முகப்பு

"ஆணையருக்கு சத்து இருக்குமானால், அந்தச் சட்டம் புத்துயிர் பெற்று முறையாக நடைமுறைக்கு வரும்தானே?"

31 ஜூலை, 2020
graphic ரகுராமன் மற்றும் P.K. பின்ச்சா
இடது ரகுராமன், வலது P.K. பின்ச்சா
கடந்த 2012 ஆம்ஆண்டு,  வள்ளுவன் பார்வை இணையக் குழுமத்தின் வெற்றித் திலகம் நிகழ்ச்சியில் கர்ண வித்யா அமைப்பைச் சேர்ந்த திரு ரகுராமன் அவர்கள், இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பார்வையற்றவராகிய மறைந்த திரு பீ.கே. பிஞ்ச்சா( பிரசன்ன குமார் பிஞ்ச்சா 1952 -  2020) அவர்களுடன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய அலைபேசி உரையாடல் ஒளிபரப்பப்பட்டது. திரு. பின்ச்சா அவர்களின் மறைவை நினைவுகூரும் பொருட்டு, சவால்முரசு வாசகர்களுக்காக அந்த ஒலிக்கோப்பை வழங்கிய திரு. ரகுராமன் அவர்களுக்கு சவால்முரசு ஆசிரியர்க்குழு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஆங்கில வழியில் நடைபெற்ற அந்த உரையாடலின் தமிழாக்கம் இதோ.
ரகுராமன்: வணக்கம் சார். வள்ளுவன் பார்வை குழுமத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.  இந்திய அரசின் மிகச் சிறந்த பதவியில் அமர்ந்திருக்கும் முதல் பார்வையற்றவராகிய தங்களை வாழ்த்தி மகிழ்வதோடு, நமது சமூகம் குறித்த தங்களது பொதுவான கருத்துக்களை தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.
பின்ச்சா: மகிழ்ச்சி. முதலில் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் பார்வையற்றவர் மட்டுமல்ல; இந்தப்  பொறுப்பு வகிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கும் முதல் ஊனமுற்றவரும்கூட. எனக்கு முன்னர் இந்தியாவில் எவரும் இந்தப் பொறுப்பைப் பெறவில்லை.
இரண்டாவது உண்மை என்னவென்றால், இந்தப் பொறுப்பானது, தொடர்ச்சியான பல போட்டி நேர்காணல்களுக்குப் பிறகு, தகுதியின் அடிப்படையில் மட்டுமே எனக்குக் கொடுக்கப்பட்டதாகும். இதுவே எனக்கு முழு நிறைவை தருவதாக அமைகிறது. என்னைப் பொருத்தவரை இது  ஒரு நெகிழ்ச்சியான தருணம்;  அதேசமயம், ஊனமுற்றோரைப் பொருத்தவரை சுதந்திர இந்திய வரலாற்றில் எழுத்துக்களால் வரையறுக்கப்பட வேண்டிய முக்கியமான சாதனையை அறிந்துகொள்ளும் தருணமுமாகும்.  
அடுத்ததாக, மிகவும் பரந்த பொருளுடையதும், பொதுப்படையானதுமான  உங்கள் கேள்விக்கு வருகிறேன். இயலாமை மற்றும் முயலாமை இரண்டு சொற்களையும் ஒரே பொருளுடையதாகக் கொள்வது மிக மிகத் தவறான செயலாகும். ஊனம் என்பது முயற்சி செய்யாமல் இருப்பதைக் குறிப்பதல்ல; அதாவது சமூகத்தின் அங்கமாகிய ஒரு ஊனமுற்றவர், சமூகத்தை தொடர்புகொள்ள அல்லது சமூகச் செயல்பாடுகளில் பங்கெடுக்க முயலும்போது அவர்களுக்கு தடையாக இருக்கக்கூடிய குறைபாட்டை குறிப்பதாகும். சமூகத்தால்  பல்வேறு வகைகளில் வஞ்சிக்கப்படும் ஊனமுற்றோர், தங்களின் இந்த நிலை மாற அல்லது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டுமானால் செய்யவேண்டிய முதல் செயல் என்ன தெரியுமா? தங்களுக்குள் இருக்கும் இடர்பாடுகளை அடையாளம் கண்டுகொண்டு, அவற்றோடு பயணித்து அவற்றையும் கடந்து  வெற்றி பெறும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். பார்வையற்றோர் உட்பட உடல் ஊனமுற்றோர் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். அதாவது தரக்குறைவானவர்களாகவும், மோசமான நடத்தை உடையவர்களாகவும், சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களாகவும், உரிமைகள் மறுக்கப்பட வேண்டியவர்களாகவும், நிராகரிக்கப்படுபவர்களாகவும், கண்டுகொள்ளப்படாதவர்களாகவும், நாகரீகமற்றவர்களாகவும், சமூக மற்றும் அரசியல் நடைமுறைகளிலிருந்து விளக்குப் பெற்றவர்களாகவும்  கருதப்படுகின்றனர். அரசாங்கமும் சமுதாயமும் இணைந்து செயல்படுவதே இதுபோன்ற பாகுபாடுகளைக் களைவதற்கு பொருத்தமான தீர்வாக இருக்க  முடியும் என்று நான் கருதுகிறேன்.
