முகப்பு

Showing posts with label education. Show all posts
Showing posts with label education. Show all posts

சொல்லுங்கள்! என்ன செய்யலாம்?


31 ஜூலை, 2020
graphic 'நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்' என்ற வாசகத்தைக்கொண்ட சவால்முரசு சின்னம்
பொதுத்தேர்வு முடிவுகளைத் தாங்கி வந்த கடந்த ஜூலை மாதமானது,, ஓவியா, காவியா என்ற இரண்டு திறமையான எதிர்கால நம்பிக்கைகளை பார்வை மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு அறிமுகம் செய்து சென்றிருக்கிறது. முன்னவர், பதிலி எழுத்தர் துணையின்றி மடிக்கணினியைப் பயன்படுத்தி சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை தானே எழுதி, 500க்கு 447 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தவர். பின்னவர் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 571 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கிறார். இருவரின் பேட்டிகளையும் வெளியிட்டு, பொதுச்சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்ற அனைத்து ஊடகங்களுக்கும் நன்றிகள்.
இரண்டு மாணவிகளின் பேட்டிகளில் மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையிலும் தவிர்க்க இயலாத பேசுபொருளாகியிருக்கிறது  மடிக்கணினி. ஒருவர் மூன்றாம் வகுப்பிலிருந்தே மடிக்கணினி பயின்று, ஏழாம் வகுப்பு முதல் தன் தேர்வுகளை மடிக்கணினியில் எழுதி வருவதாகச் சொல்கிறார். இன்னொருவர், தான் இரண்டு ஆண்டுகளாக அரசால் வழங்கப்படும் மடிக்கணினிக்காக காத்திருப்பதாகவும், இப்போதாவது தனக்கு அது வழங்கப்பட்டால், தன்னுடைய உயர்கல்விக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். ஒருவருக்குப் பிரெயிலைவிடக் கணினி அத்துபடி; இன்னொருவருக்கு பிரெயில்தான் எல்லாமுமாய் இருக்கிறது.
ஒரே நிலத்தைச் சேர்ந்த, ஒரே குறைபாடுடைய இரண்டு மாணவிகளுக்கு வழங்கப்படுகிற கல்வியில்  எவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன என்பதைப் போகிற போக்கில் ஒரு மடிக்கணினி துணைகொண்டு குறிப்பால் உணர்த்தியிருக்கிறது காலம். புதிய கல்விக்கொள்கை என்றும், மும்மொழி செம்மொழி என்றும் அடித்துக்கொண்டிருக்கும் முன்னால் இந்நாள் அரசுகளைப் பொறுப்பாக்குவது இருக்கட்டும். நாம் இதுவரை என்ன செய்துவிட்டோம்?
சிறப்புக் கல்வியே சிறந்ததென்று சிலிர்த்துக்கொள்வோரும், உள்ளடங்கிய கல்வியே உயர்வானதென்று உருகிக்கொண்டிருப்போரும் என்றேனும் ஒருநாள், ஒன்றாக உட்கார்ந்து உரையாடி இருக்கிறோமா? அவரவர் உயர்த்திப் பிடிக்கிற முறையின் நல்லவை அல்லவைகளைக் கூட்டு மனப்பான்மையுடன் ஆராய்ந்து, வலிமையான கருத்துருவாக்கத்தை அடிப்படையாகக்கொண்ட கல்விமுறையை வடிவமைக்க முயன்றோமா?
அத்தகைய உரையாடலைக் காலம் நம்மிடம் வலியுறுத்தி நிற்கிறது. இனிமேலும் தாமதித்தால், எதிர்காலப் பார்வை மாற்றுத்திறனாளி சமூகத்தில் படித்தவர்கள் இருப்பார்கள், பட்டதாரிகள் நிறைவார்கள், ஆனால், அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது, எதார்த்த உலகியல் அறிவும் இருக்காது. இப்போது சொல்லுங்கள்! என்ன செய்யலாம்?

