முகப்பு

அறுபது நாட்களுக்குப்பின் ஒன்றிணைந்த பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம், ஆணையரின் நடவடிக்கைக்கு குவிகிறது பாராட்டு


graphic ஒரத்தி கிராமத்திலிருந்து மறுவாழ்வு வாகனத்தில் பிரியா புறப்பட்டபோது
 மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் உடனடி நடவடிக்கையால், அறுபது நாட்களுக்கும் மேலாகப் பிரிந்திருந்த பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றிணைந்தது.
திருவள்ளூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதிகள் மாரிமுத்து பிரியா. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். மாரிமுத்து இரயிலில் வணிகம் செய்து வருகிறார்.
இந்நிலையில், தமிழக அரசால் முதல்கட்ட ஊரடங்கு கடந்த மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. உறவினரின் குடும்ப நிகழ்வில் பங்கேற்க தனது இரண்டு வயது மகனுடன் செங்கற்பட்டு வந்த பிரியாவால் திருவள்ளூர் திரும்ப இயலவில்லை. தனது உறவுக்கார பாட்டியோடு சேர்ந்து ஒரத்தி என்ற கிராமத்தில் இன்னொருவர் வீட்டில் தங்கவைக்கப்பட்டார் பிரியா.
graphic அச்சிருப்பாக்கத்தை கடக்கிறது வாகனம்
 ஓரிரு வாரங்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று காத்திருந்த பிரியாவுக்கு நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மேலும் மோசமடைவது புரிந்தது. அதிகம் அறிந்திராத இன்னொருவரின் வீட்டில், ஒரு பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு எழும் இயல்பான தயக்கங்கள் மற்றும் கூச்சங்களால் உந்தப்பட்ட அகதி மனநிலைஒருபுறம் என்றால், அவ்வப்போது அப்பாவைக் கேட்டழும் இரண்டு வயதுக் குழந்தைக்கு் சமாதானம் சொல்லியும் சொல்லாமலும் ஏற்படுகிற கையறுநிலை இன்னோரு புறம். என்ன செய்வது? தனது கணவரைச் சேர தனக்குத் தெரிந்த வழிகளில் முயற்சிப்பது என்ற முடிவுக்கு வந்தார் பிரியா.
graphic மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் திரு. ஜானி டாம் வர்கிஸ்
  சில முயற்சிகளுக்குப் பின், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் சித்ரா அவர்களைத் தொடர்புகொண்டு தனது நிலைமையை விளக்கினார் பிரியா. திருவள்ளூர் மற்றும் செங்கற்பட்டு மாவட்டத்தில் அமல்ப்படுத்தப்பட்ட தீவிரமான ஊரடங்கின் காரணமாக, பிரியாவின் கோரிக்கை நிறைவேறுவது தாமதமாகிக்கொண்டே போனது. இந்நிலையில், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் திரு. சுரேஷ் மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திருமதி. சோஃபியா மாலதியும் இணைந்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் திரு. ஜானி டாம் வர்கிஸ் அவர்களுக்கு பிரியாவின் நிலைமை குறித்துக் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினர். அந்தச் செய்தியை் பார்த்த மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்டார். செங்கற்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை முடுக்கிவிட்டு, நடமாடும் மறுவாழ்வு வாகனத்திலேயே  (mobile van) ஒரே நாளில் பிரியாவும் அவரது இரண்டு வயது மகனும் திருவள்ளூரிலிருந்த மாரிமுத்துவிடம் சேர்க்கப்பட்டனர்.
graphic ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் சுரேஷ்
 இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் திரு. சுரேஷ் அவர்கள், “எப்படியாவது அந்தப் பெண்ணையும் குழந்தையையும் அவரின் கணவரிடம் சேர்த்துவிட வேண்டும் என்று நினைத்தோம். எங்களின் சிறிய குறுஞ்செய்தியில் பொதிந்திருந்த உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொண்ட எங்களின் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. “அண்ணா வந்துட்டேன்” என அந்தப் பெண் அடைந்த பூரிப்பை வார்த்தைகளில் விளக்க இயலாது. “செப்டம்பர் ஆயிடுமோனு பயந்தேன் சார்” என அந்தப் பெண்ணின் கணவர் நன்றி நவின்றபோது மனதுக்கு அவ்வளவு நிறைவாய் இருந்தது.
graphic வாகனம் திருவள்ளூரை அடைந்தபோது
 அந்தக் குடும்பத்திற்கு எமது சங்கத்தின் சார்பில் ரூ. 2000 உதவி வழங்கியிருக்கிறோம். எங்களின் இந்த முயற்சி நிறைவேற பின்புலமாய்ய் இருந்து செயலாற்றிய பட்டதாரிகள் சங்கப் பொதுச்செயலர் மணிக்கண்ணன், ஆணையரக அலுவலர் மலர்க்கொடி அவர்கள், செங்கற்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் என அனைவருக்கும் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என முடித்தார்.
graphic பிரியா தன் கணவரோடு சேர்க்கப்பட்டார்
 அம்மாவின் பிடியிலிருந்து விரைந்து தாவி, அப்பாவின் பின்னங்கழுத்தைக் கட்டிக்கொண்ட குழந்தைக்கும் தகப்பனுக்குமிடையேயான முத்தச்  சம்பாஷனை அரூபமாய்க் கேட்கிறது. அதில் வெளிப்படுவதெல்லாம், அறுபது நாளாய்ச் சேகரித்துவைத்திருந்த ஏக்கமும் தவிப்பும் மட்டுமல்ல, இத்தனை நாட்கள் தன்னையும் தன் தாயையும் பாதுகாத்த அந்த அதிகம் அறிந்திராத உறவுக்கும், தன்னைத் தகப்பனிடம் கொண்டுசேர்த்த அனைவருக்க்உமான நன்றி நவிலலும்தான்.
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment