முகப்பு

"வீடு கட்டினால் வெட்டுவேன்!" மிரட்டும் நபர், மெத்தனத்தில் அரசு நிர்வாகம், சொல்லுணாத் துயரில் பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம்,: என்ன நடக்கிறது திருவண்ணாமலையில்?

8 செப்டம்பர், 2020
graphic கோபத்துடன் அறிவாள் பிடித்திருக்கும் ஒருவரின் புகைப்படம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள வேடந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனைவர் . சிவக்குமார் (38).(அலைபேசி :8220745473)  இவர் PhD முனைவர் பட்டம் பெற்று தற்போது கரூர் அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக தற்காலிகப் பணியில் உள்ளார். இவருக்கு ஒரு அண்ணனும் ஒரு திருமணமான தங்கையும் உள்ளனர். முனைவர் சிவக்குமார், இவரது அண்ணன், தங்கை என இவரது குடும்பத்தில் மொத்தம் உள்ள மூன்று பேருமே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இவர்கள் மூவருமே பார்வையில்லாமல் பிறந்த காரணத்தால் இவரது தந்தை மணி தனது 3 குழந்தைகள், மனைவி என ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கைவிட்டுவிட்டு 25 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டார். இவரது தாயார் அனுசூயா இவர்களை கடுமையான வறுமைக்கு இடையிலும் பெரும்பாடு பட்டு வளர்த்துள்ளார். சிவக்குமார் PhD வரைபடித்து பட்டம் பெற்றுள்ளார், அவரது தங்கை ஜெயந்தி M.a, B.ED.. வரை படித்துள்ளார். சிவகுமாருக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ஏழ்மையிலும் வறுமையிலும் உழன்று, பல்வேறு துன்பங்களுக்குப் பிறகே இவர் படித்து இவரது குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.
graphic சிவக்குமார்
சிவக்குமார்
ஆனால் இவரது பெரியப்பா மகன்(உடன் பங்காளி) முறை அண்ணனான வேடந்தவாடி கிராமம், பச்சையப்பன் அவர்களின் மகன் . சேட்டு (அலைபேசி: 9787700428) இவரையும் இவரது குடும்பத்தையும் ஊரில் இருந்து விரட்டிவிட்டு இவரது குடும்பத்திற்குச் சேர வேண்டிய சொத்துக்களை தானே முழுவதுமாக எடுத்துக்கொள்ளும் நோக்கத்துடன் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வருகிறார். அவர் ஏற்கனவே இவர்களை பலமுறை மிரட்டியுள்ளார். இவரது பார்வையற்ற தங்கை ஜெயந்தியைத் தாக்கியதற்காக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதாகியிருந்தார், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படி சிவக்குமாரின் தந்தையின் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலத்தில் வீடுகட்டிக்கொள்ள பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் சிவக்குமாரின் தாயார் அனுசூயா மணி அவர்களின் பெயரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடல்நலம் குன்றிய தாய் மற்றும் மூன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான மொத்தக் குடும்பத்தையும் சேட்டு அவர்களது பூர்வீக வீட்டிலிருந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே விரட்டிவிட்டார். கணவனால் கைவிடப்பட்ட நிலையில் 3 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளையும் வைத்துக்கொண்டு இவர்களின் தாய் அனுசுயா ஓலைக் கூரை போட்ட மண்சுவர் வீட்டில் வசித்து வந்தார். வீடு கடந்த 2011-ஆம் ஆண்டு மழை வெள்ளத்தில் முற்றிலும் இடிந்துபோனது, அதில் இவரது தாய், அண்ணன் மற்றும் தங்கைக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவக்குமார் அளித்த விண்ணப்பத்தின் பெயரிலேயே கடந்த நவம்பர்-2019-இல் சுமார் ஒன்பது ஆண்டுகள் களித்து இவரது குடும்பத்திற்கு வீடுகட்ட ஒரு வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால் அவ்வாறு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம் முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று தொடர்ந்து சொல்லிவரும் சேட்டு சிவக்குமாரின் தாய் அனுசுயா மணி பெயருக்கு வீட்டுவசதி திட்ட ஒதுக்கீடு செய்யக்கூடாது என்று ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்று அலுவலர்களிடம் பிரச்சனை செய்துள்ளார். தொடர்ந்து 6 மாதங்கள் சேட்டு பிரச்சனை செய்ததால் வீடுகட்டும் பணியைத் தொடங்க முடியாமல் இருந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் வீடு கட்டத் தொடங்கியுள்ளார் சிவக்குமார்.
"ஊரை விட்டு விரட்டுவேன், இல்லை இங்கேயே கொன்று புதைப்பேன்":
வீடு கட்டும் பணியைத் தொடங்கிய நாள்முதல் பல்வேறு விதங்களில் சேட்டு தொந்தரவு கொடுத்துவருகிறார். கடந்த 3 மாதங்களாக இந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தை வீடு கட்டவிடாமல் தடுக்கும் நோக்கத்துடனும் பிரச்சனை செய்யும் எண்ணத்துடனும் தனது லாரியை வீடு கட்டப்படும் இடத்தை அடைத்து நிறுத்தியுள்ளார். சிவக்குமார் குடும்பத்தை ஒன்று ஊரை விட்டு விரட்டப் போவதாகவும், இல்லையென்றால் இங்கேயே  கொன்று புதைக்கப் போவதாகவும் தொடர்ந்து பலர் மூலமும் மிரட்டி வந்தார். இனி சிவக்குமார் குடும்பத்தினர் சேட்டு மீது புகார் கொடுத்தால் சிவக்குமாரின் தங்கை ஜெயந்தியைத் தாக்கிய வழக்கில் சேட் பிணை ரத்துசெய்யப்பட்டு கைதுசெய்யப்படுவார் என்பதால், "நான் ஜெயிலுக்குப் போனா அந்தக் குருட்டுப் பயலுக குடும்பத்த வெட்டிட்டுத்தான் போவேன்" என்று நேரடியாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தனக்கு காவல்துறையிலும் நீதிமன்றத்திலும் முழு செல்வாக்கு இருப்பதாகவும், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறிவருகிறார்.
மெத்தனமாக விசாரித்த காவல்த்துறை:
25 ஜூன் 2020 காலை 7.30 மணி அளவில் சிவக்குமார் குடும்பத்தினர் வீடு கட்டிக்கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்ற சேட்டு, அங்கிருந்த பணியாளர்களை மிரட்டியதோடு அவர்களது குடும்பம் குறித்தும் ஊனம் குறித்தும் தவறான வார்த்தைகளால் தகாத முறையில் திட்டியுள்ளார். வீடு கட்டும் வேலைக்கு அழைத்தால் யாரும் வரக்கூடாது என்று மிரட்டிய சேட்டு, அவ்வாறு வருபவர்களை அடித்து உதைக்கப் போவதாகவும், மீறிக் கட்டினால் கட்டிடத்தை தனது லாரியை விட்டு இடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். "அந்தக்குருட்டுப் பயலுக்கே அவளவு திமிர் இருந்தா நான் சும்மா விட்டுட்டுப் போயிடுவேனா? ஒரு வழி பண்ணிட்டுத்தான் போவேன்" என்றும் மிரட்டியுள்ளார். சிவக்குமார் குடும்பத்தினர் மீது ஏற்றிக் கொள்வதர்க்காகவே தனது லாரியை அங்கேயே நிறுத்தியிருப்பதாகவும் சொல்லீயிருக்கிறார்.
இது தொடர்பாக முனைவர் சிவக்குமார் இணையவழியில் சமர்ப்பித்த HAD20064233 Dated 25-06-2020 புகாரின்பேரில் காவல்த்துறையினர் விசாரணை நடத்தி, சிவக்குமார் குடும்பத்தினர் வீடுகட்ட சேட்டு எந்தவிதத்திலும் இடையூறு செய்யக்கூடாது என்றும், உடனடியாக வீடுகட்டும் இடத்தை அடைத்து நிறுத்தியிருக்கும் லாரியை சேட்டு அகற்றவேண்டுமென்றும் சேட்டுவை எச்சரித்தனர். ஆனாலும்,ஊனம்குறித்துப் பேசியது குறித்தோ, கொலைமிரட்டல் விடுத்தது குறித்தோ காவல்த்துறையினர் எந்த விசாரணையும் மேர்க்கொல்லாமலேயே வழக்குப் பதிவுசெய்யாமல் முடித்துவிட்டனர். 