நிஜத்தாரகை ஓவியா

31 ஜூலை, 2020
graphic ஓவியா
ஓவியா
பெருமிதம் என்கிற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியாத அந்த வயதில், கை வலிக்க வலிக்க, பிரெயிலில் எனக்கான தேர்வினை நானே எழுதினேன். ஒருபோதும் அது எனக்கு சுமையாகவோ, வலியாகவோ, ஏன் பெருமிதமாகவும்கூட உறைத்ததே இல்லை. ஆனால், சிறப்புப் பள்ளியை விட்டு, சாதாரணப்பள்ளிக்கு இடம் பெயர்ந்து, ஒன்பதாம் வகுப்பின் முதல் இடைத்தேர்வினை நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதும் தருணம் வாய்த்தபோதே என் இழப்பை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் இறுதியாக எழுதிய முதுநிலைப் பட்டயத் தேர்வுவரை, ஏதோ ஆன் செய்து விட்டுவிட்ட ரேடியோவைப்போல் தேர்வறையில் முழங்கியிருக்கிறேன். ஒருமுறைக்கு இரண்டுமுறை சொல்வது, பதிலி எழுத்தரின் ‘ஹூம்’ ஒருமுறை கேட்காவிட்டாலும், தூங்கிவிட்டாரோ என்று ஐயுறுவதுமாய் கழிந்திருக்கின்றன என் தேர்வறை நிமிடங்கள். அப்போதெல்லாம் எனக்குள் எழுகிற ஒரே கேள்வியும் ஆதங்கமும் ‘இதற்கெல்லாம் ஒரு வழியே கிடையாதா?’
‘இருக்கிறது, நான் செய்துவிட்டேன்’ என்று நெஞ்சு நிமிர்த்துகிறதே ஒரு குழந்தை. அண்மையில் வெளியான சிபிஎஸ்சி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், தமிழகத்தின் நெய்வேலியைச் சேர்ந்த ஓவியா என்கிற பார்வைத்திறன் குறையுடைய மாணவி, 500 மதிப்பெண்களுக்கு 447 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள். அதுவும் தன் தேர்வை தானே கணினியில் எழுதி இந்த மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறாள். செய்தி கேட்டதும் சிலிர்த்தேன். அடடா! இது என் வாழ்நாள் ஏக்கமாயிற்றே. பத்துபேரை ஒருத்தன் அடிக்க முடியாது என்று தெரிந்தும் ஏன் நாயகனை திரையில் ரசிக்கிறோம்? நிஜத்தில் நம்மால் செய்ய முடியாத ஒன்றை திரையிலாவது பார்த்து திருப்திபட்டுக்கொள்ளத்தானே! அப்படித்தான் என்றால், எனக்கு ஓவியா நட்சத்திரம்தான். ஆனால், நிழல் நட்சத்திரம் அல்ல, நிஜத் தாரகை. “உடனே பேசிவிடு” என்று மனம் அடித்துக்கொண்டு பரபரத்தது. பேசிவிட்டேன். குழந்தைமை மாறாத குரலில் ஓவியாவும், சுமைதான் என்றாலும், பக்தியோடு பள்ளக்கு சுமந்து, அதை இறக்கிவைத்தபின் வருகிற ஒருவித களைப்பும் பெருமிதமும் கலந்த மனோபாவத்தில் ஓவியாவின் அம்மாவும் பேசினார்கள்.
என் ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஓவியாவிடமிருந்து புறப்பட்ட விடைகள், நெத்தியடி ரகம். “எப்படியிருந்தது இந்தப் புது அனுபவம்? ஏன்னா ஒன்பதாம் வகுப்புவரைக்கும் நீங்க சொல்ல, இன்னொருத்தர் எழுதிருப்பாங்க” என்று நான் முடிக்கும் முன்னமே, “ஏழாவதுல இருந்து என் பரிட்சைகளையெல்லாம் நான் மடிக்கணினியில்தான் சார் எழுதுறேன்” என்று பதில் வந்தபோது, “பெரிய இவருனு நினைப்பு” என எனக்குள்ளே ஒரு குரல் கேட்கத்தான் செய்தது. “என்ன ஸ்க்ரீன் ரீடர் யூஸ் பண்ணுறீங்க என்விடீஏவா ஜாஸா?” “ரீஜனல் லாங்குவேஜுக்கு என்வீடிஏதான சார் யூஸ் பண்ண முடியும்?” இது அடுத்த பல்பு.
