முகப்பு

நன்றிகளும் வாழ்த்துகளும்

graphic தலைவர் சித்ரா
தலைவர் சித்ரா
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சிறப்புப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயின்றுவரும் 800க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுதும் பொருட்டு, அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்ல சிறப்பானதொரு முறையில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டதோடு, முதல்வரின் தேர்வு ரத்து என்கிற அறிவிப்பிற்குப்பிறகு அதே நடைமுறையைப் பின்பற்றி, சிறப்புப் பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பான முறையில் அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்த்திருக்கிறது தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.

எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்களே எனினும், மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்புத் தேவைகளைக் கணக்கில் கொண்டது பாராட்டுக்குரியது. நான்கைந்து மாணவர்களுக்காகவும் ஒரு பேருந்து பல மாவட்டங்கள் கடந்து சென்னை வந்ததை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கமும் இந்தக் கோரிக்கையினை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரிடம் எடுத்துச் சென்றதோடு, அதனைத் தொடர் வலியுறுத்தல்களால் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தமிழக அரசின் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து 49 வழித்தடங்கள் அடங்கிய வரைவைத் தயார் செய்தார்கள். அந்த வரைவிற்கு அப்படியே செயல் உருவம் கொடுத்ததில் முக்கியப் பங்காற்றியவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள்.
இந்த நிகழ்வு, மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், பொதுச்சமூகம் என அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்படுத்தியிருக்கிற நேர்மறை அதிர்வுகள் தொடர வேண்டும். இத்தகைய சிறப்பான ஏற்பாட்டில் பங்கேற்றுப் பணியாற்றிய அனைவருக்கும் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
சவால்முரசு: நமக்கான ஊடகம், - நமக்கு நாமே ஊடகம்

1 comment:

  1. தங்களைப்போன்ற இறக்க சிந்தனை கொண்டவர்கள் முயற்சியால் இந்த செயல் நடைபெற்றது என்றுதான் கூறவேண்டும் மென் மேலும் தங்கள் சேவை தொடரட்டும்

    ReplyDelete