையெல்லாம் செய்யலாமே. என்ற என்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்திருக்கிறேன். இன்னொரு விஷயத்தை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.  சமூகத்தின் பல்வேறு தரப்பட்ட பொது மற்றும் விளிம்புநிலைப் பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நான் எழுதிய கடிதங்கள்   மாற்றுத்திறனாளிகள் முதன்மை அலுவலகத்தின் வலைதளத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை நீங்கள் சென்று படித்துத் தெரிந்துகொள்ளலாம்.


கெள்வி: சென்னையை சேர்ந்த தினகர் என்பவர் முதன்முறையாக ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டு ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார்.
பதில்:  தற்போது நிறைய துறைகளில் நிறைய பார்வையற்றோர் பணி வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். அவர்களில் திரு பிரகாஷ் குப்தாவும் ஒருவர். ஒரு காலத்தில் குறை பார்வையுடையோருக்கு மட்டுமே பணிகளை வழங்கும் நிலை இருந்தது. இப்போது முழுப் பார்வையற்றோருக்கும் அரசு பணி வழங்கப்படுகிறது. இது உண்மையில் வரவேற்கத்தக்க மாற்றம்தான். எனினும் பார்வையற்றோரின் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. முழு வெற்றி கிட்டும் வரை போராடியே ஆக வேண்டியிருக்கிறது.
கேள்வி: தொழில் நுட்பங்களைப் பொருத்தவரை தற்போது நடைமுறையில் இருக்கும் ஜாஸ் போன்ற மென்பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் சாதாரண பார்வையற்றோர் அதை வாங்கிப் பயன்படுத்த முடிவதில்லை. விலை குறைப்பிற்கு  எதாவது வாய்ப்பிருக்கிறதா?
பதில்: என்விடீஏ  போன்ற மென்பொருள்கள் தற்பொழுது இலவசமாகவே கிடைக்கின்றன. ஜாஸ் மென்பொருளைப் பொருத்தவரை, அவற்றை வடிவமைத்த அமைப்புகள்  பயன்படுத்த விரும்பும் பார்வையற்றோர் மற்றும் குறை பார்வையற்றோருக்கு மானிய விலையில் கொடுக்க முன்வந்திருக்கின்றன அல்லவா?

கே: தனியார் துறையில் பணியாற்றும் அல்லது சுயதொழில் புரியும் பார்வையற்றோர் அதிக கல்வித்தகுதி இருந்த போதிலும் கடன்களுக்காக வங்கிகளை அணுகும்போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. தகுந்த அரசாணைகள் கையில் இருக்கும் போதும் இது போன்ற பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை.
ப: இதற்கான உடனடி பதில் என்னிடம் இல்லை. அரசின் முறையான அல்லது சட்டபூர்வமான ஆவணங்களை கையில் எடுத்துக் கொண்டு போராட வேண்டும். அல்லது ஊனமுற்றோருக்கான தேசிய நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தை அணுகலாம். இப்போது நான் உங்களோடு ஒரு கருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் ஊனமுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி போன்ற சொற்களைப் பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். ஊனமுற்றோர் (handicapped) என்ற சொல் எப்படி உருவானது என்றால், ஆரம்ப காலகட்டத்தில் ஐரோப்பாவைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் கைகளில் கேப்களைப்பயன்படுத்தி பிச்சை எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். காலப்போக்கில் அந்தச் சொல் ஊனமுற்றோரோடு தொடர்புபடுத்தப்பட்டது. காரணம் அவர்கள் எந்த செயலையும் செய்யும் திறமை அற்றவர்களாக கருதப்பட்டனர். மாற்றுத்திறனாளி என்ற சொல்லைப் பொருத்தவரை, இந்த உலகில் ஒரு செயலை ஒரே மாதிரியாகச் செய்பவர்கள் என்றோ வெவ்வேறு விதமாக செய்பவர்கள்என்றோ பகுத்துக் காட்ட  முடியாது.  ஒவ்வொருவரும் தனித்தனி இயல்புகளைப் பெற்றிருக்கிறோம். இரண்டாவதாக இன்னொரு விதமாக குறிப்பிடுவதேன்றால் ஒவ்வொருவரும் அவரவர்க்கென்று தனித்தனி சிறப்புகளை பெற்றிருக்கிறோம். மூன்றாவதாக மாற்றுத்திறனாளி என்ற சொல்லின் மூலம்  சமூகத்தின் மாறுபட்ட திறன்களை பெற்றவர்கள் என்ற அழுத்தமான கருத்தை முன் வைக்கிறீர்கள். எங்களின் மாறுபட்ட திறன்களைச் சுட்டுவதை தவிர்த்துவிட்டு சமத்துவத்தை பிரதிபலிக்கும் பரிணாமங்களை பரிசீலனை செய்தல் வேண்டும். ஆக ஊனமுற்றவர் அல்லது பார்வையற்றவர் என்ற சொல் அதற்கான தேவையும் பொருத்தமான சூழலும் அமையும் சமயங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
 ஒரே வகை ஊனமுற்றோர், சார்வகை ஊனமுற்றோர் என்றால் என்ன?
திரு. பின்ச்சா அவர்களுக்குப் பிடித்த ஆங்கிலக் கவிதை எது?
அடுத்த இதழில்.
தமிழில் X. செலின்மேரி
தொடர்புகொள்ள: celinmaryx@gmail.com

* * *
சமூக வலைதளங்களில் எங்களைப் பின்தொடர:
முகநூல்: https://m.facebook.com/savaalmurasu/ 
வலையொளி: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public 
கீச்சகம்: https://twitter.com/savaalmurasu 
இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/savaalmurasu24_7/ 

வாட்ஸ் ஆப்: 9787673244
டெலகிராம்:9994636936

"ஆணையருக்கு சத்து இருக்குமானால், அந்தச் சட்டம் புத்துயிர் பெற்று முறையாக நடைமுறைக்கு வரும்தானே?"

31 ஜூலை, 2020
graphic ரகுராமன் மற்றும் P.K. பின்ச்சா
இடது ரகுராமன், வலது P.K. பின்ச்சா
கடந்த 2012 ஆம்ஆண்டு,  வள்ளுவன் பார்வை இணையக் குழுமத்தின் வெற்றித் திலகம் நிகழ்ச்சியில் கர்ண வித்யா அமைப்பைச் சேர்ந்த திரு ரகுராமன் அவர்கள், இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பார்வையற்றவராகிய மறைந்த திரு பீ.கே. பிஞ்ச்சா( பிரசன்ன குமார் பிஞ்ச்சா 1952 -  2020) அவர்களுடன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய அலைபேசி உரையாடல் ஒளிபரப்பப்பட்டது. திரு. பின்ச்சா அவர்களின் மறைவை நினைவுகூரும் பொருட்டு, சவால்முரசு வாசகர்களுக்காக அந்த ஒலிக்கோப்பை வழங்கிய திரு. ரகுராமன் அவர்களுக்கு சவால்முரசு ஆசிரியர்க்குழு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஆங்கில வழியில் நடைபெற்ற அந்த உரையாடலின் தமிழாக்கம் இதோ.
ரகுராமன்: வணக்கம் சார். வள்ளுவன் பார்வை குழுமத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.  இந்திய அரசின் மிகச் சிறந்த பதவியில் அமர்ந்திருக்கும் முதல் பார்வையற்றவராகிய தங்களை வாழ்த்தி மகிழ்வதோடு, நமது சமூகம் குறித்த தங்களது பொதுவான கருத்துக்களை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.
பின்ச்சா: மகிழ்ச்சி. முதலில் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் பார்வையற்றவர் மட்டுமல்ல; இந்தப்  பொறுப்பு வகிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கும் முதல் ஊனமுற்றவரும்கூட. எனக்கு முன்னர் இந்தியாவில் எவரும் இந்தப் பொறுப்பைப் பெறவில்லை.
இரண்டாவது உண்மை என்னவென்றால், இந்தப் பொறுப்பானது, தொடர்ச்சியான பல போட்டி நேர்காணல்களுக்குப் பிறகு, தகுதியின் அடிப்படையில் மட்டுமே எனக்குக் கொடுக்கப்பட்டதாகும். இதுவே எனக்கு முழு நிறைவை தருவதாக அமைகிறது. என்னைப் பொருத்தவரை இது  ஒரு நெகிழ்ச்சியான தருணம்;  அதேசமயம், ஊனமுற்றோரைப் பொருத்தவரை சுதந்திர இந்திய வரலாற்றில் எழுத்துக்களால் வரையறுக்கப்பட வேண்டிய முக்கியமான சாதனையை அறிந்துகொள்ளும் தருணமுமாகும்.  
அடுத்ததாக, மிகவும் பரந்த பொருளுடையதும், பொதுப்படையானதுமான  உங்கள் கேள்விக்கு வருகிறேன். இயலாமை மற்றும் முயலாமை இரண்டு சொற்களையும் ஒரே பொருளுடையதாகக் கொள்வது மிக மிகத் தவறான செயலாகும். ஊனம் என்பது முயற்சி செய்யாமல் இருப்பதைக் குறிப்பதல்ல; அதாவது சமூகத்தின் அங்கமாகிய ஒரு ஊனமுற்றவர், சமூகத்தை தொடர்புகொள்ள அல்லது சமூகச் செயல்பாடுகளில் பங்கெடுக்க முயலும்போது அவர்களுக்கு தடையாக இருக்கக்கூடிய குறைபாட்டை குறிப்பதாகும். சமூகத்தால்  பல்வேறு வகைகளில் வஞ்சிக்கப்படும் ஊனமுற்றோர், தங்களின் இந்த நிலை மாற அல்லது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டுமானால் செய்யவேண்டிய முதல் செயல் என்ன தெரியுமா? தங்களுக்குள் இருக்கும் இடர்பாடுகளை அடையாளம் கண்டுகொண்டு, அவற்றோடு பயணித்து அவற்றையும் கடந்து  வெற்றி பெறும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். பார்வையற்றோர் உட்பட உடல் ஊனமுற்றோர் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். அதாவது தரக்குறைவானவர்களாகவும், மோசமான நடத்தை உடையவர்களாகவும், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களாகவும், உரிமைகள் மறுக்கப்பட வேண்டியவர்களாகவும், நிராகரிக்கப்படுபவர்களாகவும், கண்டுகொள்ளப்படாதவர்களாகவும், நாகரீகமற்றவர்களாகவும், சமூக மற்றும் அரசியல் நடைமுறைகளிலிருந்து விளக்குப் பெற்றவர்களாகவும்  கருதப்படுகின்றனர். அரசாங்கமும் சமுதாயமும் இணைந்து செயல்படுவதே இதுபோன்ற பாகுபாடுகளைக் களைவதற்கு பொருத்தமான தீர்வாக இருக்க  முடியும் என்று நான் கருதுகிறேன்.
கே: சிறப்பு. ஊனமுற்றோர் சந்திக்கக்கூடிய பொதுவான சவால்கள் குறித்துப் பேசினீர்கள். ஊனமுற்றோரின் முதன்மை ஆணையராகத் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் சவால்களையும் பற்றிக் கூறுங்கள்.
ப: ஊனமுற்றோர் ஆணையராகப் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறேன். ஊனமுற்றோருக்கான முதன்மை ஆணையரின் அலுவலகத்தில் சந்திக்கும் முதல் பிரச்சனையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். பொதுவாக மக்கள்  சிலர் ஊனமுற்றோருக்கான சட்டத்தில் (PWD Act 1995) சத்து இல்லை என்று பரிகசிக்கிறார்கள். அது ஓரளவு உண்மை என்றாலும், ஆணையருக்கு சத்து இருக்குமானால், அந்தச் சட்டம் புத்துயிர் பெற்று முறையாக  நடைமுறைக்கு வரும்தானே? நான் இந்தப் பொறுப்பை வகித்த பிறகுதான் ஒரு ஆணையராக செய்ய வேண்டிய வழிமுறைகள், கட்டளைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து அறிந்திருக்கிறேன். பணி சார்ந்த பல பிரச்சனைகளே அதிகம் என் கவனத்தை எட்டுகின்றன. புள்ளி விவரங்களோடு என்னால் சொல்ல முடியாது என்றாலும், ஏறக்குறைய 90% நிலை இதுதான்.
நான் இங்கு நிறைய சவால்களைச் சந்திக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்வதென்றால், ஊனமுற்றோருக்கான ஆணையரின் அலுவலகம் தொடர்ந்து தேவைப்படும் அளவுக்கு வலிமைப்படுத்தப்பட வேண்டும். இந்திய அளவில் மட்டுமல்ல மாநில அளவிலும் இயங்கும் ஊனமுற்றோருக்கான ஆணையர் அலுவலகங்கள்  சிறப்பான கட்டமைப்பைப் பெற்றிருக்க வேண்டும்.
 கே: ஊணமுற்றோர் சட்டம் 1995 அமல்படுத்தப்பட்ட பிறகு குறிப்பிட்ட முன்னேற்றங்கள் அல்லது மாற்றங்கள் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா?
ப: ஊனமுற்றோர் சட்டம் 1995 அமல்ப்படுத்தப்பட்ட பிறகு, குறிப்பிட்ட சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதுமான இச்சட்டத்தின் பயன்பாடு என்பது குறிப்பிட்டுச் சொல்லும் அளவிலோ, திருப்தி தருவதாகவோ இல்லை. இதற்கு பல காரணங்களைக் குறிப்பிடலாம். அவற்றை இந்த சிறிய நேர்காணலில் முழுமையாகப் பட்டியலிட இயலாது. எனினும்  தற்போது நடைமுறையில் உள்ள (PWD act 1995) சட்டம் கூட குறிப்பிடத்தக்க நேர்மறையான பல சரத்துகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது. இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், நாம் நிறைய சாதிக்க வாய்ப்பிருக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊனமுற்றோருக்கான உரிமைகள் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதும் நீங்கள் அறிந்ததே. ஏற்கனவே ஒரு சட்டம் நடைமுறையில் இருக்கும்போது அதோடு தொடர்புடைய இன்னொரு சிறப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுமானால், அது தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். எனவே இதுபோன்ற  சட்டங்கள்  தடையின்றி மற்றும்  எந்தவித சமரசத்திற்கும் இடமின்றி முழுமையாக  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
கே: தங்கள் தேவைகளுக்காகப் போராடும் ஊனமுற்றோர் அடிப்படையில் செய்யவேண்டியது என்ன? உதாரணமாக, குஜராத், பெங்களூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த ஊனமுற்றோர் தங்கள் உரிமைகளுக்காக அதிகம் போராட வேண்டியிருக்கிறது. அது குறித்து உங்களுடைய கருத்துக்களைப் பகிரலாமே.
ப: என்னால் தெளிவான புள்ளிவிவரங்களை தற்போது தர இயலாது. எனினும், ஊனமுற்றோர் சட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியாக நான் கருதும் பிரிவு 33ஐ சுட்டிக்காட்டி விளக்குகிறேன். இந்தப் பிரிவின்படி, அரசுசார் வேலைவாய்ப்புகளில்  ஊனமுற்றோருக்கென்று மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதிலும் ஒரு விழுக்காடு பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்படுகிறது. இந்தச் சட்டப்படி நாடு முழுவதும் உள்ள முழுப் பார்வையற்றோரும், குறைப் பார்வையற்றோரும் தங்கள் பணி வாய்ப்புகளை முழுமையாகப் பெறுகிறார்களா என்றால் அதுதான் இல்லை. இந்த மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடானது பார்வையற்றோருக்கும், காதுகேளாதோருக்கும், உடல் ஊனமுற்றோருக்கும், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.  பார்வையற்றோர் மட்டுமல்ல; பல பகுதிகளில் ஊனமுற்றோரும் தங்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி பணி வாய்ப்புகளைப் பெற முடிவதில்லை.
கே: ஒரு தனிப்பட்ட  பார்வையற்றவர்  அல்லது ஊனமுற்றவர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,  தங்களது வளர்ச்சியை உறுதிப்படுத்திக்கொள்ளவும் என்ன செய்ய வேண்டும்?
ப: என் மனதில் தோன்றும் முதல் விஷயம் என்னவென்றால், பார்வையற்றோராக இருந்தாலும் சரி, எந்தவகை ஊனமுற்றவராக இருந்தாலும் சரி முதலில் சமூகச் செயல்பாடுகளை முன்னெடுப்பவராக இருக்க வேண்டும். பார்வையற்றோரைப் பொருத்தவரை, பார்வையின்மை என்பது ஒரு உடல்க்குறைபாடு மட்டுமே என்பதையும், பிற உறுப்புகளைப் பயன்படுத்தி ஈடு செய்துகொள்ளலாம் என்பதையும், சில வரையறைக்குள்தான் இயங்க  முடியும்  என்பதையும் முதலில் அவர்கள் உணர வேண்டும்.
ஒரு உதாரணத்தோடு இதை உங்களுக்கு விளக்குகிறேன். வெள்ளை நிற வீடானது வெள்ளை நிறமானதாக மட்டுமே இருக்க முடியும். பச்சை என்றோ நீலம் என்றோ  சொல்லிவிட  முடியாது. அதுபோல ஒவ்வொரு தனிநபருக்கும்   குறிப்பிட்ட வரையறைகள் இருக்கின்றன. அவர்கள் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டுதான் இயங்க முடியும். உங்களுக்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்ல விரும்புகிறேன். அதாவது அதிகமான  கல்வித் தகுதி என்பது ஒருவகை வரையறை; குறைந்த கல்வித் தகுதி என்பது இன்னொரு வரையறை. அதிக ஈடுபாட்டுடனும், நம்பிக்கையுடனும் செயல்படும் ஒரு பார்வையற்றவர் பொதுமக்கள் மத்தியில் நிறைய சாதிக்க முடியும்.
 கே: இந்தியா முழுவதும் உள்ள ஊனமுற்றோரின் மொத்த எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற சிக்கல்களுக்கு தாங்கள் கூற விரும்பும் தீர்வு என்ன?
ப: விரிவான கணக்கெடுப்பு தேவையாக உள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகு ஊனமுற்றோர் குறித்த ஆய்வறிக்கைகளை தயார் செய்யலாம். 2001 கணக்கெடுப்பைப் பொருத்தவரை இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், ஊனத்தின் தன்மை குறித்த  தெளிவான விளக்கம்  இல்லாததாலும், அனைத்துவகையான ஊனங்களும் கணக்கில் கொள்ளப்படாததாலும், முறையான பயிற்சி பெறாத கணக்கெடுப்பாளர்களாலும் இது சாத்தியப்படவில்லை. இதுபோன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதால் 2011 கணக்கெடுப்பிற்கான வடிவமைப்புகளில் தேவையான கேள்விகள் சேர்க்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ளன. இது ஓரளவு வெற்றிகரமான முடிவைத் தரும் என்று நம்புகிறேன். இன்னொரு விஷயம் தெரியுமா ரகுராமன்? 2001 கணக்கெடுப்பின்படி பார்த்தால், நம்மைவிட  வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிக சதவிகிதத்தில் ஊனமுற்றோர் இருப்பதாகவே புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நமது நாட்டில் ஊனமுற்றோரின் எண்ணிக்கை குறைந்த அளவில் இருப்பதாகக் கொண்டாலும், ஊனத்தின் தன்மை குறித்த தெளிவான புரிதல் இல்லாததாலும், கணக்கெடுப்பதற்குத் தேவையான அளவுக்கு பயிற்சி பெற்ற திறமையாளர்கள் இல்லாததாலும் ஊனமுற்றோரின் எண்ணிக்கையை அல்லது சதவிகிதத்தை சரியாக அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை.
கே: புள்ளிவிவரச் சேகரிப்பில் ஊனமுற்றோருக்கான ஆணையராக தாங்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம்?
ப:  இல்லை. அது ஆணையரின் பணி இல்லை. ஊனமுற்றோருக்கான ஆணையர் நேரடியாகக் களத்துக்குச் சென்று கணக்கெடுப்பை மேற்கொள்வது என்பது இயலாத காரியம். அத்தோடு அது அவருடைய பணியும் அன்று.
ஊனமுற்றோருக்கான மத்திய மற்றும் மாநில ஆணையரகங்கள் ஊனமுற்றோருக்கென்று பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட நீதிசார் அமைப்புகளாகும். ஊனமுற்றோருக்கான ஆணையரின் முதன்மை அல்லது முக்கியப் பணி என்னவெனில், சட்டம் சார்ந்த ஒழுங்கைப் பராமரித்தல், அறிக்கைகள் கொள்கைகளை வகுத்தல், அரசாணைகள் மற்றும் சிறப்பு ஆலோசனைகளை வழங்குதல் போன்றவை ஆகும்.
 கே: கணக்கெடுப்பிற்கான பரிந்துரைகளை அல்லது அழுத்தத்தையாவது அரசுக்குத் தரலாம் அல்லவா?
ப:  தாராளமாக. பரிந்துரைகளை யார் வேண்டுமானாலும்  செய்யலாம். மேலும்   ஊனமுற்றோருக்கான உரிமைகளைப் பாதுகாப்பது, சலுகைகளைப் பெற்றுத் தருவது போன்றவையும் ஊனமுற்றோருக்கான ஆணையத்தின் முக்கியப் பணிகளாகும்.
கே: நிர்வாகத்தடைகள் பற்றிக் கேட்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் அரசாணைகள் இருந்தபோதும், தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அல்லது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள உயர் அதிகாரிகளை அணுகுவதில் சுணக்கம் ஏற்படுகிறது. இதுபோன்ற சிக்கல்களுக்கு தாங்கள் முன்வைக்க விரும்பும் தீர்வு என்ன?
 ப: ரகுராமன்! இது பரந்துபட்ட அளவிலான நிர்வாகத்துறை சார்ந்த கேள்வி. இதற்கு பல காரணங்களைக் குறிப்பிடலாம். ஊனமுற்றோருக்கான முதன்மை ஆணையரகமோ அல்லது மாநில அளவிலான ஊனமுற்றோர் அலுவலகமோ மட்டும் இதற்குப் பொறுப்பேற்க முடியாது. நமது அரசியல் அமைப்பின் அடித்தளத்திலிருந்து முற்றிலும் உள்ளார்ந்து ஏற்பட வேண்டிய மாற்றம் இது. இதுபோன்ற பிரச்சனைகள் குறைவதற்கு  நாம் என்ன செய்யலாம் என்றால், இன்றைக்கு இருக்கிற அரசு அதிகாரிகள், ஊனமுற்றோரைக் கையாளுகின்ற அரசு அலுவலர்கள், மேலாளர்கள், இதழியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊனமுற்றோர் குறித்த தெளிவான புரிதலை உட்புகுத்த வேண்டும். எந்த அளவிற்கு அவர்களது உள்ளார்ந்த புரிதல்கள் மற்றும் திறமைகள் அதிகமாகிறதோ அந்த அளவுக்கு வருங்கால ஊனமுற்றோர் பயன்பெற முடியும்.
* * ** *
பார்வையற்றோருக்கான சிறந்த கல்விமுறை எது?
ஊனமுற்றோருக்கான மறுவாழ்வுத் தளத்தில் இயங்கும் நிறுவனங்களை எவ்வாறு வரையறுப்பது?
பார்வையற்றோர் சமூகத்திற்கு திரு. பின்ச்சா அவர்கள் வழங்கிய  சுருக்கமான அறிவுரை யாது?
அடுத்த இதழில்.
தமிழில் X. செலின்மேரி
தொடர்புகொள்ள: celinmaryx@gmail.com

யாருக்காக அழுதபோதும் தலைவனாகலாம்

31 ஜூலை, 2020
graphic P.K. பின்ச்சா
P.K. பின்ச்சா
ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை காலை, டில்லியில் ஒரு தனியார் மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை சுவாசித்தார் ஊனமுற்றோருக்கான நடுவண் மேனாள் தலைமை ஆணையர் (Chief Commissioner for Persons with Disabled) திரு. பிரசன்னக்குமார் பின்ச்சா அவர்கள். இந்தச் செய்தியைக் கேட்ட ஒட்டுமொத்த இந்திய ஊனமுற்றோர் சமூகமும் துடித்துப்போனது. சமூகவலைதளங்களில் அவருக்கு இரங்கல் செய்திகள் பகிரப்பட்டதோடு, ஊனமுற்றோருக்கான நடுவண் ஆணையராக அவர் மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நினைவுகூரப்பட்டன.
graphic முருகானந்தம்
முருகானந்தம்
graphic ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் 
வடக்கே பார்வையற்றோர் இணைந்து நடத்தும் ரேடியோ உடான் என்கிற இணையவழி பண்பலை அவருக்கான நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியது. தமிழகத்தில், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கமும் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையும் இணைந்து, கடந்த 27.ஜூலை.2020 அன்று மாலை சூம் வழியே நினைவேந்தல் கூட்டத்தை ஏற்பாடுசெய்திருந்தார்கள். பேரவையின் ஒருங்கிணைப்பாளரான முனைவர் கு. முருகானந்தம் அவர்கள் ;நினைவேந்தலை வழிநடத்த, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார் அகில இந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பின் தலைவரும் உலகப் பார்வையற்றோர் ஐக்கியத்தின் (World Blind Union) பொதுச்செயலாளருமான  A.K. மித்தல் அவர்கள்.
“ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டேன்”:
graphic A.K. மித்தல்
A.K. மித்தல்
திரு. P.K. பின்ச்சா, மன உறுதிகொண்ட செயல்பாட்டாளர், மனிதநேயப் பண்பாளர் மற்றும் நல்ல உபசரிப்பாளர் எனத் தன் பேச்சைத் தொடங்கிய திரு. மித்தல் அவர்கள், அஸ்ஸாமின் ஜோர்காட்டில் பார்வையற்றோருக்கான நிறுவனத்தைத் தொடங்கியது முதல், இந்திய அரசு செயலருக்கு இணையான ஊனமுற்றோருக்கான நடுவண் தலைமை ஆணையர் பதவிவகித்தது வரை, திரு. பின்ச்சா அவர்களின் படிப்படியான வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார். “ஊனமுற்றோருக்கான தலைமை ஆணையராக நியமிக்கப்பட்ட முதல் ஊனமுற்றவர் என்ற பெருமையைப் பெற்ற பின்ச்சா அவர்களுக்கு இரண்டாம் முறை அந்த வாய்ப்பு  வழங்கப்படாதது துரதிஷ்டவசமானது, எப்படியாயினும், நான் எனது தனிப்பட்ட அர்ப்பணிப்புள்ள நண்பனை இழந்துவிட்டேன்” எனத் தனது நினைவேந்தல் உரையை முடித்தார் திரு. A.K. மித்தல் அவர்கள்.
அதிகாரங்களை அறியச் செய்தவர்:
graphic அரங்கராஜா
அரங்கராஜா
“மிராண்டா என்கிற பார்வை மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர் தனது கல்லூரித் தேர்வை எதிர்கொண்டபோது, அவருக்கான வினாத்தாள்களை பிரெயிலில் வழங்கிட உரிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான தேசிய நிறுவனத்தின் மண்டல மைய இயக்குநர், பார்வையற்றோர் குறித்து தரக்குறைவாகப் பேசிய விவகாரத்தைக் கையிலெடுத்த எமது சங்கத்தின் பக்கம் நின்ற திரு. பின்ச்சா அவர்கள், உடனடியாக அந்த அதிகாரிமீது நடவடிக்கை எடுத்தார் என்பதை நான் இங்கு நன்றியோடு நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறேன். மத்தியிலும் சரி, மாநிலத்திலும் ஊனமுற்றோருக்கான ஆணையருக்கு இவ்வளவு அதிகாரங்கள் இருக்கின்றன என்பதை அவர் பதவிகாலத்தில், அவர் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் நம்மால் அறிந்துகொள்ள முடிந்தது” என உணர்ச்சி பொங்கப் பேசினார் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் துணைத்தலைவரும், பக்தவச்சலம் நினைவு மகளிர் கல்லூரியின் விரிவுரையாளருமான திரு. அரங்கராஜா அவர்கள்.
இந்தியாவுக்கு ஒரு ஷேஷன்போல மாற்றுத்திறனாளிகளுக்கு பின்ச்சா:
graphic சிவராமன்
சிவராமன்
திரு. பின்ச்சா அவர்களின் நினைவேந்தலில் பங்கேற்றுப் பேசிய மாநிலக் கல்லூரியின் பேராசிரியரும், பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான திரு. V. சிவராமன் அவர்கள், பதிலி எழுத்தர்கள் தொடர்பாக அவர் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சிலாகித்தார். தேர்வெழுதும் ஒரு பார்வையற்ற மாணவருக்கான பதிலி எழுத்தரும் அந்த மாணவரின் தகுதியை ஒத்தவராக இருத்தல் அவசியம் என்கிற முக்கியமான அம்சத்தை விதந்தோதினார். எப்படி இந்தியத் தேர்தல் ஆணையராக T.N. ஷேஷன் பதவியேற்றதற்குப் பிறகு, ஒரு தேர்தல் ஆணையருக்கான அதிகாரங்கள் குறித்து நாட்டு மக்களால் அறிந்துகொள்ள முடிந்ததோ, அதைப்போலத்தான் பின்ச்சா அவர்களின் பதவிக்காலம் ஊனமுற்றோருக்கான ஆணையரின் பதவிக்கான அதிகாரங்கள் குறித்து ஊனமுற்ற சமூகத்திற்குப் புரியவைத்தது என்பதைச் சுட்டிக்காட்டிய சிவராமன், “அவர் விட்டுச் சென்ற தடத்தைப் பின்பற்றி, உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடுவதே, நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்” என முடித்தார்.
தொடர் செயல்பாடு எல்லோருக்கும் வராது:
graphic பாலகணேசன்
பாலகணேசன்
“வடகிழக்கைச் சேர்ந்த ஒரு பார்வையற்றவர் இத்தனை தூரம் முன்னேறி, உச்சப் பதவியில் இருந்தார் என்பது உண்மையில் வியப்பாக இருக்கிறது. வார்த்தைகளை மாற்றுவதில் அவர் காட்டிய அக்கறை போற்றுதலுக்குரியது” என திரு. பின்ச்சா அவர்கள் குறித்து, தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார் விரல்மொழியர் மின்னிதழின் ஆசிரியர் திரு. பாலகணேசன். மேலும் அவர் தனது உரையில், “திரு. பின்ச்சா அவர்கள் தன் வாழ்நாளின் இறுதிவரை இயங்கிக்கொண்டே இருந்தார், இது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கைகூடாது.  அவர், தொண்டு நிறுவனங்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டார்” என தனது இரங்கல் உரையை நிறைவு செய்தார்.
அனைவருக்குமான முன் உதாரணம்:
graphic சித்ரா
சித்ரா
“திரு. பின்ச்சா அவர்கள், மனித உரிமைகள் ஆணையத்தில் ஊனமுற்றோர் அறிக்கையாளராகவும், பல்வகை ஊனமுற்றோருக்கான தேசிய அறக்கட்டளையின் தலைவராகவும் அரசால் அமைக்கப்பட்ட இரண்டு அமைப்புகளில் ஒரே காலகட்டத்தில் பதவிவகித்த முதல் ஊனமுற்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். அவர் ஒட்டுமொத்த பார்வையற்றோர் சமூகமாகிய நமக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறார்” எனத் தனது இரங்கல் உரையை நிகழ்த்தினார் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் செல்வி. சித்ரா.
ஒத்துழைப்பும், எதிர்ப்பும்:
பின்ச்சா அவர்களின் மறைவிற்கு பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் சார்பில் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட மத்திய பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் திரு. பூபதி அவர்கள், திரு. பின்ச்சா அவர்களின் அதிரடிகள்  இன்றைக்கும் தேவைப்படுகின்றன  எனப் புகழாரம் சூட்டினார். சிறப்புக் கல்வியை அவர் ஆதரித்தார் என்றாலும், அவைகளை ஸ்பெஷல் ஸ்கூல்ஸ் என்பதற்குப் பதிலாக, தி ஸ்கூல்ஸ் ஸ்பெசிஃபிக் ஃபார் டிசேபில்ட் என அழைப்பதையே அவர் விரும்பினார் என்பதைச் சுட்டிக் காட்டிய பூபதி, ‘co-operate, where you can, resist, where you must’ என்கிற பின்ச்சாவின் பிரபல வாக்கியத்தை நினைவுகூர்ந்தார்.
graphic பூபதி
பூபதி
“ஆக்‌ஷன் எய்ட் அமைப்பின் மூலம், ஐநாவின் மனித உரிமைகள் பிரகடனத்தை வடிவமைப்பதில் பங்காற்றிக்கொண்டிருந்தபோதுதான் அவருக்கு ஒரு வங்கி செக் புக் வழங்க மறுத்தது. அதை எதிர்த்து வழக்காடி வெற்றி பெற்றார். அப்போது அவர் சொன்ன வாக்கியம் “சண்டை முடிந்துவிட்டது, ஆனால், போர் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.’ ஆக்‌ஷன் எய்ட் என்கிற சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் அவர் ஊனமுற்றோருக்காக மட்டும் பணியாற்றவில்லை. ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்காகவும் பணியாற்றினார்” என பின்ச்சா பற்றிய இன்னொரு கோணத்தையும் பதிவு செய்துவிட்டுச் சென்றார் பேராசிரியர் பூபதி.
துணிச்சலும் அதிரடியும்:
graphic முத்துச்செல்வி பாண்டியராஜன்
முத்துச்செல்வி பாண்டியராஜன்
“திரு. பின்ச்சா அவர்கள்  ஊனமுற்றோருக்கான நடுவண் தலைமை ஆணையராகப் பதவி வகித்த காலத்தில், அன்றைய காங்கிரஸ் அரசாங்கம், ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டத்தை அவசரகதியில் அமல்ப்படுத்தும் செயலில் இறங்கியது.  அதைத் தடுத்து நிறுத்தும் வண்ணம், தான் ஒரு அரசு அதிகாரியாக இருந்தபோதிலும், மிகத் துணிச்சலுடன் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி அமலாக்கத்தை நிறுத்தினார். அவர் காலத்தில் அமலிலிருந்த ஊனமுற்றோருக்கான சட்டம் 1995 எல்லா மாநிலங்களிலும் முழு வலிமையுடன் அமலாக்கப்படுவதை உறுதிசெய்ய அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்து அதைக் கண்காணித்தார்” என பின்ச்சா அவர்களின் பதவிகால அதிரடிகளைப் பகிர்ந்துகொண்ட அகில இந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பின் துநைத்தலைவர் திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜன், திரு. பின்ச்சா அவர்கள் குறித்த தனது சொந்த அனுபவம் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார்.
graphic அழகிய பெருமாள்
அழகிய பெருமாள்
பொறியியல் பட்டதாரியான அழகிய பெருமாளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு கண்களிலும் பார்வை போய்விட்டது. ஆனாலும் நம்பிக்கையைக் கைவிடாத பெருமாள், கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். நூறு விழுக்காடு பார்வையற்றவருக்கு உயர் அலுவலர் பணியிடத்தை வழங்க மறுத்து, பெருமாளின் கனவுக் கோட்டையைத் தகர்த்தெறிந்தது குறிப்பிட்ட வங்கி நிர்வாகம். அகில இந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பு இந்தப் பிரச்சனையை அன்றைய தலைமை ஆணையரான திரு. பின்ச்சா அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றது. வங்கி உயர் அலுவலர்ப் பணியானது முழுப்பார்வையற்றவர்களுக்கான அடையாளம் காணப்பட்ட பணித்தொகுப்பில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, தொடர்புடைய வங்கி நிர்வாகத்தை வழிக்குக் கொண்டுவந்திருக்கிறார் பின்ச்சா. எந்த வங்கி நிர்வாகம் தன்னை நிராகரித்ததோ, இன்று, அதே வங்கியின் மேலாளராகப் பணிபுரிகிறார் திரு. அழகிய பெருமாள். ஒரிசாவில் கைரேகை பதித்து வேட்புமனு தாக்கல் செய்ததால், தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்ட பார்வையற்றவரைப் போட்டியிட வைத்தார் என்கிற பெருமித நிகழ்வையும் நினைவுகூரத் தவறவில்லை திருமதி. முத்துச்செல்வி அவர்கள்.