ரெட்டினாய்டு பிக்மண்டோசா (RP) என்கிற விழித்திரை பாதிப்பால் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பார்வையை இழந்துகொண்டிருந்த ஓவியாவிற்கு இப்போது முழுப்பார்வையும் இல்லை. பார்வைக்குறையுடையவர்கள் கணினியிலும் தேர்வுகளை எழுதிக்கொள்ளலாம் என சிபிஎஸ்சி தேர்வு நெறிமுறைகளில் சொல்லப்பட்ட ஒற்றை வாக்கியத்தைச் சிக்கெனப் பற்றிக்கொண்டனர் ஓவியாவும் அவளின் பெற்றோரும். தான் படிக்கிற பள்ளியும் இதற்கு ஊக்கமளிக்கவே, தனது கோரிக்கையினை ஒரு விண்ணப்பமாகத் தயார்செய்து தேர்வு வாரியத்திற்கு அனுப்பியிருக்கிறாள் ஓவியா. அனுமதியும் கிடைத்துவிட, அந்தச் சாதனையும் அரங்கேறியிருக்கிறது.
“மைக்ரோசாஃப்ட் கீப்பேடுதான் பயன்படுத்தினேன். கேள்வியை ஒரு மேடம் வாசிக்க, பதில்களை நான் மைக்ரோசாஃப்ட் வேர்டில் டைப்செய்தேன். எல்லாம் முடிந்ததும் அதை அப்படியே  ப்ரிண்ட் ஔட் கொடுத்துவிட வேண்டியதுதான்”என்றவரிடம், “கணக்குல அதிகமா குறியீடாவே இருக்குமே” எனக்கேட்டால், “சின்னச் சின்ன சிக்கல்கள் இருந்துச்சுதான், ஆனா சமாளிச்சிட்டேன்” என்றார். “எக்சாம் அப்போ எனக்கிருந்த ஒரே தொந்தரவு, எனக்கு மற்றவுங்களைவிட ஒருமணிநேரம் அதாவது எல்லோருக்கும் மூனு மணிநேரமுனா எனக்கு நாலு மணிநேரம், ஒருமணிநேரம் கிரேஸ் டைம் கொடுப்பாங்க இது தேர்வு விதி. அந்த கிரேஸ் டைம்ல மற்ற ஸ்டூடன்ஸெல்லாம் கிளம்புவாங்க. அவுங்கள ஒழுங்குபடுத்தி அனுப்புறதுக்காக, மைக்ல பேசினாங்க, அந்த சத்தம்தான் ரொம்பவே டிஸ்டர்பா இருந்துச்சு” என்றார்.
graphic கோகிலா
கோகிலா
ஓவியாவிற்கு ஒரு அண்ணன் பொறியியல் படிக்கிறார். அப்பா என்எல்சியில் பொறியாளர். அம்மா கோகிலாதான் ஓவியாவின் ஆன் சலிவன். “பிறந்தப்போ கண்ணெல்லாம் நல்லாத்தான் சார் இருந்துச்சு. எல்கேஜி போனப்போ, அவ எல்லாத்தையும் கிட்ட வச்சுப் பாக்கிறதா அவுங்க டீச்சர்ஸ் சொன்னாங்க. செக் பண்ணி பார்த்ததில பிரச்சனை இருக்கிறது தெரியவந்துச்சு.  ஸ்கூல்ல எல்லோரையும் போல தன்னால படிக்க எழுத முடியாமப் போனதில குழந்தை ரொம்பவே அப்செட் ஆயிட்டா. இப்போ பத்தாம் வகுப்பு எழுதின அதே ஜவஹர் மேல்நிலைப்பள்ளியிலதான் அப்பவும் அவ படிச்சிட்டிருந்தா. அப்புறமா திருச்சில சிவானந்த பாலாலயா பள்ளில நிழலாசிரியர் (shadow teacher) வச்சுக்க அனுமதிச்சாங்க” என்றவரை நிறுத்தினேன். இதைப் படிக்கும்போது உங்களுக்கு எழுகிற அந்தக் கேள்வி எனக்குள்ளும்  எழுந்துவிட்டதே இடைமறிக்காமல் இருப்பது எப்படி? அவ பக்கத்தில இருந்து அவளுக்கு வகுப்பில் நடக்கிறதெல்லாம் விளக்குறவுங்களுக்குப் பேருதான் ஷேடோ டீச்சர்” என்றார். அந்த நிழல் ஆசிரியருக்கு ஓவியாவின் பெற்றோரே ஊதியம் வழங்கியிருக்கிறார்கள். இவ்வகையான ஏற்பாட்டை அந்தப் பள்ளி அனுமதித்தது குறித்தும் சிலாகித்தார்.
graphic சங்கர்
சங்கர்
தந்தை சென்னைக்கு பணிநிமித்தம் இடமாறுதல் பெற்றபோது, ஓவியா சென்னையிலுள்ள சில்வரன் ஸ்பிரிங்ஸ் என்ற அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தன்னார்வலர் திரு. சங்கர் அவர்களை ஓவியாவின் அம்மா சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்புதான், இன்று நாம் ஓவியாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதற்கான ஆரம்பப்புள்ளி. கணினி வழியாகப் படிப்பது குறித்தும், திரைவாசிப்பான்கள் பற்றியும் எடுத்துச் சொன்ன திரு. சங்கர் அவர்கள், கணினியில் பயன்படும் குறுக்குவழி விசைகள் பற்றிய குறிப்புகள் (shortcut keys) அடங்கிய ஒரு புத்தகத்தையும் ஓவியாவின் அம்மாவிடம் கொடுத்திருக்கிறார். அத்தோடு, ஒரு தட்டச்சு மையத்திலிருந்து பழைய  பயிற்சிப் புத்தகத்தை வாங்கிவந்து, தன் குழந்தைக்கு  அப்பாவும் அம்மாவுமே பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். கர்ணவித்யாவைச் சேர்ந்த பேராசிரியர் திரு. ரகுராமன் அவர்களும் அவ்வப்போது வழிகாட்ட, தொடர் பயிற்சியும் முயற்சியும் ஓவியாவை வெற்றிப்பாதைக்குக் கூட்டிவந்திருக்கிறது.
graphic ரகுராம்
ரகுராம்
அலுவலகம் தவிர்த்த பிற நேரங்களில் முழுக்க முழுக்க ஓவியாவின் படிப்பிற்காக அவரோடு உடனிருக்க வேண்டும் என்பது, கணவர் விஜயராஜுக்கு மனைவி கோகிலா இட்ட அன்புக்கட்டளை. தந்தை பணியிட மாற்றத்தால் என்றால், ஓவியாவின் அம்மா அவளின் படிப்புக்காகவே அவ்வப்போது ஊர் விட்டு ஊர் மாறிக்கொண்டே இருந்திருக்கிறார். மகளின் கல்விக்காக வெளியூரில் வீடு பார்த்து தங்க வேண்டிய சூழல். மகனை விடுதியில் விடுவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால், தான் மிகவும் நேசித்த டென்னிஸ் விளையாட்டைக் கூட மகன் கைவிட வேண்டிய நிலை. தன் அம்மாமீது சொல்ல முடியாத கோபம் அவனுக்கு. மகனின் நியாயமான விருப்பமும் மகளின் அவசியமான தேவையும் உரசிக்கொள்கிற அந்தத் தருணத்தில், தாயாய் ஒரு பெண் அடையும் பரிதவிப்பும் வலியும் எந்த மொழியிலும் அடங்காது. “பாப்பா பிறந்ததில இருந்து எவ்வளவோ புறக்கணிப்புகளைச்சந்திச்சுட்டேன். அப்போலாம் சரி கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் இந்த பிள்ளையை நமக்குக் கொடுத்திருக்காருன்னு நினைச்சுக்குவேன்” என்று அவர் சொன்னபோது, கடவுள் நம்பிக்கை குறித்த இன்னோரு கோணமும், நலிந்தவர்களின் வாழ்வில் அதற்கான நுட்பமான தேவையும் எனக்கு விளங்கிற்று.
“என்ன மாதிரி ஸ்பெஷல் அம்மாவையெல்லாம் அவ்வளவு சீக்கிரமா இந்த சமூகம் அங்கீகரிக்காது. அவுங்க அங்கீகரிக்கிறப்போ நமக்குள்ள எல்லாமே ஒரு முடிவுக்கு வந்திருக்கும். எல்லா அம்மாக்களுக்கும் என்னை மாதிரி பொருள் வசதி இருக்க வாய்ப்பில்லை. அவுங்க அன்றாடம் பார்க்கிற தொழில விட்டுட்டு, எங்கேயோ ஒரு இடத்தில போய் பிள்ளையைப் படிக்கவைக்கிறதெல்லாம் முடியாத காரியம். அதனால, யாரா இருந்தாலும், அவுங்களுக்கு என்ன குறைபாடுஇருந்தாலும், அவுங்களுக்கும் அந்தப் பள்ளியில இடம் இருக்கணும். அப்படிச் செய்தால், அதுவே இந்தச் சமூகம் என்னை மாதிரி ஸ்பெஷல் அம்மாக்களுக்குக் கொடுக்கிற சிறந்த அங்கீகாரமா நினைக்கிறேன்.” என்று முடித்தார் கோகிலா.
ஓவியாவின் சிறுவயதில் அவளைப் பரிசோதித்த யாரோ ஒரு மருத்துவர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் சேர்த்தால், இருக்கும் குறைப்பார்வையும் வேகமாகவே  மங்கிவிடும் என்று முட்டாள்த்தனமாய்க் கிளப்பிவிட, மருத்துவர் வாக்கை மறுதளிக்க மனமில்லை பெற்றோருக்கு. இப்போது ஓவியாவை சிறப்புப் பள்ளியில் சேர்க்கலாம் என்ற புரிதல் அவள் அம்மாவுக்கு வந்திருக்கிறது. ஆனால், ஓவியா தயங்குகிறாள். அதனால், ஊரடங்கு முடிந்த கையோடு, அம்மா மகள் இரண்டுபேர் மட்டும் மேல்நிலைக் கல்விக்காக கோவையில் வீடெடுத்துத் தங்கப் போகிறார்கள். இந்தமுறை, அண்ணனின் பூரண சம்மதத்தோடும் ஒத்துழைப்போடும்.
