முகப்பு

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது இணையவழிக் கற்றலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கற்றல் குறித்து ஐந்தே வரிகள்

18 ஜூன், 2020
graphic இணையவழியில் கற்கும் மாணவர்கள்
 நடுவண் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையால், அனைத்து மாநிலங்களுக்குமான இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைப் புத்தகம் ப்ரக்யாதா என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் உடல்நலம், பாதுகாப்பு போன்றவை தொடர்பான அறிவுரைகளும் அக்கறைகளும் பேசப்பட்டுள்ளன.
அதேசமயம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இணையவழி கற்றல் கற்பித்தல் குறித்து வெறுமனே ஐந்து வரையறைகளுடன் கடந்திருப்பது, மாற்றுத்திறனாளிகளின் கல்வியில் அக்கறைகொண்டோரிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
20 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில், ‘சிறப்புத் தேவையுடைய குழந்தைகளின் இணையவழி கற்றல் கற்பித்தலுக்கு சில குறிப்புகள்’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் ஒரு சிறு பத்தியில் பின்வரும் ஐந்து கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
1.சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்குப் பொருத்தமான, உதவும் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல்.
2.இருக்கிற வள ஆதாரங்களான ஒலிப்புத்தகங்கள்/பேசும் புத்தகங்கள், திரை வாசிப்பான்கள், சைகை மொழியுடன் கூடிய காணொளிகள், ஒலியுடன் கூடிய தொட்டுணரும் கற்றல் சாதனங்களை மேம்படுத்திப் பயன்படுத்துதல்.
3.தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) அணுகல் கலைத்திட்டத்தைப் பயன்படுத்தல்.
4.சைகை மொழியுடன் ஒளிபரப்பப்படும் தேசிய திறந்தவெளி பள்ளியின் (NIOS) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க மாணவர்களை ஊக்கப்படுத்துதல்.
5.குழந்தைகளின் பெற்றோர், சிறப்பாசிரியர், உறவினர், நண்பர்களை உள்ளடக்கிய, அவர்களின் விருப்பத்திற்கேற்ற இணைய வகுப்புகளை ஊக்குவித்தல்.
பொதுக்கல்வியே முறையாய்ப் போய்ச் சேராத, அடிப்படை வசதிகளுக்கே திண்டாடும் குடும்பத்தைச் சார்ந்த பெரும்பான்மையான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, இணையவழிக் கற்றலெல்லாம் எட்டாக்கனி என்பதை அரசும் ஆன்றோரும் உணர்வது எப்போது?
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

No comments:

Post a Comment