31 ஆகஸ்ட், 2020
“நமக்கான
பிரச்சனைகளை நமக்குள்ளேயே பேசிக்கொண்டிருப்பது வீண் வேலை.” இது ஜூம் வழியே
நடக்கும் கருத்தரங்குகள் குறித்து, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள்
நலச்சங்கத்தின் துணைத்தலைவர் சுரேஷ்குமார் அவர்கள் சொல்லும் ஒருவரி கமெண்ட். “என்ன செய்யலாம்? உங்க பிரச்சனையைச்
சொல்ல கமிஷ்னரைக் கூப்பிடுவோமா?” என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும்
பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலர் மணிக்கண்ணன் கொழுத்திப்பொட, பற்றிக்கொண்டது
ஆக்கபூர்வ அக்கினி; நிகழ்ந்தேறியது ‘கரோனா காலத்திற்குப் பின் பார்வை
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்களும் அதன் தீர்வுகளும்’ என்ற பொருண்மையில்
சங்கத்தின் முதல் கருத்தரங்கு. ஜூம் அரங்கிற்கு ஆணையர் வருவதாகச் சொன்ன சேதியில்,
சொன்னவர்கள் உட்பட சங்க உறுப்பினர்கள் எவருக்குமே பாதி நம்பிக்கைகூட இல்லை.
ஆனாலும் இது சங்கம் ஒருங்கிணைக்கும் முதல் ஜூம் கூடுகை என்பதால், ஒரு கை
பார்ப்போம் என கிடைத்த மூன்றே நாள் அவகாசத்தில், ஒவ்வொரு உறுப்பினர்களும்
உழைத்தார்கள்.
26 ஜூலை ஞாயிறு
காலை 11 மணி என குறிக்கப்பட்ட நேரத்தைக் கடந்துகொண்டிருந்தது கடிகாரம். எத்தனை
நேரம் சும்மாவே எல்லோரையும் இணைப்பில் வைத்திருப்பது என்பதில் சங்க தலைமை
தடுமாறிக்கொண்டிருக்க, ஜானிடாம் வர்கிஸ் என்ற பெயர் பங்கேற்பாளர் பட்டியலில்
மினுக்கிட்டதுதான் தாமதம், தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த தங்கை
மோனிஷாவின் கைகள் அந்தப் பெயரை டிக் செய்து அட்மிட் தந்ததில், பற்றிக்கொண்டது
பரபரப்பு.
மேலே இடது திரு. முத்துசாமி, வலது திரு. ரமேஷ் | கீழே இடது திரு. முருகானந்தம் வலது திரு. சங்கர் நடுவில் திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜன் |
நிகழ்வில் பல்வேறு
தரப்பினரின் கருத்துகளையும் திரட்டும் நோக்கத்தில், பார்வையற்றோர் நலனில்
அக்கறைகொண்டு செயல்படும் பல சங்கங்கள் மற்றும் அமைப்புகளுக்கு முன்கூட்டியே அழைப்பு
விடுத்திருந்தது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். அவ்வழைப்பினை ஏற்று,
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் அதன்
தலைவர் திரு. முத்துசாமி, பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலர் திரு.
ரமேஷ், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களில்
ஒருவரான முனைவர் முருகானந்தம், அகில இந்திய கூட்டமைப்பின் (AICFB) துணைத்தலைவர் திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜன்
மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தொழில்நுட்ப ஆலோசகர் திரு. சங்கர் ஆகியோர் நிகழ்வில்
பங்கேற்று தங்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தனர். அத்தோடு, இத்தகைய
நெருக்கடியான காலகட்டத்தில், நாங்கள் பெறுபவர்கள் என்ற இடத்திலிருந்து, எங்களுக்கு
நாங்களே கொடுத்துக்கொள்ளும் இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம் என்பதை அரசுக்கு
அறியத் தரும் முகமாக, கரோனா ஊரடங்கு காலத்தில் பார்வையற்ற சமூகத்தால் தங்களின்
சொந்த சமூகத்தில் வருமானம் இழந்து தவிக்கும் பார்வையற்றோருக்கு நிதி திரட்டி
வழங்கியது குறித்த ஒரு தொகுப்பு, ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் விரல்மொழியர்
மின்னிதழில் ஒரு கட்டுரையாக வெளிவந்தது. அதன் சுருக்கத்தைக் கூட்டத்தின் தொடக்கத்தில்
வாசித்தார் இதழின் ஆசிரியர் திரு. பாலகணேசன்.
திருமதி. கஸ்தூரி, திரு. கொலஞ்சிநாதன், திரு. செல்லமுத்து |
எடுத்துக்கொண்ட
பொருளுக்கான விவாதத்தில், அதற்குத் தொடர்புடையவர்களின் பங்கேற்பே முக்கியம் எனக்
கருதியது சங்கம். எனவே, ரயில்வணிகம் செய்யும் பார்வையற்றவர்களான திரு.
