முகப்பு

கூடுகையில் தூவப்பட்டது கூட்டமைப்பிற்கான விதை, ஐம்பது பங்கேற்பாளர்களை ஒருங்கிணைத்து அசத்தியது பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை

‘பேரிடர் காலங்களில் ஊனமுற்றோர் உரிமைகளும், உண்மை நிலையும்!’ என்ற தலைப்பின்கீழ், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்கள் பேரவையால் இணையவழிக் கருத்தரங்கு இன்று (19, ஏப்ரல்) ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 11 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்வில், ஐம்பது நபர்கள் ஜூம் வழியாக இணைந்து, இறுதிவரை உற்சாகம் குன்றாது கலந்துரையாடல் நிகழ்த்தினர்.
graphic zoom
இந்தக் கருத்தரங்கில், தமிழகத்தில் இருந்து இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்ட ஆய்வு மேர்க்கொண்டுவரும் பார்வை மாற்றுத்திறனாளி ஸ்ருதி வெங்கடாசலம் பங்கேற்று, பன்னாட்டுச் சட்ட விதிகள் மற்றும் இந்திய நாட்டின் சட்டங்களின் அடிப்படையில் ஊனமுற்றோர் பேரிடர் காலங்களில் பெற வேண்டிய உரிமைகள், வழங்கப்பட வேண்டிய சிறப்பு உதவிகள் குறித்துப் பேசினார்.
இத்தகைய நெருக்கடி நிலையை, பேரிடருக்கு முந்தைய காலம், பேரிடர் காலம், பேரிடருக்குப் பின்னான காலம் என மூன்றாகப் பிரித்துக்கொண்டு, அரசும் மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கும் பல்வேறு அமைப்புகளும் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து சட்டம் சார்ந்தும், பன்னாட்டு விதிகள் சார்ந்தும் விளக்கினார்.
தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தால் வகுக்கப்பட்ட பேரிடர் காலங்களில் கடைபிடிக்கப்பட வேண்டிய மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கும், களத்தில் நிலவும் சூழலுக்கும் இடையே இருக்கிற மிகப்பெரிய இடைவெளி குறித்துப் பேசிய ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் இணைச்செயலரான ப. சரவணமணிகண்டன், சங்கங்கள் கூட்டமைப்பாய் ஒன்றிணைவது காலத்தின் தேவை என வலியுறுத்தினார்.
கேள்வி நேரத்தின்போது, கருத்தரங்கில் பங்கேற்ற பெரும்பாலோர் கூட்டமைப்பு முயற்சி முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதைத் தங்களின் கருத்தாகப் பதிவு செய்தனர். அத்தோடு, மாற்றுத்திறனாளிகள் குறித்த சரியான தரவுகள் அரசிடம் இல்லை என்ற தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.
நிகழ்வு குறித்த அறிமுக உரையோடு, அனைவரையும் வரவேற்றுப் பேசினார் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையைச் சார்ந்த பேராசிரியர் பூபதி. பேராசிரியர் முருகானந்தம் நிகழ்வை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த, தொழில்நுட்ப உதவிகளைச் செய்தார் பேராசிரியர் மகேந்திரன்
நிகழ்வின் இறுதியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசிய பேரவையின் திரு. கார்த்திக் அவர்கள், தங்களின் கருத்தரங்கம் தொடர்பான செய்திகளை அனைவருக்கும் கொண்டுசேர்த்த விரல்மொழியர் மின்னிதழ் வாட்ஸ் ஆப் குழுவுக்கும், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் செய்தி ஊடகமான மாற்றுத்திறன்.com இணையதளத்திற்கும் தனது நன்றியைப் பகன்றார்.
நிகழ்வில், பல ஆண்டுகளாகப் பார்வையற்றோர் நலனில் அக்கறைகொண்டு செயல்பட்டுவரும் தன்னார்வலர் கோமதி குப்புசாமி அமெரிக்காவிலிருந்து பங்கேற்றார். மேலும், ஆசிரியர் சங்கத்தின் செயலர் திரு. ரமேஷ், அனைத்திந்திய பார்வையற்றோர் சம்மேளனத்தின் தென்னிந்தியப் பொதுச்செயலர் திருமதி. முத்துச்செல்வி, விரல்மொழியர் மின்னிதழ் ஆசிரியர் திரு. பாலகணேசன், கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் போன்ற அமைப்புகளின் முன்னணி நிர்வாகிகள், பல பார்வையற்ற கல்வியாளர்கள்  பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
சில தொழில்நுட்பச் சிக்கல்கள் குறுக்கீட்டையும் கடந்து, தொடக்கம் முதல் இறுதிவரை கருத்தரங்கு தொய்வின்றி நடைபெற்றது. இதுபோன்ற கருத்தரங்குகள் மாதம் ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும் என்கிற பேரவையின் அறிவிப்பும் பார்வையற்றோரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
  வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

1 comment:

  1. I was happy to participate in it.
    However, it would have been better if presenters had been a bit organized.
    The questioners too could have avoided repetition

    ReplyDelete