முகப்பு

ஆழ்ந்த இரங்கல்கள்

27 ஜூலை, 2020
graphic P.K. பின்ச்சா
P.K. பின்ச்சா
P.K. பின்ச்சா (Pincha) என்றழைக்கப்படும் பிரசன்னக்குமார் பின்ச்சா ஒரு பார்வையற்றவராக இருந்தபோதிலும், பல்வேறு நடைமுறை மற்றும் மனவியல் சிக்கல்களையும் கடந்து, தனது கல்வியாலும், திட மனப்பான்மையாலும் அதிகார உச்ச பீடத்தை எட்டிப்பிடித்தவர்.
அத்தோடு தனது செயல்பாடுகளை அவர் நிறுத்திக்கொண்டவராக இருந்திருந்தால், இன்று அவருக்காக இந்திய பார்வையற்றோர் மற்றும் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகள் சமூகம் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்க அவசியமில்லை.
அஸ்ஸாம் மாநிலத்தில் பார்வையற்றோருக்காக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதனை அரசுக்கு ஒப்படைக்கும்வரை அதன் தலைவராக இருந்தார். வடகிழக்கு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காய் போராடும் ஆக்‌ஷன் எய்ட் என்கிற அமைப்பின் மண்ண்டல மேலாளராகப் பணியாற்றிய அந்த காலகட்டத்தில், ஐநாவின் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரகடனத்தை (UNCRPD) வடிவமைப்பதில் ஆக்‌ஷன் எய்ட் முக்கியப் பங்காற்றியது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
சட்டத்தில் இளங்கலையும், ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும் பெற்ற P.K. பின்ச்சா, கடந்த 28.டிசம்பர்.2011 முதல் 27.டிசம்பர்.2014 வரை மூன்றாண்டுகள் ஊனமுற்றோருக்கான நடுவண் ஆணையராகப் (Central Commissioner for Persons with Disabled CCPD) பதவி வகித்திருக்கிறார். இந்தப் பதவியை வகித்த முதல் மாற்றுத்திறனாளி அவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவருடைய பதவி காலத்தில், பதிலி எழுத்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைத்ததை பல பார்வையற்றோர் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்கள் நன்றியோடும் பெருமிதத்தோடும் நினைவுகூர்கிறார்கள்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அறிக்கையாளராகவும், பல்வகை ஊனமுற்றோருக்கான தேசிய அறக்கட்டளையின் தலைவராகவும் செயலாற்றியிருக்கிறார். ஒரே நேரத்தில் அரசால் அமைக்கப்பட்ட இரண்டு ஆணையங்களிலும் (statutory bodies) தலைவராக பொறுப்புவகித்த முதல் மாற்றுத்திறனாளி இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இத்தகைய பெருமைகளையுடைய, இந்திய மாற்றுத்திறனாளிகளின் சமகால வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை டில்லியில் நேற்று காலை இயற்கை எய்தியிருக்கிறார். அவரின் இறப்புச் செய்தி, பல முன்னணி ஊடகங்களில் பெட்டிச் செய்தியாகக்கூட இடம்பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மற்றும் அதிகாரமளித்தலில் திரு. P.K. பின்ச்சா அவர்களின் வாழ்நாள் பங்களிப்புகள், தொலைநோக்கில், ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் வாழ்விலும் ஏதேனும் ஒரு வடிவத்தில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

1 comment:

  1. அன்னூர் அவர்கள் காட்டிய பாதையில் சென்றால் இவருடைய ஆன்மா சாந்தி அடையும். அதுவே நாம் அவருக்கு செய்யும் மரியாதை ஆகும்.

    ReplyDelete