செல்லமுத்து, திரு. கொலஞ்சிநாதன் மற்றும் திருமதி. கஸ்தூரி ஆகியோரையும் அழைத்துப்
பேசவைத்து, கள நிலவரத்தைப் பதிவு செய்ததோடு,அதற்கான உரிய தீர்வுகளையும், அவர்களே
ஆணையரின் முன்னிலையில் முன்மொழியும் வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தது ஹெலன்கெல்லர்
மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
இணைய அரங்கில்
நூறு நபர்களையே அனுமதிக்க முடியும் என்பதால், யூட்டூப் லைவ் வசதி செய்யப்பட்டது.
இருந்தும், நூறைத் தொட்டபடியே இருந்தது பார்வையாளர்களின் எண்ணிக்கை. அரசு
தரப்பில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் திரு. ஜானிடாம் வர்கிஸ், துறையின் இணை
இயக்குநர் திரு. மாரிமுத்து, துணை இயக்குநர்கள் திரு. ரவிநாத்சிங், திருமதி. சரளா
ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
மறுவாழ்விலிருந்து
அதிகாரமளித்தலை நோக்கி நகர்தலே இலக்கு:
உயர்திரு. ஜானி டாம் வர்கிஸ் |
எல்லோரும்
எதிர்பார்த்துக் காத்திருந்தது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் பேச்சைத்தான்
என்றாலும், அவருடைய பேச்சில் புதிய உறுதிமொழிகளோ, புதிய திட்டங்களுக்கான
அறிவிப்புகளோ இல்லை. ஆனாலும், யாருக்கும் அவரின் பேச்சில், சிறு அதிர்ப்தி இல்லை.
காரணம், அவர் துறையின் எதார்த்த நிலையையும், சில நிர்வாகப் போதாமைகளையும் மிக
இயல்பாக விளக்கியதோடு, தொலைநோக்காகத் தாங்கள் மேற்கொண்டிருக்கும் சில திட்டங்கள்
குறித்து மிக வெளிப்படையாகப் பேசினார். கேரள வாசம் கலந்து, அவரிடமிருந்து
புறப்பட்ட தமிழ்ச்சொற்களில் நிறைய நம்பிக்கைகளும் புதிய செயல்வடிவத்திற்கான
கனவுகளும் நிறைந்திருந்தன.
“இந்த வாய்ப்பை
எங்களுக்கு ஏற்படுத்தித் தந்த ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் அனைத்து
உறுப்பினர்களுக்கும், இதர சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் நான் நன்றி
சொல்லிக்கொள்கிறேன். இந்தப் பேரிடர் காலத்தில், உங்களைப் போன்ற பார்வையற்றோருக்கான
சங்கங்கள் மற்றும் பிற மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்கள் அவ்வப்போது வழங்கிவரும்
அறிவுரைகளும் ஆலோசனைகளுமே எங்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. பேரிடர் காலம் என்பது
கடினமானதுதான் என்றாலும், அதுவும் நமக்கான புதிய வாய்ப்புகளையும் கூடவே
கொண்டுவந்து தரும் என்றே நான் நம்புகிறேன்.” என்றார் உறுதியாக.
“உங்கள் குரல்கள்
எங்களை எட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஹெல்ப் லைன் தொடர்பாக தொடக்கத்தில் சில
சிக்கல்கள் இருந்தாலும், இப்போது அவை சரிசெய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.
நம்முடைய துறையானது மிகவும் சிறிய துறைதான். மாவட்ட அளவில் ஒரே ஒரு அலுவலகத்தைக்
கொண்டுள்ள நமது துறையானது, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை போன்ற இதர துறைகளோடு
இணைந்து பணியாற்றி பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த ஹெல்ப் லைன்
வசதியைக் கோவிட் காலத்திற்குப் பிறகும் தொடரவேண்டும் என்பதில் நாம் உறுதியாய்
இருக்கிறோம். வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் உங்களின் பல்வேறு
பிரச்சனைகளைத் தீர்க்க இதை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தவிருக்கிறோம். அதற்காக இதனை
வலிமைப்படுத்த வேண்டும். இந்த வசதியைப் பொருத்தவரை முன்பிருந்த பிரச்சனைகள்
இப்போது இல்லை, ஆனால், இப்போதும் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது, அதனைக்
களைய வேண்டும்.” என்றார்.
