முகப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணம் மாதம் ரூ.5000/- ஜுன்-10 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை மாநிலம் முழுவதும் போராட்டம்! மாற்றுத்திறனாளிகள் கூட்டு இயக்கம் அறிக்கை

graphic மாற்றுத்திறனாளிகள் கூட்டு இயக்கம் அறிக்கை
 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்சம் ரூ. 5000 வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டு இயக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
"கொரோனா பேரிடர் ஊரடங்கு 5 - வது முறையாக ஜுன் -30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் எவ்வளவு காலம் நீட்டிக்கப்படும் என்பதும் தெரியவில்லை. கடந்த இரண்டரை மாதங்களாக ஏற்கனவே கிடைத்து வந்த குறைந்தபட்ச வருவாய்களைக்கூட இழந்து , மாற்றுத்திறனாளிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். மருந்து , மாத்திரை மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள்கூட வாங்க முடியாமல் மாற்றுத்திறனாளிகளும் , அவர்களின் குடும்பங்களும் துயரத்தில் உள்ளனர். பல்வேறு ஊடகங்களும் இந்த தவிப்புகளை படம்பிடித்துக் காட்டியுள்ளன.

இந்த துயரங்களை துடைக்கவும் , பொருளாதார தேவைகளை ஈடு செய்யவும் , குறைந்தபட்சம் இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதம் தலா ரூ .5000 / - வழங்க வேண்டுமெனக் கோரிக்கை எமது கூட்டு இயக்கம் சார்பில் வைக்கப்பட்டது. மற்றவர்களைவிட மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு கூடுதல் செலவு ஆவதை அரசாங்கங்கள் ஈடு செய்ய வேண்டுமென 2007 ஆம் ஆண்டு ஐநா உடன்படிக்கை சுட்டிக்காட்டுவதையும் , பேரிடர் காலங்களில் அரசுகள் சிறப்பு கவனம் செலுத்தி மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாக்கவும் ஐ.நா. உடன்படிக்கை மற்றும் நமது நாட்டு உரிமைகள் சட்ட சரத்துக்கள் உள்ளதை எல்லாம் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால் , மாற்றுத்திறனாளிகளின் இந்த கோரிக்கைகளை செவிமடுக்காமல் , உதாசீனப்படுத்தும் வகையிலேயே மத்திய , மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றும் விதங்களிலேயே உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் பரப்பி வருகின்றன. சென்னை உயர்நீதிமன்றமே இதனை சுட்டிக்காட்டியுள்ளது. அரசின் இந்தப் போக்குகள் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும் , கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே , கொரோனா பேரிடர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை ஈடு செய்ய குறைந்தபட்சம் மாதம் ரூ .5000 / - இந்த ஊரடங்கு காலத்தில் வழங்க வலியுறுத்தி , ஜுன் -10 முதல் சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையர் அலுவலகம் முன்பாகவும் , மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் முன்பாகவும் கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டங்கள் நடத்தப்படும் என மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் முடிவு செய்துள்ளதை இதன் மூலம் அறிவிக்கின்றோம்." என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவால்முரசு: நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment