முகப்பு

பூரண வெற்றி

31 ஆகஸ்ட், 2020
graphic மடிக்கணினியின் முன் அமர்ந்திருக்கும் பூரணசுந்தரி
இந்த மாதத்தில் (ஆகஸ்ட் 2020) தமிழகம் அதிகம் உச்சரித்த பெயர் பூரணசுந்தரி. மதுரையின் மணிநகரம் பகுதியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான இவரின் குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒன்றுதான். ஆனாலும், தன் விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் தொடர்ந்து நான்குமுறை முயற்சித்து, இந்த ஆண்டிற்கான குடிமைப்பணிகள் தேர்வுகளில் 286 ஆவது இடம் பிடித்து சாதித்திருக்கிறார். முடிவுகள் வெளியிடப்பட்ட 11ஆம் தேதிக்குப் பிறகு கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமித்தது இவரின் பேட்டி. முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் என தொடர்ச்சியாய் வாழ்த்து மழையில் நனைந்தபடி, ஊடகப் பேட்டிகளில் பிஸியாயிருந்தவரைத் துரத்திப் பிடித்துப் பேட்டி கண்டது சவால்முரசு. திரு. சுரேஷ், திருமதி. சோஃபியா மற்றும் செல்வி சித்ரா மூவரும் இணைந்து நிகழ்த்திய இந்த நேர்காணல்தான், யூட்டூபில் சவால்முரசால் வெளியிடப்பட்டவைகளில் 1200க்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்ட ஒரே காணொலி என்பது கூடுதல் சிறப்பு.
graphic பூரணசுந்தரி, சித்ரா, சோபியா, சுரேஷ்
மேலிருந்து கீழாக பூரணசுந்தரி, சித்ரா, சோபியா, சுரேஷ்
மதுரையின் பிள்ளைமார் சங்க மேல்நிலைப்பள்ளியில் உள்ளடங்கிய கல்வியின் வாயிலாகத் தன் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார் பூரணசுந்தரி. தனக்குக் கற்பித்த பள்ளி ஆசிரியர்களாகட்டும், சிறப்பாசிரியர்கள் ஆகட்டும், தன்னை அத்தனை அக்கறையோடும், அன்போடும் கவனித்துக் கொண்டதை நினைவுகூர்கிறார். இவருக்குப் பாடம் புரிந்துவிட்டதை உறுதி செய்த பின்னரே இவருடைய வகுப்பாசிரியர்கள் அடுத்த பாடத்திற்கு நகர்வார்களாம். பாடத்திற்கு அப்பாற்பட்ட பேச்சு, நாடகம் என தன் திறமைகளை வளர்த்து ஊக்குவித்தவர்கள் தனது சிறப்பாசிரியர்கள்தான் எனப் பெருமிதம் பொங்கச் சொல்கிறார். பாத்திமா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றுள்ளார். அந்தக் கல்லூரி நாட்கள், அங்கிருந்த நூலகவசதி  ஆகியவைதான் தனக்குக் குடிமைப்பணிகள் தேர்வில் ஆர்வம் கொள்ள உந்துசக்தியாக அமைந்தது எனக் குறிப்பிடுகிறார்.
சென்னையின் மனிதநேய அறக்கட்டளை, அடையாறிலுள்ள ஆல் இந்தியா ஐஏஎஸ் கோச்சிங் செண்டர் என இவர் பயிற்சி எடுத்துக்கொண்ட இடங்களில், வாசித்துக் காண்பிப்பது, புத்தகங்களை ஒலிப்பதிவு செய்து தருவது என உடன்படித்த நண்பர்களும் உதவியிருக்கிறார்கள். தனக்கு தவறாமல் தினசரிகள் வாசித்துக் காண்பிக்கும் அப்பா தொடங்கி, அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம், திரு. உதயச்சந்திரன் ஐஏஎஸ், மாதிரி நேர்முகத் தேர்வில் தன்னை உற்சாகப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி திரு. சைலேந்திரபாபு எனப் பலரும் தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பதாகச் சொல்கிறார் பூரணசுந்தரி. குடிமைப்பணிகள் தேர்வை எதிர்கொண்டபடியே, வங்கித் தேர்வையும் எதிர்கொண்டு வெற்றிபெற்று வங்கி அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.
முதன்மைத் தேர்வுகளில் தமிழ் இலக்கியத்தைத் தன் விருப்பப் பாடமாக எடுத்துப் படித்த பூரணசுந்தரி, அதற்காக நிறைய புத்தகங்களை வாசித்திருக்கிறார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தனக்கு தமிழ் இலக்கியம் தொடர்பான நிறைய புத்தகங்கள் ஒலி மற்றும் ஒருங்குறி வடிவில் கிடைத்ததாகச் சொல்கிறார். கணினியைப் பயன்படுத்திக் குறிப்பெடுப்பது, உடன் பயிலும் பயிற்சியாளர்களோடு இணைந்து தமிழில் மொழிபெயர்த்துப் படிப்பது எனத் தனக்குச் சாத்தியமான எல்லா வழிகளிலும் தொடர்ச்சியாக முயன்றிருக்கிறார்.
 பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி தொடர்பான துறைகளில் பணியாற்ற விரும்புகிறார் பூரணசுந்தரி. “பெண்களின் வாழ்க்கை வெறும் குடும்பம் சார்ந்தது மட்டும் இல்லை. அவர்களின் அறிவு இந்த நாட்டுக்குப் பயன்பட வேண்டும். நம் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென அரசிடம் ஏராளமான திட்டங்கள் (schemes) இருக்கின்றன, தேவை விழிப்புணர்வுதான்” என அடித்துச் சொல்லும் அவரிடம், சுரேஷ் “மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் ஆணையராகப் பணி கிடைத்தால்?” என்ற கேள்வியை முன்வைக்க, அதே உற்சாகத்தோடு பதில் சொல்கிறார்.
“மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி என்பது வெறும் பாடத்தோடு நின்றுவிடக் கூடாது. அவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, அதனை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான பயிற்சி மையங்கள் மாவட்டந்தோறும் தொடங்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தொடர்பான நிறைய ஆய்வுகளை மேற்கொள்ள துறைசார்ந்து அதற்கென ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்” என்கிறார்.
வினாடிவினா போன்ற போட்டிகளைக் குழந்தைகளிடையே  நடத்துவது, பாடல்கள் கேட்பது இவை இவரின் பொழுதுபோக்குகள். இளையராஜா மற்றும் ரஹுமான் இசை தனக்குப் பிடித்த இசைஎன்றும், பாடகிகள் சித்ரா, சின்மையி குரல்கள் தன்னுடைய ஃபேவரைட் என்கிறார்.
தன்மீது தான் வைத்திருக்கிற நம்பிக்கையையே தன்னுடைய ஒரே பலமாகச் சொல்லும் பூரணசுந்தரி, ஒரு பார்வை மாற்றுத்திறனாளியாக, ஒரு பெண்ணாக நாம் நிறைய விமர்சனங்களையும் புறக்கணிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதை நாம்தான் எந்த ஒரு தயக்கமுமின்றி எதிர்கொண்டே ஆகவேண்டும். மாறாக அவைகள் தரும் வலிகளில் தேங்கிவிடக் கூடாது என்கிறார். உங்கள்மீதும், உங்களின் உழைப்பின் மீது மட்டும் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். தோல்வியில் துவண்டுவிடாமல், காரணங்களை ஆராய்ந்து, ஹார்ட் வொர்க் மற்றும் ஸ்மார்ட் வொர்க் என தேவையானபோது தேவையான யுத்திகளைக் கையாண்டு முயற்சித்தால் வெற்றி நிச்சயம் எனப் புன்னகைக்கிறார் பூரணசுந்தரி.
ஆசிரியர்க்குழு
 * * *
சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடர:
முகநூல்:https://m.facebook.com/savaalmurasu/
வலையொளி:https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public
 கீச்சகம்:https://twitter.com/savaalmurasu
இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/savaalmurasu24_7/
 வாட்ஸ் ஆப்: 9787673244
டெலகிராம்: 9994636936

No comments:

Post a Comment