“கரோனா நிவாரணமாக
எல்லா சங்கங்களும் ரூ. 5000 கேட்டார்கள். ஆனால், தற்போதைய நிலையில் அது சாத்தியம்
இல்லை என்றாலும், நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள் நன்கு யோசித்து, இந்த 1000
நிவாரணத்தை அறிவித்துச் செயல்படுத்தியுள்ளார். எல்லா மாவட்டங்களைப் போலவே,
சென்னையிலும் முதலில் மாவட்ட ஆட்சியர்களே நிவாரணத்தை வழங்கும்படி
அரசாணைவெளியிடப்பட்டது. பிறகு உடனடியாக நிவாரணத்தை வினியோகிக்கும் பொறுப்பு
மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எல்லாப்
பயனாளிகளுக்கும் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நிவாரணத்தை வினியோகிக்க
வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்திச் சொல்கிறோம். ஆனாலும் அரசு நிர்வாகத்தில்
நிலவும் ஆள் பற்றாக்குறை என்பது ஒரு பிரச்சனையாகவே உள்ளது. இந்த வினியோகத்தின்
மூலமாகவும், நமக்கு ஒரு நன்மை நடந்திருக்கிறது. அது என்னவென்றால், இந்த நிவாரணத்தை
வழங்கும் முன்பாக, நீங்கள் ஒரு அடிப்படைப் படிவத்தைப் பூர்த்தி செய்ய
வேண்டியிருக்கும். அப்படிவத்தில் உங்களின் அடிப்படைத் தகவல்கள், உங்கள் பணி விவரம்
உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகின்றன. இதன்மூலம் அரசுக்கு ஒரு தகவல் திரட்டு (data) கிடைக்கிறது. இதை நாம் தற்போது கணினியில் உள்ளீடு செய்து
தொகுத்து வருகிறோம். இந்த டேட்டாவை வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில், இன்னும்
துல்லியமாக நாம் திட்டங்களை வகுக்கவும், அதை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்
இதன்மூலம் ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.” என்று சொன்னதன்மூலம், ஒரு
புதிய கோணத்தில் அனைவரின் சிந்தனையையும் திருப்பினார்.
“மாண்புமிகு
சமூகநலத்துறை அமைச்சர் அவர்கள், employment livelihood centre அமைக்கப்படும் என
அறிவித்துள்ளார். அரசின் பல்வேறு துறைகளால் முன்னெடுக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்
தொடர்பான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மாற்றுத்திறனாளிகளிடம்
ஏற்படுத்தும் பொருட்டு, அனைத்துத் துறைகளின் திட்டங்களை நமது துறை வாயிலாக
ஒருங்கிணைக்கும் முயற்சி தொடங்கியிருக்கிறது. இது உடனடியாக நடந்துவிடாது
என்றாலும், நீண்ட நோக்கில் இத்திட்டம் வெற்றிகரமானதாக அமையும். இதன் மூலமாக, நாம்
மறுவாழ்விலிருந்து அதிகாரமளித்தளை (welfare to empowerment) நோக்கி நகர்தலே இலக்காகக் கொண்டு
செயல்படுகிறோம். தொடர்ந்து உங்கள் ஆதரவிற்கும் அறிவுரைக்கும் நான் மீண்டும் எனது
நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என முடித்தார் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் உயர்திரு. ஜானி
டாம் வர்கிஸ்.
திரு. ரவிநாத்சிங் |
கூட்டத்தில்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குநர் திரு. ரவிநாத்சிங் அவர்கள், ‘we are your voice’ என்ற தொண்டு நிறுவனத்தின் வாயிலாக
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகவும், அதற்காக
அரசின் சார்பில் அந்த தொண்டு நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுவதாகவும்
சொன்னார். இது பார்வையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், கடந்த சில
ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, பலருக்கும்
பணிவாங்கித் தருவதாக, ஈரோடு மகேஷ் போன்ற தொலைக்காட்சி பிரபலங்களை வைத்து விளம்பரம்
செய்யும் ‘we are your
voice’ தொண்டு நிறுவனம், பார்வையற்றோருக்கு அத்தகைய
பணிவாய்ப்புகள் எதையும் ஏற்படுத்தித் தருவதில்லை என்கிறார்கள் அந்த நிறுவனத்தின்
வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்ற பல பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரிகள்.
ஜூம் அரங்கில்
நுழைய இயலாதபடிக்குப் பலரையும் நீண்டநேரம் காத்திருப்பு அறையில் வைத்திருந்ததைக் குறையாகச் சொல்லும் பலரும்கூட,
சங்கத்தின் மாற்றுப் பார்வை கொண்ட நோக்கத்தைப் பாராட்டத் தவறவில்லை. நாமும்,
அவ்வாறு காத்திருப்பில் வைக்கப்பட்டோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம்
தெரிவித்துக்கொள்வதோடு, நிகழ்வின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் மனமார்ந்த
நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
ஆசிரியர்க்குழு
* * *
சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடர:
வாட்ஸ் ஆப்: 9787673244
டெலகிராம்:9994636936
No comments:
Post a Comment