முகப்பு

Showing posts with label examinations. Show all posts
Showing posts with label examinations. Show all posts

ஆழ்ந்த இரங்கல்கள்

27 ஜூலை, 2020
graphic P.K. பின்ச்சா
P.K. பின்ச்சா
P.K. பின்ச்சா (Pincha) என்றழைக்கப்படும் பிரசன்னக்குமார் பின்ச்சா ஒரு பார்வையற்றவராக இருந்தபோதிலும், பல்வேறு நடைமுறை மற்றும் மனவியல் சிக்கல்களையும் கடந்து, தனது கல்வியாலும், திட மனப்பான்மையாலும் அதிகார உச்ச பீடத்தை எட்டிப்பிடித்தவர்.
அத்தோடு தனது செயல்பாடுகளை அவர் நிறுத்திக்கொண்டவராக இருந்திருந்தால், இன்று அவருக்காக இந்திய பார்வையற்றோர் மற்றும் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகள் சமூகம் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்க அவசியமில்லை.
அஸ்ஸாம் மாநிலத்தில் பார்வையற்றோருக்காக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதனை அரசுக்கு ஒப்படைக்கும்வரை அதன் தலைவராக இருந்தார். வடகிழக்கு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காய் போராடும் ஆக்‌ஷன் எய்ட் என்கிற அமைப்பின் மண்ண்டல மேலாளராகப் பணியாற்றிய அந்த காலகட்டத்தில், ஐநாவின் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரகடனத்தை (UNCRPD) வடிவமைப்பதில் ஆக்‌ஷன் எய்ட் முக்கியப் பங்காற்றியது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
சட்டத்தில் இளங்கலையும், ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும் பெற்ற P.K. பின்ச்சா, கடந்த 28.டிசம்பர்.2011 முதல் 27.டிசம்பர்.2014 வரை மூன்றாண்டுகள் ஊனமுற்றோருக்கான நடுவண் ஆணையராகப் (Central Commissioner for Persons with Disabled CCPD) பதவி வகித்திருக்கிறார். இந்தப் பதவியை வகித்த முதல் மாற்றுத்திறனாளி அவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவருடைய பதவி காலத்தில், பதிலி எழுத்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைத்ததை பல பார்வையற்றோர் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்கள் நன்றியோடும் பெருமிதத்தோடும் நினைவுகூர்கிறார்கள்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அறிக்கையாளராகவும், பல்வகை ஊனமுற்றோருக்கான தேசிய அறக்கட்டளையின் தலைவராகவும் செயலாற்றியிருக்கிறார். ஒரே நேரத்தில் அரசால் அமைக்கப்பட்ட இரண்டு ஆணையங்களிலும் (statutory bodies) தலைவராக பொறுப்புவகித்த முதல் மாற்றுத்திறனாளி இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இத்தகைய பெருமைகளையுடைய, இந்திய மாற்றுத்திறனாளிகளின் சமகால வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை டில்லியில் நேற்று காலை இயற்கை எய்தியிருக்கிறார். அவரின் இறப்புச் செய்தி, பல முன்னணி ஊடகங்களில் பெட்டிச் செய்தியாகக்கூட இடம்பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மற்றும் அதிகாரமளித்தலில் திரு. P.K. பின்ச்சா அவர்களின் வாழ்நாள் பங்களிப்புகள், தொலைநோக்கில், ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் வாழ்விலும் ஏதேனும் ஒரு வடிவத்தில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

+2 தேர்வு முடிவுகள் - மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க கோரிக்கை