ப. சரவணமணிகண்டன்
தொடர்புகொள்ள: vaazhgavalluvam@gmail.com

ஏற்றத்தாழ்வை வளர்க்கும் இணையவழிக் கற்றல்

30 ஜூன், 2020
graphic சுற்றறிக்கை
கரோனா ஊரடங்கினால் மூடப்பட்டிருக்கின்றன மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் உண்டு உறைவிட சிறப்புப் பள்ளிகள். இனி பள்ளி எப்போது திறக்கும்? நாம் எப்போது விடுதிக்குச் செல்லப்போகிறோம் போன்ற விடை தெரியாத கேள்விகளுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் சொந்த ஊரில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில், ஆறு முதல் 12ஆம் வகுப்புப் படிக்கும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிட்டிருக்கிறார் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள். வகுப்பு வாரியாகப் புலனக் குழுக்கள் (whats app groups) ஏற்படுத்தப்பட்டு, வகுப்பு ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியர்கள் நிர்வாகிகளாகவும், மாணவர்கள் உறுப்பினர்களாகச் செர்க்கப்பட வேண்டும். அனைத்துக் குழுக்களையும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கரோனா பேரிடர் நெருக்கடி எப்போது முடிவுக்குவரும் என்று கணிக்க இயலாத நிலையில், கல்வி நிறுவனங்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ளன. இதனைக் காரணமாகச் சொல்லி, மாணவர்களின் அறிவுசார் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடமுடியாதுதான். ஆனால், சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் கடந்தும், மின் வசதியே ஒழுங்காகப் போய்ச்சேராத, முற்றிலும் சாலை வசதிகள் இன்றி, நகரங்களினின்று துண்டிக்கப்பட்டிருக்கிற பல கிராமங்களைக்கொண்ட இந்த தேசத்தில், இணையவழிக் கல்வி என்பது எல்லோர்க்கும் சாத்தியம்தானா? அதிலும், தனக்கான கற்றல் கற்பித்தலில் சிறப்புத் தேவையைக் கோருகிற மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான எளிய அணுகளுடன் கூடிய (easy access)சிறப்புக்கல்வி என்பது, இணையவழியில் கிடைப்பதற்கான அடிப்படைத் திட்டமிடலோ,கட்டமைப்போ நம்மிடம் இருக்கிறதா?
graphic சித்ரா உபகாரம்
சித்ரா உபகாரம்
“இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் வறுமைதான் பெரும்பாலான உடல்க்குறைபாடுடைய குழந்தைகளைப் பிரசவிக்கின்றன. கிராமமோ, நகரமோ, பெரும்பாலான மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் அன்றாடங்காய்ச்சிகளாகத்தான் இருக்கிறார்கள். இந்தப் பேரிடர் காலத்தில், அவர்கள் உரிய வேலையின்றி, வருமானமின்றி உழன்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பொத்தான் அமுக்கிப் பேசும் சாதாரண அலைபேசிகளே எட்டாக்கனியாக இருக்கிறது.  தன் குடும்பத்தின் அடுத்தவேளை உணவுக்காக, உடல்க்குறைபாடுடைய தன் குழந்தையைத் தனியே விட்டும், விட இயலாமலும் அவர்கள் வேலை கிடைக்கும் இடத்திற்கு நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள். சில குடும்பங்களில் பழைய, இரண்டாம் நிலை ஸ்மார்ட் ஃபோன்கள் இருந்தாலும்கூட, அவற்றிற்குக் காசுபோட முடியாததால், அவைகள் பயன்பாடின்றிக் கிடக்கின்றன. இத்தகைய கசப்பான கள எதார்த்தங்களைப் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வின் நிமித்தமாக திருப்புதல் செய்யலாம் என்று, மாணவர்களின் வாட்ஸ் ஆப் எண்களைக்  கோரியபோது அறிய முடிந்தது” என்கிறார் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவரும், பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியருமான செல்வி. சித்ரா உபகாரம்.
 மேலும் அவர், “இப்போதும் பட்டன் ஃபோன் வைத்திருக்கும் மாணவர்களைக் கூட்டழைப்பில் (conference call) இணைத்து ஸ்போக்கன் இங்லீஷ் எடுத்துவருகிறேன். ஆனாலும், ஒருநாள்கூட அந்த வகுப்பு எனக்கு திருப்தியைத் தரவில்லை. காரணம், ஒவ்வொரு மாணவரும் மறுக்கவே முடியாத ஏதோ ஒரு காரணத்தால் சரியாக வகுப்புக்கு வருவதில்லை. சிலருக்கு அப்பா வேலைக்குப் போவதால் ஃபோன் கொண்டுபோய்விட்டதும், சிலருக்கு ரீச்சார்ஜ் செய்யப் பணமில்லை என்பதுமான காரணங்கள்  கேட்பதற்கு வருத்தமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது. பல நேரங்களில், இதுபோன்ற காரணங்களைப் பிற மாணவர்களின் முன்னிலையில் சொல்லக்கூட பாதிப்புக்குள்ளான மாணவர்கள் தயங்குகிறார்கள்” என்கிறார்.