அடாவடியான பொய்ப்புகார், அளவைக்கு வராத வருவாய்த்துறை:
இவ்வாறு தனது மிரட்டல்கள் எதற்கும் சிவக்குமாறும் அவரது குடும்பமும் அடிபணியாததால் குறுக்குவழியில் அவர்கள் வீடுகட்டுவதை தடுக்க நினைத்து சேட்டு துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி (BDO) அலுவலகத்தில் பொய்யான புகார் ஒன்றிணைக் கொடுத்துள்ளார். தனது புகாரில், தற்போது சிவக்குமார் குடும்பத்தினர் வீடு கட்டிக்கொண்டிருக்கும் இடம் ஊராட்சிமன்றக் கட்டிடம் தொடர்பான வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும், எனவே வழக்கு முடியும்வரை அக்குடும்பத்தை வீடுகட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார் சேட்டு. அந்தப் புகாரின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் வீடுகட்டும் பணியைத் தொடரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார். ஆனால் சிவக்குமார் வீடுகட்டும் நிலத்திற்கும் ஊராட்சிமன்றக் கட்டிட வழக்கிற்கும் ஒரு தொடர்பும் இல்லை, குறிப்பிட்ட Survey என் வழக்கில் சேர்க்கப்படவே இல்லை. இருப்பினும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து தெளிவுபடுத்திய பின்னரே வீடுகட்ட அனுமதிக்க முடியும் என்றும், அது தொடர்பாக வருவாய்த்துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் கடந்த 2 மாதத்திற்கு முன்பே வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுத்து,  தேவைப்பட்டால் நிலத்தை அளவீடு செய்து, தான் வீடுகட்டும் பணியைத் தொடர ஆவண செய்யுமாறு வருவாய்த்துறைக்கும் (Petition No.: 2020/9005/06/705977/0707) ஊரக வளர்ச்சித்துறைக்கும் (Petition No 2020/9005/06/706078/0707) இணயவழியில் சிவக்குமார் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் இவரது மனுக்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எனவே மீண்டும் நினைவூட்டும் மனுவும் இணையவழியில் பதிவுசெய்துள்ளார். சேட்டு தனக்கு எல்லா மட்டத்திலும் ஆள் பலமும் பண பலமும் இருப்பதாகவும், எங்கு சென்றாலும் அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், இனி சிவக்குமார் குடும்பத்தினர் வீடுகட்டுவது நடக்காது என்றும் ஊரில் தொடர்ந்து சொல்லித் திரிவதோடு தொடர்ந்து மறைமுக வழிகளில் மிரட்டல் விடுத்து வருகிறார்.
தடித்த வார்த்தைகள், தாறுமாறாய்ப் பேசும் வட்டார வளர்ச்சி அலுவலர்:
சேட்டுவின் உள்ளூர் செல்வாக்கையும் பணபலத்தையும் உறுதிப்படுத்தும் விதத்தில்தான் BDO மற்றும் வருவாய்த் துறையினரின் நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. கடந்த 4/9/20 வெள்ளிக்கிழமை அன்று சிவக்குமார் தற்போது வசித்துவரும் தகரக்கூரை போட்ட வீட்டிற்குச் சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர், நிலத்தை அலக்காமலேயே வேறு இடத்தில் வீடு கட்டிக்கொள்ளுமாறும், சிவக்குமார், அவரது அண்ணன், தங்கை அனைவரும் ஊனமுற்றோர் என்று பொய்யாக நடித்து ஏமாற்றுவதாகவும் நாக்கூசாமல் கூறியிருக்கிறார். மேலும் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் என வருவாய்த்துறை அதிகாரிகலெல்லாம் கடிதம் அனுப்பிவிட்டால் மட்டும் தானாக வந்து நிலத்தை அளக்க மாட்டார்கள் என்றும், சிவக்குமார்தான் நேரில் சென்று, உட்காந்து, காத்திருந்து அவர்களை அழைத்து வரவேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் உச்சமாக, இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு நீதி பெற்றுத்தர வேண்டுமென்று சிவக்குமார் மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையருக்கு அனுப்பிய மனுவும் 2 வாரங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்காலிக விரிவுரையாளராகப் பணிய்யாற்றும் தனக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் இல்லாத நிலையில் கடன் பெற்றே வீடு கட்டத் தொடங்கியதாகவும், தற்போது வீடுகட்டும் பணி வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தான் வாங்கிய ஒன்று லட்சத்து முப்பதாயிரம் மதிப்புள்ள கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் வீணாகி வருவதாகவும் வேதனை தெரிவிக்கிறார் முனைவர் சிவக்குமார். மேலும் தற்போது கழிவறை வசதியில்லாத சிறிய தகரக் கூரை போட்ட வீட்டில் தோட்டத்திற்குள் வசித்து வரும் தாங்கள் பாம்போ தேலோ எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்குள் வரலாம் என்ற அச்ச உணர்விலேயே ஒவ்வொரு கணமும் வாழ்வதாகவும், மழைக்காலம் என்பதால் இயக்கை ஒவ்வாதைகளுக்கு வெளியில் காட்டிற்குள் செல்லும்போது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் செல்வதாகவும் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர் முனைவர் சிவக்குமார் குடும்பத்தினர். ஏற்கனவே ஒருமுறை சிவக்குமாரின் பார்வையற்ற அண்ணன் செல்வம் பாம்புக்கடிக்கு ஆளாகி, உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்று காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தான் வீடு கட்டிக்கொண்டிருக்கும் நிலம் தொடர்பாக வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என்பதைக் கருத்தில்கொண்டு, உடனடியாக தனது குடும்பத்திற்கு வீடுகட்ட அனுமதி வழங்க துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரும் வருவாய்த்துறை அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேர்க்கோல வேண்டுமென்றும்,
தனது குடும்பத்திற்குத் தொந்தரவு கொடுத்து, தங்களது ஊனத்தையும் தந்தை பிரிந்துசென்றதையும் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்குச் சேர வேண்டிய சொத்துப் பாகங்கள் அனைத்தையும் தானே அபகரித்துக்கொள்ளும் நோக்கத்துடன் கொலைமிரட்டல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், ஊனத்தைக் குறித்து இழிவாக பொது இடத்தில் அவதூறாகப் பேசுதல், கிராமத்தின் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் தொடந்து ஈடுபட்டு வரும் வேடந்தவாடி கிராமம் பச்சையப்பன் மகன் சேட்டு மீது IPC, நில அபகரிப்புச் சட்டம், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் (Rights of Perssons with Disabilities (RPD) Act 2016) பிரிவு 92 உள்ளிட்ட தகுந்த சட்டப் பிரிவுகளின் படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து தனது குடும்பத்தின் உயிரையும், தங்களுக்குச் சேர வேண்டிய நிலத்தின் மீதான உரிமையையும் பாதுகாத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கிறார் முனைவர் சிவக்குமார். மேலும் காவல்த்துறையினர், வருவாய்த்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேட்டுவின் செல்வாக்கிற்கும் பணபலத்திற்கும் அடிபணிதுவிடாமல் வறுமையிலும் பல்வேறு உடல் சவால்களோடும் வாழ்ந்துவரும் சிவக்குமார் குடும்பத்தினருக்கு உரிய நியாயத்தை வழங்க வேண்டுமென்றும், இந்தப் பிரச்சனையில் திருவண்ணாமலை ஆட்சியர், மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு 3 மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயுற்ற அவர்களின் தாய் ஆகியோருக்கு விரைவாக நீதி பெற்றுத்தர வேண்டுமென்றும் மாற்றுத்திறனாளிகளின் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேட்டுவிடமிருந்து மீட்க வேண்டியது, சிவக்குமாரின் நிலம் மட்டுமல்ல, சீர்கேட்டுக்குக் காரணமான சில அதிகாரிகளையும் தான்.
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

2 comments:

  1. கேட்கும் போதே நமக்கு வேதனை அளிக்கிறது இந்த வேதனையில் தவிக்கும் அந்த குடும்பத்தை சட்டம் தான் காப்பாற்ற வேண்டும்

    ReplyDelete
  2. மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்புக்கும் உயிருக்கும் குந்தகம் ஏற்படுத்தும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க இது போன்று
    விஷக் கிருமிகளை அடியோடு கிள்ளி எறிய வேண்டும்

    ReplyDelete