17 ஜூலை, 2020
graphic நம்புராஜன்
நம்புராஜன்
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 2835 மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இறுதித் தேர்வினை எழுதாத 34 ஆயிரம் மாணவர்களில் எத்தனை மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
இந்நிலையில், தேர்வு முடிவு வெளியான 520 பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களில் 497 பேரும், 592 செவித்திறன் குறையுடைய மாணவர்களில் 486 மாணவர்களும் வெற்றிபெற்றனர். 983 உடல்ச்சவால் மாற்றுத்திறனாளிகளில் 860 பேர் மற்றும் 740 இதர மாற்றுத்திறனாளிகளில் 664 பேரும் தேர்ச்சி பெற்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 51 பார்வையற்றவர்களும், சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 129 செவித்திறன் குறையுடைய மாணவர்களும் தேர்வெழுதியுள்ளனர்.
அரசு சிறப்புப் பள்ளிகளைப்பொருத்தவரை,பூவிருந்தவல்லி, திருச்சிமற்றும் தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளிகளில் மாணவர்கள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல்,தஞ்சை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளியில் தேர்வெழுதிய  12 மாணவர்களும், தர்மபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசுசிறப்புப் பள்ளியில் 10ல் 9 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாற்றுத்திறனாளிகளின் கல்வியை மேம்படுத்தும் பொருட்டு சில கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து நேற்று அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,
நேற்று வெளியிடப்பட்ட +2 முடிவுகளின்படி, தேர்வு எழுதியவர்களில் பார்வைத்திறன்-95.58%,  செவித்திறன்-82.09%, உடல்ஊனமுற்றோர்- 89.59 மாணாக்கர்களும் ஏனைய வகை மாற்றுத்திறனாளர்-87.49% என்ற விகிதத்தில் மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு வாழ்த்துக்களையும், பாடுபட்ட அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். என குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளின் கல்வி மேம்பட அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ø  அரசு இணையதளத்தில் அனைத்துப் பாடங்களையும் யுனிக்கோட் முறையில் டெக்ஸ்டாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் மூலம் பார்வைத்திறன் மாணாக்கர்கள் எளிதாகவும் முழுமையாகவும் கற்க வழிவகை செய்ய வேண்டும்.

Ø  தமிழக அரசு வழங்கும் மடிக்கணினியுடன், டெக்ஸ்டில் இருந்து பிரெயில் முறைக்கு மாற்றித்தரும் ‘ஆர்பிட் ரீடர்’ கருவி போன்றவை பார்வைத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டும். பிரெயில் புத்தகங்களை காலதாதமின்றி வழங்க வேண்டும்.

Ø  தற்போது இல்லாத கணிதம் உள்ளிட்ட பாடங்களை, தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி பார்வைத்திறன் மாணாக்கர்கள் படிக்க முடியும் என்பதால், அப்படிப்பட்ட பாடங்களையும் புகுத்த வேண்டும்.

Ø  பொதுப்பள்ளிகளில்  பார்வைத்திறன், செவித்திறன் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு  ஒவ்வொரு பாடத்திற்கும் தேவையான உரிய சிறப்பாசிரியர்கள் நியமிக்க வேண்டும். மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு தேவைப்படும் கருவிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும்.

Ø  தற்போது பொதுப்பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கான போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால், உயர்நிலை மேல்நிலை கல்விக்காக  சிறப்பு பள்ளிகளுக்கும் மாற்றுத்திறன் மாணாக்கர்கள் அதிக அளவில் வருகின்றனர்.  எனவே, சிறப்பு பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை தேவைக்கேற்ப கூடுதலாக நியமிக்க வேண்டும்.

Ø  பார்வைத்திறன் மாணாக்கர்களுக்கு பார்வைத்திறன் ஆசிரியர்களையும், செவித்திறன் மாணாக்கர்களுக்கு செவித்திறன் ஆசிரியர்களையும் கூடுதலாக நியமிப்பது பயன்படும்.

இவைகள் எல்லாம் மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு சட்டபூர்வ உரிமை என்பதை உணர்ந்து பள்ளிக்கல்வித்துறையும், தமிழக அரசும் செயலாற்ற வேண்டும்.

                                           (பா. ஜான்ஸிராணி) தலைவர்                                            
(எஸ். நம்புராஜன் பொதுச்செயலாளர்
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

600க்கு 571, "ஐஏஎஸ் எனது வாழ்நாள் கனவு" அடித்துச் சொல்கிறார் காவியா


16 ஜூலை, 2020
graphic பிரெயில் படித்தபடி மாணவி காவியா
மாணவி காவியா
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவருகிறது திருச்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அந்தப் பள்ளி நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது.
அந்தப் பள்ளியில் தங்கிப்பன்னிரண்டாம் வகுப்பு படித்த  நாமக்கல் மாவட்டம் குமாரபாளயத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகள் காவியா 600 மதிப்பெண்களுக்கு  571 மதிப்பெண்கள் எடுத்து சாதனைபடைத்துள்ளார். ஆறு பாடங்களிலுமே தொன்னூறுக்கு மேல் பெற்றுள்ள காவியா, தமிழில் 98, வரலாறு 99 மற்றும் அரசியல் அறிவியலில் 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இத்தனைக்கும் அரசியல் அறிவியல் பாடத்திற்கு கடந்த நவம்பர் மாதத்தில்தான் முறையாக ஆசிரியர் நியமிக்கப்பட்டா.
காவியாவைத் தொடர்புகொண்டு பேசினோம். “ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஐஏஎஸ் ஆகனுங்கிறது என்னோட வாழ்நாள் கனவு. சென்னையில நல்ல கல்லூரில சேர்ந்து இளங்கலை வரலாறு படிக்கப்போறேன்” என்றவரிடம், ஆசிரியர்கள் உங்களை எப்படி ஊக்கப்படுத்தினார்கள் என்று கேட்டால், “நிறைய உற்சாகம் கொடுத்தாங்க. அதேநேரத்தில, பொருளியல் போன்ற முக்கியமான பாடங்களுக்கு டீச்சர் இல்லைங்கிறதும் ஒரு குறையா இருந்துச்சு. நாங்க ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்த மடிக்கணினியும் வரல. இந்த ஆண்டாவது எனக்கு அரசுகிட்ட இருந்து மடிக்கணினி கிடைச்சா, அது என் காலேஜ் படிப்புக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்" என்கிறார் நம்பிக்கையோடு.
அந்த மாணவியின் கனவு நிறைவேற, வாசகர்களோடு இணைந்து சவால்முரசு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

நன்றிகளும் வாழ்த்துகளும்

graphic தலைவர் சித்ரா
தலைவர் சித்ரா
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சிறப்புப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயின்றுவரும் 800க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுதும் பொருட்டு, அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்ல சிறப்பானதொரு முறையில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டதோடு, முதல்வரின் தேர்வு ரத்து என்கிற அறிவிப்பிற்குப்பிறகு அதே நடைமுறையைப் பின்பற்றி, சிறப்புப் பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பான முறையில் அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்த்திருக்கிறது தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.

எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்களே எனினும், மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்புத் தேவைகளைக் கணக்கில் கொண்டது பாராட்டுக்குரியது. நான்கைந்து மாணவர்களுக்காகவும் ஒரு பேருந்து பல மாவட்டங்கள் கடந்து சென்னை வந்ததை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கமும் இந்தக் கோரிக்கையினை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரிடம் எடுத்துச் சென்றதோடு, அதனைத் தொடர் வலியுறுத்தல்களால் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தமிழக அரசின் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து 49 வழித்தடங்கள் அடங்கிய வரைவைத் தயார் செய்தார்கள். அந்த வரைவிற்கு அப்படியே செயல் உருவம் கொடுத்ததில் முக்கியப் பங்காற்றியவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள்.
இந்த நிகழ்வு, மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், பொதுச்சமூகம் என அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்படுத்தியிருக்கிற நேர்மறை அதிர்வுகள் தொடர வேண்டும். இத்தகைய சிறப்பான ஏற்பாட்டில் பங்கேற்றுப் பணியாற்றிய அனைவருக்கும் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

"பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்விலிருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு வழங்குக" முதல்வருக்கு டாராடாக் கடிதம்

graphic நம்புராஜன்
     CBSE சுற்றறிக்கையினைப் பின்பற்றி, பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென முதல்வருக்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
“தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ள 10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முழுமையாகவோ அல்லது மாற்றுத்திறன் குழந்தைகளுக்காவது ரத்து செய்து , அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கக் கோரி எமது சங்கத்தின் சார்பில் ஜுன் -1 தேதியிட்டு ஏற்கனவே மனு அனுப்பப்பட்டுள்ளது.
graphic பதிலி எழுத்தர்கள் உதவியுடன் தேர்வெழுதும் மாணவர்கள்
 பதிலி எழுத்தரைக் கொண்டு தேர்வு எழுதக்கூடிய மாற்றுத்திறன் குழந்தைகள் , தனிநபர் இடைவெளி பின்பற்றுதல் காரணங்களால் , ஒருவேளை தேர்வு எழுத முடியாமல் போனால் , அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க ஜூன் -1 அன்று நடைபெற்ற CBSE வாரிய கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக, அவ்வாரியத்தின் 02.06.2020 தேதியிட்ட சுற்றறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.
மேலும் , கொரோனா பேரிடர் ஊரடங்கு காலத்தில் மத்திய மாநில அரசு மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு உள்ள சிரமங்களை கணக்கில் கொண்டு , அவர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வயதுவந்த மாற்றுத்திறனாளிகளுக்கே விதிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளபோது , மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே , அறிவிக்கப்பட்டுள்ள 10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முழுமையாகவோ அல்லது மாற்றுத்திறன் குழந்தைகளுக்காவது ரத்து செய்து , அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க முதலமைச்சர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மீண்டும் வலியுறுத்திக் கோருகிறோம்.” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியாயங்கள் எல்லோர்க்கும் பொதுவானவையே.
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

பத்தாம் வகுப்புத் தேர்வெழுதும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு சொந்த ஊரிலிருந்து விடுதிக்கு வர பேருந்து வசதி: என்ன சொல்கிறது செய்திக் குறிப்பு

graphic மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்
 எதிர்வரும் ஜூன் 15ஆம் தேதி தொடங்க உள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு மற்றும் கரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசித் தேர்வினை ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் பொதுத்தேர்வு எழுதவிருக்கிற மாணவர்களை விடுதிக்கு அழைத்து வருதல், தொடர்ந்து அவர்களின் உடல்நிலையைக் கண்காணித்தல் உள்ளிட்ட சில பரிந்்துரைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடம் மனுவாக சமர்ப்பித்திருந்தது.
அதன் எதிரொலியாக, நேற்று ஜூன் 2ஆம் தேதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செய்திக்குறிப்பு  ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில், "உலகம் முழுவதும் தற்பொழுது மக்களை அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸ் தொற்று நோயிலிருந்து காப்பதற்கும் அதன் பரவலை தடுக்கும் வகையில் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக தடையுத்தரவு கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை ஐந்து முறை நீடிப்பு செய்து பல்வேறு நிறுவனங்கள் குறிப்பாக கல்வி நிறுவனங்களை மூடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்காலங்களில் பொதுமக்கள் , மாணவர்கள் , ஆசிரியர்கள் என பலதரப்பட்ட மக்களும் முகக்கவசம் அணிந்தும் அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் பயன்படுத்தி கைகளை கழுவுதல் , சமூக இடைவெளியை கடைபிடித்தல் , வசிக்கும் இருப்பிடம் , வேலை செய்யும் அலுவலகங்கள் , பள்ளிகள் , நிறுவனங்கள் உட்பட அனைத்து இடங்களையும் கிருமிநாசினி உபயோகம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்ள அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தற்போது சிறப்புப்பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களும் , சிறப்பு ஆசிரியர்களும் , இத்தேர்வில் கலந்துகொள்ள அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிறப்புப்பள்ளி மாணவர்கள் தேர்வு நடக்க இருக்கும் காலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே விடுதியில் தங்கி பயன்பெறவும் சுமார் 800 மாணவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திலிருந்து தாங்கள் கல்வி பயிலும் பள்ளிகளுக்கு வருவதற்கு போக்குவரத்துத்துறை மூலம் 49 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 72 கல்வி நிறுவன மாணவர்கள் பயன்பெறுவர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே தங்கள் இருப்பிடம் அலைபேசி எண் விவரங்களை தங்கள் பள்ளி நிறுவனத்தின் மூலம் இத்துறைக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து , அனைவருக்கும் தங்கள் மாவட்டத்திலிருந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் உடன் பயணம் செய்யலாம் இப்பேருந்தின் மூலம் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனம் அமைந்துள்ள மாவட்டங்களுக்கு 08.06.2020 திங்கள் அன்று காலை 08.00 மணிக்கு பயணம் தொடங்கி , அன்று மாலையில் வெளிமாவட்டங்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் நிறுவனங்களின் விடுதிகளுக்கு சென்றடைவர். மீண்டும் தேர்வு முடிந்தவுடன் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு 26.06.2020 அன்று காலை 08.00 மணிக்கு புறப்பட்டு திரும்ப வந்து அடைவதற்கும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பேருந்துகள் புறப்படும் மற்றும் அடையும் இடங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகும். எனவே பெற்றோர்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர்கள் , தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாணவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு இருப்பிடத்திலிருந்து அழைத்து வரவும் , மீண்டும் கொண்டு செல்லவும் உரிய ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
இந்த சிறப்புப் பேருந்துகளின் வருகை நேரம் , புறப்படும் நேரம் ஆகியவை அனைவருக்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் தெரியப்படுத்தப்படும். உள்ளூர் மாணவர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் கல்வி நிறுவனங்களுக்கு வந்து செல்ல வேண்டும்.
மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவனத்தின் தலைமையாசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து இதர மாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்கள் மற்றும் இதர மாவட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் உடல்நிலை பரிசோதனை செய்து பாதுகாப்பாக அவர்களின் சேருமிடத்திற்கு பயணம் மேற்கொள்ள உரிய ஏற்பாட்டினை செய்ய வேண்டும்.
சிறப்பு பேருந்தில் பயணம் தொடங்கு முன்பு , அனைத்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் , பாதுகாவலர்களின் உடல்நிலையினை பரிசோதித்து நோய் தொற்று இல்லாமையை உறுதி செய்து கொள்ள வேண்டும். பயணம் மேற்கொள்ளும் பேருந்து இருக்கையில் அறிவுறுத்தப்பட்ட சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும். பேருந்து பயணம் செய்யும் அனைவரின் நலன் கருதி பேருந்து புறப்படுவதற்கு முன்பு ( ஒரு மணி நேரம் முன் கூட்டியே குறிப்பிட்ட இடத்தில் தயாராக இருக்கவேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

ஜூன் முதல் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, குழப்பத்தில் தவிக்கும் சிறப்புப் பள்ளி மாணவர்கள்



தமிழகத்தில் ஜூன் 1 முதல்  பொதுத்தேர்வுகள்: அமைச்சர் செங்கோட்டையன் நேற்று, மே 12 ஆம் தேதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் எதிர்வரும் ஜூன் முதல் தேதி தொடங்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. அமைச்சரின் இந்த அறிவிப்பு, உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பல்வேறு கேள்விகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து விடுதிகளில் தங்கிப் பயிலும் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய சிறப்புப் பள்ளி மாணவர்கள் என்ன செய்வது, எப்படி தேர்வுக்குச் செல்வது  என்ற குழப்பத்தில் தவிக்கின்றனர்.
graphic ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்
 இந்த குழப்பங்கள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். சிறப்புப்பள்ளி மாணவர்களின் சிறப்புத் தேவையைக் கவனத்தில்கொண்டு, தேர்வு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே, அவர்களுக்கான விடுதிகள் திறக்கப்பட வேண்டும். இது தொடர்பான அனுமதியைப் பெறுவதில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களுக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
graphic ஆசிரியர் சொல்ல மாணவர்கள் பிரெயிலில் குறிப்பெடுக்கிறார்கள்
 அந்தக் கடிதத்தில், ‘பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் தேதி அன்று தொடங்குகிறது. மேலும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும், மாணவர்கள் என்றைக்கு வர வேண்டும், மாணவர்களை விடுதியில் தங்க வைக்க அனுமதிக்கப்படுமா என்பன போன்ற விவரங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் நமது சிறப்புப் பள்ளி மாணவர்களின் தேவைகளையும் நலன்களையும் கருத்தில் கொண்டு சில விதிவிலக்குகளையும் சிறப்பு வசதிகளையும் உரிய துறைகளிடம் முன்னதாகவே கேட்டுப் பெற வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
‘மாற்றுத்திறனாளி மாணவர்கள் தனிப்பட்ட சிறப்பு முறையில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்திப் பயின்று வருகின்றனர். எனவே மாணவர்களை வீட்டில் இருந்து பெற்றோர்கள் பயிற்றுவிப்பதோ அல்லது மாணவர்கள் பயின்று கொள்வதோ நடைமுறை சாத்தியம் அற்றது; தேர்வு நாட்களில் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சாத்தியம் அற்றது. எனவே மாணவர்களின் நலன் சார்ந்த தேவைகளுக்கான சில அனுமதிகளை துரித கதியில் உரிய துறைகளிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்’ என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்புத் தேவைகள் மற்றும்அவை சார்ந்த கோரிக்கைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை:
graphic பதிலி எழுத்தர்கள் உதவியுடன் தேர்வெழுதும் மாணவர்கள்
 1. தேர்வு தொடங்குவதற்குப் பத்து நாட்களுக்கு முன்னதாக, அதாவது மே மாதம் 20ஆம் தேதி முதல் தேர்வு எழுதும் மாணவர்களை விடுதியில் தங்க வைக்க அனுமதி பெற வேண்டும்.
2. தொலைவில் உள்ள மாணவர்களை அழைத்து வருவதற்கான வாகன வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அத்தோடு மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மெற்கொள்ளப்பட்டு, அவர்களைப் பள்ளிக்கு அழைத்துவர வேண்டும்.
3. அனைத்துத் தேர்வுகளும் நிறைவடையும் வரையில் மாணவர்கள் விடுதியில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும்.
4. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை, சுமார் 20க்கும் குறைவான அரசு மற்றும் அரசு உதவிபெறும் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகள் மூலம், எண்ணிக்கையில் 1000க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே எதிர்கொள்ளவிருப்பதால், மாணவர்களை தினமும் பரிசோதிக்க மருத்துவக் குழுவை ஏற்பாடு செய்து தர வேண்டும். ஏனெனில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எளிதாக நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
இவையனைத்தும் பள்ளிக் கல்வித் துறையின் நடைமுறைகளில் இல்லாமல் இருந்தாலும், அனுமதிக்கப்படாமல் இருந்தாலும் கூட சிறப்புப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு அனுமதியாக கட்டாயமாகப் பெறப்பட வேண்டும் என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அந்தக் கடிதத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றல் அடைவுகளை மதிப்பிட தேர்வுகள் அவசியமானவை என்றாலும், மதிப்பீட்டுக்குள்ளாகும் மாணவனின் மனநலமும், உடல்நலமும் பேணப்படுவது அதைவிட அவசியம் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும்.
 சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

நன்றி இந்து தமிழ்த்திசை: வழிகாட்டுதல்களை அமல்படுத்தாததால் பார்வையற்ற மாற்றுத்திறன் தேர்வர்கள் தவிப்பு


graphic தேர்வெழுதும் பார்வை மாற்றுத்திறனாளிகள்


மு.யுவராஜ்
சென்னை

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்தாத தால் பார்வையற்ற மாற்றுத்திற னாளி தேர்வர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, விஏஓ, ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகளை எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக எழுத்தர் நியமிக்கப்படுகிறார். தேர்வில் எழுத் தர் கேள்விகளை படித்துக் காட்டி தேர்வர் அளிக்கும் பதில்களை எழுதுவார்.

இந்தச் சூழலில், எழுத்தர் நிய மனத்தில் மத்திய அரசு விதித் துள்ள விதிமுறைகளை தமிழகத் தில் அமல்படுத்தக் கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடரப் பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தனி அறையில் தேர்வு
இந்த உத்தரவின் பேரில், கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தேர் வரையும், எழுத்தரையும் தேர்வுக்கு முன்பாக பயிற்சி எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும், தேர்வர் மற்றும் எழுத்தர் கூறு வதை பிறர் கேட்காத வகையில் தனி அறையில் தேர்வு நடத்த வேண்டும், எழுத்தர் தேர்வு எழுதும் பாடத் தில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும், தேர்வர், எழுத்தர் இடையேயான உரையாடல்கள் முழுவதும் பதிவு செய்யப்பட வேண்டும், எழுத்தர் குழுவை பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன.

இந்த வழிகாட்டுதல்கள் தேர்வு நடத்தும் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் வழிகாட்டுதல்கள் நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதனால், பார்வையற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

3 முறை படிப்பதால்...
இதுதொடர்பாக, தொடர்ந்து போட்டித் தேர்வுகளை எழுதி வரும் கரூரைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஜெயபால னிடம் கேட்டபோது, "போட்டித் தேர்வுகளில் எழுத்தர்கள் கேள் வியைப் படிக்கும்போது புரியும்வகையில் படிப்பதில்லை. ஒரு முறைக்கு மூன்று முறை படிக்கவேண்டியுள்ளதால் நேரம் அதிக மாக விரயமாகிறது.

நாங்கள் கூறும் பதிலை ‘டிக்’ செய்யாமல் கவனக்குறைவினால் வேறு பதிலை ‘டிக்’ செய்யும் நிகழ் வும் நடக்கிறது. இதுபோன்ற நேரங்களில் ஓஎம்ஆர் ஷீட்டில் பிளேடால் சிலர் சுரண்டிவிடுகின்றனர்.

சில தேர்வுகளில் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும்போது, ஒரு சில எழுத்தர்கள் "எல்லோரும் போகும் போது நான் மட்டும் உட்கார்ந்து இருக்கிறேன்" என்று புலம்புகின்ற னர்.

விரைந்து முடிக்க வேண்டும்
அது போன்ற நேரங்களில் மனதளவில் பாதிக்கப்பட்டு சரியான பதில் தெரிந்தாலும் விரைவாக தேர்வை முடிக்க வேண்டும் என்றுதான் தோன்றும். இதனால், பல முறை தேர்வை சரியாக எதிர் கொள்ள முடியாமல் தவித்து உள்ளேன். பயிற்சி பெற்ற எழுத்தர்கள் நியமிக்கப்படாத காரணத்தால்தான் இந்தச் சிக்கல்கள் ஏற்படுகின்றன" என்றார்.

திருவண்ணாமலை மாவட்டத் தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சிவக் குமார் கூறும்போது, "கணிதம், கணக்கு பதிவியல் தேர்வுகளுக்கு வரும் எழுத்தர்கள் அந்தப் பாடத் தில் நிபுணத்துவம் பெறாத காரணத் தால் பார்முலா, கட்டம் போட்டு பிரித்து எழுத வேண்டியதை கூட வார்த்தைகளாக எழுதிவிடுகின் றனர். இதனால், மதிப்பெண் பறி போகிறது. எழுத்தர், தேர்வரின் உரையாடல் பதிவு செய்யப்படுவதில்லை. இதனால், தேர்வர் கூறும் பதிலைத்தான் எழுத்தர் எழுதினாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

கணினி பற்றிய புரிதல்
எனவே, தேர்வுக்கு வரும் எழுத்தர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கணினி மூலம் நடைபெறும் தேர்வுகளுக்கு கணினி பற்றிய புரிதல் இருப்பவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின் பேரில் உருவாக்கப் பட்ட 18 வழிகாட்டுதல்களை உட னடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றார்.தேர்வர், எழுத்தர் கூறுவதை பிறர் கேட்காத வகையில் தனி அறையில் தேர்வு நடத்த வேண்டும். எழுத்தர் தேர்வு எழுதும் பாடத்தில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
 

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்