முகப்பு

1000 நிவாரணம், ஆறுதலா? அலைக்கழிப்பா?

31 ஆகஸ்ட், 2020


graphic முகக்கவசம் அணிந்த முதல்வர் எடப்பாடி
        கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மாற்றுத்திறனாளிகளிடம் கொஞ்சம் ஆசுவாசத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தத்  தொகையானது தமிழகம் முழுவதும் எவ்வாறு வினியோகிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினரிடமும் மேலோங்கியிருந்தது. முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும், நிவாரணத்தை வழங்கிட உரிய வழிகாட்டு நெறிமுறைகளும் அடுத்தடுத்த நாட்களில்  வெளியாயின.
இரண்டு 500 என்கிற வியூகம்:
graphic அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் திரு. ஜானி டாம் வர்கிஸ்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் திரு. ஜானி டாம் வர்கிஸ்
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரால் 23 விதிகளை உள்ளடக்கி வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நிவாரணத்தொகையை நிர்வகித்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் பொறுப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்படும் அந்தந்த மாவட்ட அதிகாரியுடன் இணைந்து, தொடர்புடைய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் முறைகேடுகள் நிகழாமல் தடுக்கும் ஓர் வழிமுறையாக, ரூ. 1000 இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்கிற விதி இடம்பெற்றது.
உள்ளாட்சிப் பணியாளர்களிடம் ஒப்படையுங்கள்:
நிவாரணத்தை வினியோகிக்கும் பொறுப்பு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதியது. அந்தக் கடிதத்தில், நிவாரணத்தை வினியோகிக்கும் பொறுப்பினை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைத்தால், அது சீரான வினியோகத்திற்கு வழிவகுக்காது, ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதோடு, அது பல குழப்பங்களை உண்டாக்கும் எனவும், எனவே நிவாரணத்தொகையை வினியோகிக்கும் பொறுப்பினை உள்ளாட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டது.
கணக்கில் வராத 33 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள்:
நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசாணையில், அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளின் மாவட்ட வாரியான எண்ணிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 65709 மாற்றுத்திறனாளிகளும், குறைந்தபட்சமாக  நீலகிரி மாவட்டத்தில் 13240 மாற்றுத்திறனாளிகளும் அடையாள அட்டை வைத்திருப்பதாகத் தெரியவந்தது. திருவண்ணாமலையைத் தொடர்ந்து திருச்சி, சென்னை, சேலம், கடலூர், தஞ்சை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகள் வசிப்பதாக அந்தப் பட்டியல் தெரிவிக்கிறது. இந்நிலையில், நிவாரணம் வழங்குவது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த 23.ஜூன்.2020 அன்று கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் சார்பில் பங்கேற்ற அலுவலர், அரசாணையில் சென்னை மாவட்டத்தில் அடையாள அட்டை வைத்திருக்கும் மொத்த மாற்றுத்திறனாளிகள் 59000 எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், தங்களிடம் வெறும் 26000 நபர்களின் விவரம் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார். கூட்டத்தின் முடிவில், சென்னையில் மட்டும் நகராட்சி ஊழிய,்கள் மற்றும் கரோனா தடுப்புப் பணியாளர்களைக்கொண்டு ஆயிரம் நிவாரணத்தொகை வினியோகிப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஊதா அட்டைக்கு மட்டுமே உதவித்தொகை:
graphic கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் நிவாரணமாகப் பெறும் பார்வை மாற்றுத்திறனாளி
கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் பெறும் பார்வை மாற்றுத்திறனாளி