நான் அதிகாரியல்ல, மூத்தவன்:
graphic சிவக்குமார்
சிவக்குமார்
இறுதியாக பின்ச்சா அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க வந்த கரூர் அரசு கலைக்கல்லூரியின் விரிவுரையாளர் திரு. சிவக்குமார் அவர்கள், அவரைச் சந்தித்த அந்தப் பொன்னான  தருணத்தை நினைவுகூர்ந்தார். நேத்ரோதயா என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் தனக்கு சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டதையும், அதை பின்ச்சா அவர்களின் கையால் பெற்றபோது, அவர் தன்னை அவரோடு இறுக அணைத்துக்கொண்டதைத் தன் வாழ்நாளின் மிக முக்கியத் தருணமாக வியந்தார் சிவக்குமார். அந்த அணைப்பு, ‘நான் உன் உயர் அதிகாரி அல்ல, உன் மூத்தவன்’ என்று தனக்குச் சொல்வதாக உணர்ந்திருக்கிறார் அவர்.
“வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கிற குடும்பத்திலிருந்து ஒரு ஊனமுற்றவர் அரசுப்பணி பெற்று ஊதியம் ஈட்டினாலும், அந்த ஊதியம் அவருடைய தேவைகளுக்கே போதுமானதாகஇருக்கும் என்பதால், தொடர்ந்து அந்தக் குடும்பத்தை வறுமைக்கோட்டிற்குக் கீழிருப்பதாகவே பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் பின்ச்சா. அடையாளம் காணப்பட்ட பணியிடங்கள் ஊனமுற்ற நபர்களுக்கு வழங்கப்படுவதைக் கண்காணிக்க முடிவு செய்து, அனைத்துத் துறைகளுக்கும் ஒரு படிவத்தைத் தயார் செய்து அனுப்பிவைத்தார். ஊனமுற்றோருக்கான சமூக சீர்திருத்தத்தை அவர் அளவுக்கு வேறு யாரும் முன்னெடுத்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் அவர் ஒரு புரட்சியாளர்” என்று முடித்தார் திரு. சிவக்குமார்.
graphic சோஃபியாமாலதி
சோஃபியாமாலதி
நினைவேந்தலுக்கான அறிவிப்பு வெளியாகி நான்கு மணிநேரங்கள் கூட முடியாத நிலையில், ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வின் இறுதியில், திரு. பின்ச்சா அவர்கள் குறித்துப் பார்வையாளர்கள் சிலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். முத்துச்செல்வி அவர்கள் உதாரணமாகச் சொன்ன திரு. அழகியபெருமாளும் நிகழ்வில் பங்கேற்று, தனக்கு வாழ்வளித்தவர் பின்ச்சா என நேரடி சாட்சியம் பகிர்ந்தது அனைவரையும் நெகிழ்த்தியது. அந்த நெகிழ்வின் தடம், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான திருமதி. சோஃபியாமாலதி நவின்ற நன்றி உரையிலும் எதிரொலித்தது.
ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைச் சமூகமான ஊனமுற்றோர் சமூகத்திலிருந்து ஒருவர் புறப்பட்டு, அதிகாரத்தின் உச்சத்தை எட்டிப் பிடித்ததோடு, தான் சார்ந்த சமூகத்தின் மறுமலர்ச்சிக்கான அஸ்திவாரத்தை மிக ஆழமாகப் பதித்துச் சென்றிருக்கிறார். இந்தியாவில், இதற்குமுன் இது புரட்சியாளர் அம்பேத்கருக்கு நிகழ்ந்திருக்கிறது. அதனால்தான் பின்ச்சாவின் மறைவு ஒட்டுமொத்த ஊனமுற்றோர் சமூகத்தை உலுக்கியிருக்கிறது.
திரு. பின்ச்சா அவர்களே! நீங்கள் உங்கள் விடா முயற்சியாலும், உழைப்பாலும் இந்த சமூகத்திற்காய் இதன் மீட்சிக்காய் ஓயாது அழுதிருக்கிறீர்கள். அந்தக் கண்ணீர்த் துளிகளின் பிசுபிசுப்பை எங்கள் இதயத்தில் இருத்தியபடி, உங்கள் தடம் பற்றி நடப்போம், உரிமைகளை வென்றெடுப்போம். நிம்மதியாய் ஓய்வெடுங்கள் தலைவர் அவர்களே!
சவால்முரசு ஆசிரியர்க்குழு
தொடர்புகொள்ள: savaalmurasu@gmail.com