 மாணவர்களின் இத்தகைய உளவியல் சிக்கல்களுக்கு முகம் கொடுக்காமல், இணையவகுப்புகள் பற்றிச் சிந்திப்பது, பெரும்பான்மையான மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையையே உண்டாக்கும். ஒரு எதிர்பாராத பேரிடரின் விளைவால்,  கடக்கவே இயலாத அன்றாடத்தில் சிக்கியிருக்கிற பெரும்பான்மை மாற்றுத்திறனாளி மாணவர்களின் குடும்பத்தைத் தொடர்புகொண்டு, அவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதே சிறப்புப் பள்ளி ஆசிரியர்களின் முதன்மையான பணியாக இருத்தல் வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறையால் வலியுறுத்தப்படுவதே காலத்தின் தேவையாகும். அதைவிடுத்து, “உன்கிட்ட ஸ்மார்ட் ஃபோன் இருக்கா? உடனே அப்பாகிட்ட சொல்லி ஃபோனுக்கு ரீச்சார்ஜ் பண்ணச்சொல்லு ஆன்லைன் க்லாஸ் தொடங்கப்போறோம்” என்றெல்லாம் மன உறுத்தலின்றி எப்படிச் சொல்வது?
graphic கல்வித்தொலைக்காட்சி செயலி
சுற்றறிக்கையில் கல்வித்தொலைக்காட்சி பார்ப்பதற்கு மாணவர்களை அறிவுறுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் e-learning.tnschools.com/welcome என்ற இணைய பக்கத்தில் உள்ள பாடங்கள் மற்றும் கற்றலுக்குத் துணைபுரியும் காணோளிகளைத் தரவிறக்கிப் பயன்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிறப்புப் பள்ளிகள், அதிலும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளிகளைப் பொருத்தவரை, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களில் சரிபாதிக்கும் மேற்பட்டோர் பார்வை மாற்றுத்திறனாளிகள். ஆனாலும், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற முன்யோசனையில், அந்தந்தப் பள்ளிகளில் தாமாகவே முன்வந்து புலனக்குழுக்களின் வழியே மாணவர்களை ஒருங்கிணைத்ததும் அவர்கள்தான். அத்தகைய உத்வேகம் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் பாடம் சார்ந்து எளிதில் இணையத்தை, அதுவும் சுற்றறிக்கையில் சொல்லப்பட்ட அந்தக் குறிப்பிட்ட இணையப்பக்கத்தை எளிதில் அணுகமுடிவதே இல்லை. அவர்களுக்கான பிரெயில்வழி பாடப்புத்தகங்களும் இன்னும் முறையாக அச்சேறவில்லை. புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்படும் பாடப்புத்தகங்கள் இணையத்தில் பிடிஎஃப் முறையில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. பார்வை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய ஒருங்குறி வடிவில் பதிவேற்றப்படும் என்ற தமிழக அரசின் வாக்குறுதி என்ன ஆனது என்று தெரியவில்லை. சில தன்னார்வலர்கள் அச்சுப்புத்தகங்களை ஒலிவடிவில் பதிந்து தருவதால் மட்டுமே பெரும்பாலான பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களால் தங்கள் பணியை மேற்கொள்ள முடிகிறது.
 என்ன செய்ய வேண்டும்?
1.சிறப்புப் பள்ளிகளில் மாணவர்களுக்கான இணைய வகுப்புகள் குறித்துச் சிந்திப்பதற்கு முன்பு, மாற்றுத்திறன் மாணவர்கள் தொடர்பான தொழில்நுட்ப உதவி உபகரணங்கள், (assistive devices) அவற்றின் பயன்பாடுகள்  குறித்துப் பெரும்பாலான சிறப்புப் பள்ளி ஆசிரியர்களுக்குப் போதிய பயிற்சி இல்லை என்ற உண்மைக்கு முகம் கொடுக்க வேண்டும். இதனைக் களையும் பொருட்டு, சிறந்த வல்லுநர்களைக்கொண்டு, சிறப்புப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பயிலரங்குகள் அவ்வப்போது ஜூம் வாயிலாக துறையால் ஒருங்கிணைக்கப்பட்டு, நடத்தப்பட வேண்டும்.
2.வாட்ஸ் ஆப் குழுக்களை ஏற்படுத்தி மாணவர்களை ஒருங்கிணைப்பதற்கு முன்னதாக, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ளதுபோல், ஆசிரியர்களை உள்ளடக்கிய வாட்ஸ் ஆப் குழுக்கள் அனைத்து சிறப்புப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.
3.கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில், குடும்பஸ்ரீ என்ற உள்ளூர் தொலைக்காட்சி வாயிலாக வாரத்திற்கு மூன்று நாட்கள் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கான (children with special needs) கற்பித்தல் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் முன்வர வேண்டும்.
4.பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒலிவடிவிலும், செவித்திறன் குறையுடைய மாணவர்களுக்கு சைகை மொழியிலும் காணொலிகள் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும் என்பது வெறும் அறிவுரையாக மட்டுமல்லாமல், அதற்கு துறையும் ஆக்கபூர்வமான முறையில் பங்களிக்க வேண்டும். அதற்கான வள ஆதாரங்களைத் திரட்டிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
5.பார்வைமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பிரெயில்வழிப் பாடப்புத்தகங்கள் அச்சடிப்பதில் நிலவும் தற்போதைய நடைமுறைச் சிக்கலைக் கவனத்தில்கொண்டு, ஒலி மற்றும் ஒருங்குறி வடிவில் பாடப்புத்தகங்களை மாற்றியமைக்க  முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை அரசு ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6.ஒவ்வொரு   மாவட்டத்தின் வட்டார வளமையத்தில் (block resource centre) பணியாற்றும் சிறப்பாசிரியர்களும், அந்த மாவட்டத்தில் இயங்கும் சிறப்புப் பள்ளியும் தங்களுக்குள்ளாக ஓர் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு, குக்கிராமங்களில் வசிக்கும் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரைத்  தொடர்புக்குள் கொண்டுவர முயல வேண்டும். இத்தகைய ஒருங்கிணைப்பை மாவட்ட ஆட்சியர்களின் வழியே மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் ஏற்படுத்திட வேண்டும்.
7.எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வி தொடர்பான நடவடிக்கைகளில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கும் இடையே நிலவும் மிகப்பெரிய இடைவெளி போக்கப்பட்டு, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் முன்னெடுக்கப்படும் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும், மாற்றுத்திறன் மாணவர்களையும் உள்ளடக்கித் திட்டமிடப்படுவதை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உறுதிசெய்ய வேண்டும்.
பிச்சை புகினும் கற்கை நன்றுதான். ஆனால், பிச்சை புகவும் வழியற்ற இந்த நெருக்கடியான காலத்தில், இணையவழிக் கற்றல் என்கிற கருத்து, மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெற்றோரிடையே ஒரு புதிய ஏற்றத்தாழ்வைக் கட்டமைக்கவே உதவும். விளிம்புநிலையிலுள்ள பெரும்பான்மையோரை ஒதுக்கிவிட்டு, சம பங்கேற்பு குறித்துப் பேசிப் பயனில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்பு என்பது, பொதுச்சமூகம் சார்ந்தது மட்டுமல்ல, அது மாற்றுத்திறனாளிகளுக்குள்ளும் நிலைநாட்டப்பட வேண்டிய ஒன்று என்பதை அரசு உணர்ந்துகொள்வது எப்போது?
ஆசிரியர்க்குழு
தொடர்புகொள்ள: savaalmurasu@gmail.com