கே: சிறப்பு. ஊனமுற்றோர் சந்திக்கக்கூடிய பொதுவான சவால்கள் குறித்துப் பேசினீர்கள். ஊனமுற்றோரின் முதன்மை ஆணையராகத் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் சவால்களையும் பற்றிக் கூறுங்கள்.
ப: ஊனமுற்றோர் ஆணையராகப் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறேன். ஊனமுற்றோருக்கான முதன்மை ஆணையரின் அலுவலகத்தில் சந்திக்கும் முதல் பிரச்சனையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். பொதுவாக மக்கள்  சிலர் ஊனமுற்றோருக்கான சட்டத்தில் (PWD Act 1995) சத்து இல்லை என்று பரிகசிக்கிறார்கள். அது ஓரளவு உண்மை என்றாலும், ஆணையருக்கு சத்து இருக்குமானால், அந்தச் சட்டம் புத்துயிர் பெற்று முறையாக  நடைமுறைக்கு வரும்தானே? நான் இந்தப் பொறுப்பை வகித்த பிறகுதான் ஒரு ஆணையராக செய்ய வேண்டிய வழிமுறைகள், கட்டளைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து அறிந்திருக்கிறேன். பணி சார்ந்த பல பிரச்சனைகளே அதிகம் என் கவனத்தை எட்டுகின்றன. புள்ளி விவரங்களோடு என்னால் சொல்ல முடியாது என்றாலும், ஏறக்குறைய 90% நிலை இதுதான்.
நான் இங்கு நிறைய சவால்களைச் சந்திக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்வதென்றால், ஊனமுற்றோருக்கான ஆணையரின் அலுவலகம் தொடர்ந்து தேவைப்படும் அளவுக்கு வலிமைப்படுத்தப்பட வேண்டும். இந்திய அளவில் மட்டுமல்ல மாநில அளவிலும் இயங்கும் ஊனமுற்றோருக்கான ஆணையர் அலுவலகங்கள்  சிறப்பான கட்டமைப்பைப் பெற்றிருக்க வேண்டும்.
 கே: ஊணமுற்றோர் சட்டம் 1995 அமல்படுத்தப்பட்ட பிறகு குறிப்பிட்ட முன்னேற்றங்கள் அல்லது மாற்றங்கள் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா?
ப: ஊனமுற்றோர் சட்டம் 1995 அமல்ப்படுத்தப்பட்ட பிறகு, குறிப்பிட்ட சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதுமான இச்சட்டத்தின் பயன்பாடு என்பது குறிப்பிட்டுச் சொல்லும் அளவிலோ, திருப்தி தருவதாகவோ இல்லை. இதற்கு பல காரணங்களைக் குறிப்பிடலாம். அவற்றை இந்த சிறிய நேர்காணலில் முழுமையாகப் பட்டியலிட இயலாது. எனினும்  தற்போது நடைமுறையில் உள்ள (PWD act 1995) சட்டம் கூட குறிப்பிடத்தக்க நேர்மறையான பல சரத்துகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது. இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், நாம் நிறைய சாதிக்க வாய்ப்பிருக்கிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊனமுற்றோருக்கான உரிமைகள் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதும் நீங்கள் அறிந்ததே. ஏற்கனவே ஒரு சட்டம் நடைமுறையில் இருக்கும்போது அதோடு தொடர்புடைய இன்னொரு சிறப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுமானால், அது தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். எனவே இதுபோன்ற  சட்டங்கள்  தடையின்றி மற்றும்  எந்தவித சமரசத்திற்கும் இடமின்றி முழுமையாக  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
கே: தங்கள் தேவைகளுக்காகப் போராடும் ஊனமுற்றோர் அடிப்படையில் செய்யவேண்டியது என்ன? உதாரணமாக, குஜராத், பெங்களூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த ஊனமுற்றோர் தங்கள் உரிமைகளுக்காக அதிகம் போராட வேண்டியிருக்கிறது. அது குறித்து உங்களுடைய கருத்துக்களைப் பகிரலாமே.
ப: என்னால் தெளிவான புள்ளிவிவரங்களை தற்போது தர இயலாது. எனினும், ஊனமுற்றோர் சட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியாக நான் கருதும் பிரிவு 33ஐ சுட்டிக்காட்டி விளக்குகிறேன். இந்தப் பிரிவின்படி, அரசுசார் வேலைவாய்ப்புகளில்  ஊனமுற்றோருக்கென்று மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதிலும் ஒரு விழுக்காடு பார்வையற்றோர் மற்றும் குறைப் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்படுகிறது. இந்தச் சட்டப்படி நாடு முழுவதும் உள்ள முழுப் பார்வையற்றோரும், குறைப் பார்வையற்றோரும் தங்கள் பணி வாய்ப்புகளை முழுமையாகப் பெறுகிறார்களா என்றால் அதுதான் இல்லை. இந்த மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடானது பார்வையற்றோருக்கும், காதுகேளாதோருக்கும், உடல் ஊனமுற்றோருக்கும், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.  பார்வையற்றோர் மட்டுமல்ல; பல பகுதிகளில் ஊனமுற்றோரும் தங்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி பணி வாய்ப்புகளைப் பெற முடிவதில்லை.
கே: ஒரு தனிப்பட்ட  பார்வையற்றவர்  அல்லது ஊனமுற்றவர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,  தங்களது வளர்ச்சியை உறுதிப்படுத்திக்கொள்ளவும் என்ன செய்ய வேண்டும்?
ப: என் மனதில் தோன்றும் முதல் விஷயம் என்னவென்றால், பார்வையற்றோராக இருந்தாலும் சரி, எந்தவகை ஊனமுற்றவராக இருந்தாலும் சரி முதலில் சமூகச் செயல்பாடுகளை முன்னெடுப்பவராக இருக்க வேண்டும். பார்வையற்றோரைப் பொருத்தவரை, பார்வையின்மை என்பது ஒரு உடல்க்குறைபாடு மட்டுமே என்பதையும், பிற உறுப்புகளைப் பயன்படுத்தி ஈடு செய்துகொள்ளலாம் என்பதையும், சில வரையறைக்குள்தான் இயங்க  முடியும்  என்பதையும் முதலில் அவர்கள் உணர வேண்டும்.
ஒரு உதாரணத்தோடு இதை உங்களுக்கு விளக்குகிறேன். வெள்ளை நிற வீடானது வெள்ளை நிறமானதாக மட்டுமே இருக்க முடியும். பச்சை என்றோ நீலம் என்றோ  சொல்லிவிட  முடியாது. அதுபோல ஒவ்வொரு தனிநபருக்கும்   குறிப்பிட்ட வரையறைகள் இருக்கின்றன. அவர்கள் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டுதான் இயங்க முடியும். உங்களுக்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்ல விரும்புகிறேன். அதாவது அதிகமான  கல்வித் தகுதி என்பது ஒருவகை வரையறை; குறைந்த கல்வித் தகுதி என்பது இன்னொரு வரையறை. அதிக ஈடுபாட்டுடனும், நம்பிக்கையுடனும் செயல்படும் ஒரு பார்வையற்றவர் பொதுமக்கள் மத்தியில் நிறைய சாதிக்க முடியும்.
 கே: இந்தியா முழுவதும் உள்ள ஊனமுற்றோரின் மொத்த எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற சிக்கல்களுக்கு தாங்கள் கூற விரும்பும் தீர்வு என்ன?
ப: விரிவான கணக்கெடுப்பு தேவையாக உள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகு ஊனமுற்றோர் குறித்த ஆய்வறிக்கைகளை தயார் செய்யலாம். 2001 கணக்கெடுப்பைப் பொருத்தவரை இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், ஊனத்தின் தன்மை குறித்த  தெளிவான விளக்கம்  இல்லாததாலும், அனைத்துவகையான ஊனங்களும் கணக்கில் கொள்ளப்படாததாலும், முறையான பயிற்சி பெறாத கணக்கெடுப்பாளர்களாலும் இது சாத்தியப்படவில்லை. இதுபோன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதால் 2011 கணக்கெடுப்பிற்கான வடிவமைப்புகளில் தேவையான கேள்விகள் சேர்க்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ளன. இது ஓரளவு வெற்றிகரமான முடிவைத் தரும் என்று நம்புகிறேன். இன்னொரு விஷயம் தெரியுமா ரகுராமன்? 2001 கணக்கெடுப்பின்படி பார்த்தால், நம்மைவிட  வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிக சதவிகிதத்தில் ஊனமுற்றோர் இருப்பதாகவே புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நமது நாட்டில் ஊனமுற்றோரின் எண்ணிக்கை குறைந்த அளவில் இருப்பதாகக் கொண்டாலும், ஊனத்தின் தன்மை குறித்த தெளிவான புரிதல் இல்லாததாலும், கணக்கெடுப்பதற்குத் தேவையான அளவுக்கு பயிற்சி பெற்ற திறமையாளர்கள் இல்லாததாலும் ஊனமுற்றோரின் எண்ணிக்கையை அல்லது சதவிகிதத்தை சரியாக அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை.