திட்டம் தொடங்கியது முதல் இன்றுவரை, நிவாரணம் பெறுவதில் பல்வேறு வகையான தகவல்கள் பரவுவதால்,  அடிக்கடி பயனாளிகளிடம் குழப்பங்கள் ஏற்படுகின்றன. 2005க்கு முன்பு வழங்கப்பட்ட வெண்ணிறத்திலான அடையாள அட்டைக்கு நிவாரணம் வழங்க முதலில் பல கிராம நிர்வாக அலுவலர்கள் தயங்கினர். இப்போது அந்த அட்டைகளுக்கு நிவாரணம் வழங்கப்படுவதோடு, அந்தப் பயனாளிகளுக்கு ஊதாநிற அட்டையும் வழங்கப்படுகிறது. தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே நிவாரணத்தொகை வரவு வைக்கப்பட்டது. உள்ளூரில் வசிப்பவர்கள் தவிர்த்து, வெளியூர் முகவரிகளுக்கு நிவாரணம் வழங்க முதலில் பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள் மறுத்தே வந்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான மாநிலஆணையரால் அறிவிக்கப்பட்ட இலவச எண்ணான 18004250111 என்ற  இலவச அழைப்பு மையத்தில் இது தொடர்பான புகார்கள் குவியத் தொடங்கியதில், மேற்சொன்ன குறையும் விரைந்து களையப்பட்டு வருகிறது.
நெடுந்தொலைவு சைக்கில் பயணம், நிமிடத்தில் நிவாரணம்:
graphic மாரியப்பன்
மாரியப்பன்
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவர், சுமார் ஆறுமணி நேரம் சைக்கிலிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பயணித்து, 1000 ரூபாய் நிவாரணத்திற்கு விண்ணப்பித்தார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்கிற 70 வயதான மாற்றுத்திறனாளி முதியவர், கிராம நிர்வாக அலுவலர் தனக்கு நிவாரணம் வழங்க மறுப்பதோடு, தன்னைத் தரக்குறைவாகவும் திட்டினார் என ஊடகத்தில் பேட்டி கொடுக்க, அந்தத் தகவலை கரூர் மாவட்ட ஆட்சியரின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றார் கரூர் மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றும் திரு. ஜெயபாலன். கரூர் மாவட்ட ஆட்சியரின் விரைவான நடவடிக்கையால், 1000 ரூபாய் நிவாரணமும், தொலைந்துபோன தனது அடையாள அட்டைக்குப் பதிலாகப் புது அடையாள அட்டையும் பெற்றார் மாரியப்பன்.
நமக்கு நாமே 2.0:
இந்த ரூ. 1000 நிவாரணம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்ட செய்தியைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் இணைச்செயலரான திரு. சரவணமணிகண்டன், பார்வையற்ற அரசு ஊழியர்கள் அந்த நிவாரணத்தைப் பெற்று, அதை வருமானமிழந்து தவிக்கும் பார்வையற்றவர்களுக்கு வழங்கலாம் என்ற யோசனையையும்சேர்த்தே  பதிவிட்டார். பிறகு இதே யோசனையை பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. பூபதி தங்கள் வாட்ஸ் ஆப் குழுவில் முன்வைக்க, அதனை ஒரு முழக்கமாக முன்னெடுத்துப் பரவலாக்கியது உதவும் சொந்தங்கள் அமைப்பு.
இன்னும் என்ன செய்யலாம்?
ஊரடங்கு காலம் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், பெரும்பாலான பயனாளிகள் தங்கள் சொந்த ஊரில்தான் நிவாரணத்தைப் பெற வேண்டும் என சில கிராம நிர்வாக அலுவலர்கள் சொல்வதாக தினந்தோறும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதனைக் களைய, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பது அவசியமான ஒன்று. பயனாளிகளை அலைக்கழிக்காமல், விரைந்து நிவாரணம் வழங்க, பயனாளிகளின் சொந்த மாவட்டத்தின் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும், தற்போது பயனாளி வசிக்கிற மாவட்டத்தின் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும் உடனடியாகத் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திப் பிரச்சனையைக் களைய வேண்டும். நிவாரண வினியோகம் தொடங்கிய நாள்முதல் இன்றுவரை பரவலாக முன்வைக்கப்படுகிற ஒரு குற்றச்சாட்டு, மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று நிவாரணம் வழங்கப்படவில்லை என்பதுதான். இது திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கும் ஒன்று என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். சிறப்புப் பள்ளி மாணவர்களைப் பொருத்தவரை, அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் அனைவரும் நிவாரணம் பெற்றுவிட்டார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். இன்னும் பெறாத மாணவர்கள் இருந்தால், உடனடியாகத் தொடர்புடைய அலுவலர்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் என்ற வகையில் தொடர்புகொண்டு பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்.
நிவாரணம் என்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஓர் இடைக்கால ஆறுதல் மட்டுமே. ஆறுதலே அலைக்கழிப்பாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்வது அரசின் கையில்தான் இருக்கிறது.
சவால்முரசு ஆசிரியர்க்குழு
தொடர்புகொள்ள: savaalmurasu@gmail.com

No comments:

Post a Comment