கே: புள்ளிவிவரச் சேகரிப்பில் ஊனமுற்றோருக்கான ஆணையராக தாங்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம்?
ப:  இல்லை. அது ஆணையரின் பணி இல்லை. ஊனமுற்றோருக்கான ஆணையர் நேரடியாகக் களத்துக்குச் சென்று கணக்கெடுப்பை மேற்கொள்வது என்பது இயலாத காரியம். அத்தோடு அது அவருடைய பணியும் அன்று.
ஊனமுற்றோருக்கான மத்திய மற்றும் மாநில ஆணையரகங்கள் ஊனமுற்றோருக்கென்று பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட நீதிசார் அமைப்புகளாகும். ஊனமுற்றோருக்கான ஆணையரின் முதன்மை அல்லது முக்கியப் பணி என்னவெனில், சட்டம் சார்ந்த ஒழுங்கைப் பராமரித்தல், அறிக்கைகள் கொள்கைகளை வகுத்தல், அரசாணைகள் மற்றும் சிறப்பு ஆலோசனைகளை வழங்குதல் போன்றவை ஆகும்.
 கே: கணக்கெடுப்பிற்கான பரிந்துரைகளை அல்லது அழுத்தத்தையாவது அரசுக்குத் தரலாம் அல்லவா?
ப:  தாராளமாக. பரிந்துரைகளை யார் வேண்டுமானாலும்  செய்யலாம். மேலும்   ஊனமுற்றோருக்கான உரிமைகளைப் பாதுகாப்பது, சலுகைகளைப் பெற்றுத் தருவது போன்றவையும் ஊனமுற்றோருக்கான ஆணையத்தின் முக்கியப் பணிகளாகும்.
கே: நிர்வாகத்தடைகள் பற்றிக் கேட்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் அரசாணைகள் இருந்தபோதும், தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அல்லது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள உயர் அதிகாரிகளை அணுகுவதில் சுணக்கம் ஏற்படுகிறது. இதுபோன்ற சிக்கல்களுக்கு தாங்கள் முன்வைக்க விரும்பும் தீர்வு என்ன?
 ப: ரகுராமன்! இது பரந்துபட்ட அளவிலான நிர்வாகத்துறை சார்ந்த கேள்வி. இதற்கு பல காரணங்களைக் குறிப்பிடலாம். ஊனமுற்றோருக்கான முதன்மை ஆணையரகமோ அல்லது மாநில அளவிலான ஊனமுற்றோர் அலுவலகமோ மட்டும் இதற்குப் பொறுப்பேற்க முடியாது. நமது அரசியல் அமைப்பின் அடித்தளத்திலிருந்து முற்றிலும் உள்ளார்ந்து ஏற்பட வேண்டிய மாற்றம் இது. இதுபோன்ற பிரச்சனைகள் குறைவதற்கு  நாம் என்ன செய்யலாம் என்றால், இன்றைக்கு இருக்கிற அரசு அதிகாரிகள், ஊனமுற்றோரைக் கையாளுகின்ற அரசு அலுவலர்கள், மேலாளர்கள், இதழியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊனமுற்றோர் குறித்த தெளிவான புரிதலை உட்புகுத்த வேண்டும். எந்த அளவிற்கு அவர்களது உள்ளார்ந்த புரிதல்கள் மற்றும் திறமைகள் அதிகமாகிறதோ அந்த அளவுக்கு வருங்கால ஊனமுற்றோர் பயன்பெற முடியும்.
* * ** *
பார்வையற்றோருக்கான சிறந்த கல்விமுறை எது?
ஊனமுற்றோருக்கான மறுவாழ்வுத் தளத்தில் இயங்கும் நிறுவனங்களை எவ்வாறு வரையறுப்பது?
பார்வையற்றோர் சமூகத்திற்கு திரு. பின்ச்சா அவர்கள் வழங்கிய  சுருக்கமான அறிவுரை யாது?
அடுத்த இதழில்.
தமிழில் X. செலின்மேரி
தொடர்புகொள்ள: celinmaryx@gmail.com

No comments:

Post a Comment